தமிழகத்தில் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வக்ஃபு நிலங்களுக்கு உரிமை கோரி வருவாய்த் துறையினர் நோட்டீஸ் அனுப்புகின்றனர் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே குற்றம்சாட்டினார்.
திருச்சி மாவட்டம் திருச்செந்துறை சந்திரசேகர மவுலீஸ்வரர் கோயிலில் மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேற்று தரிசனம் செய்தார். பின்னர், அவர் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 1954-ல் பிரதமராக நேரு இருந்தபோது தான் வக்ஃபு சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மட்டுமே வக்ஃபு வாரியத்துக்கு இருந்தது. தற்போது, இந்தியாவில் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமாக 38 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அவை முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்கள் என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்து கோயில்கள், மடங்கள், விவசாயிகளின் நிலங்கள், பொதுமக்களின் நிலங்களை, அவர்களுக்கு சொந்தம் என்றால் எப்படி ஏற்பது?
குறிப்பாக, திருச்சி திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி கோயில் 1,300 ஆண்டுகளுக்கு முன் பராந்தக சோழனால் கட்டப்பட்டது. ஆனால், இந்தக் கோயில் உட்பட சுற்றியுள்ள இடங்களை வக்ஃபுக்கு சொந்தம் என்று கூறி, நோட்டீஸ் வழங்க அழுத்தம் கொடுக்கிறார்கள். திருச்செந்துறையில் உள்ள 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபோல பல இடங்களில் நடைபெறுகிறது. உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் இவ்வாறு நோட்டீஸ் கொடுப்பது இது நில பயங்கரவாதம்.
ஆனால், இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு இந்து கோயில் வருமானம் தேவை. இந்து கோயில்கள் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். கோயிலுக்கு சொந்தமாக நகைகளை உருக்கி, 500 கிலோ தங்கக் கட்டியை விற்க முயன்றனர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பின்னர், 200 கிலோ விற்பதாக சொல்கின்றனர்.
ராமேசுவரம் கபே வெடிகுண்டு சம்பவத்தில் தமிழர்கள் குற்றவாளிகள் என்று நான் சொல்லவில்லை. குற்றவாளிகள் பாகிஸ்தானில் இருந்து தமிழகம் வந்து பயிற்சி பெற்று, இங்கிருந்து பெங்களூர் வந்து குண்டு வைத்திருக்கிறார்கள் என்று தான் சொன்னேன். ஆனால், நான் தமிழர்களை பயங்கரவாதிகள் என்று கூறியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால், நான் மன்னிப்பு கேட்டேன். எல்லா மாநிலங்களிலும் தீவிரவாதம் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தீவிரவாத செயல்களை இங்குள்ள அரசு கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.