படக்குறிப்பு, உருகாத ஐஸ் க்ரீமை தயாரிக்கும் முயற்சிகள் உலகில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. கட்டுரை தகவல்
ஒரு கோடை நாளில் ஒரு கோன் ஐஸ் சாப்பிடுவது போன்று வேறு ஏதும் சந்தோசத்தை தரக்கூடுமா? ஆனால் அதே கோன் ஐஸ் வெயிலில் உருகி, வாயில் ருசிப்பதற்கு முன்பே விரல்களுக்கு இடையில் ஒழுகி கீழே விழுவதை போன்ற ஒரு துயரமும் உண்டா?
சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் உள்ள கனாசாவா ஐஸ் எனும் நிறுவனத்தின் ஐஸ் க்ரீம் குறித்த செய்திகள் வைரலாகின, காரணம் அந்த ஐஸ் க்ரீம் கடும் வெப்பத்திலும் உருகாமல் இருக்கக் கூடும்.
இந்த ஐஸ் க்ரீமை உருவாக்கிய விஞ்ஞானிகள் பாலிஃபெனால்ஸ் எனும் ஆண்டி- ஆக்சிடண்ட்கள் கொண்டு அதனை நிரப்பியிருந்தனர். இது நிறைய பழங்களில் இருக்கக் கூடியதாகும். இவற்றை ஐஸ் க்ரீமில் சேர்த்து உருவாக்கிய போது, பலரது ஆர்வத்தை தூண்டும் வகையில் ஐஸ் க்ரீம் திடமாக இருந்தது, விரல்களில் ஒழுகிச் செல்லும் திரவம் போன்ற எதுவும் அதில் இல்லை. எப்படி இது சாத்தியமானது?
ஐஸ் க்ரீம் ஏன் உருகுகிறது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஐஸ் க்ரீம் உருகாமல் இருப்பதை உறுதி செய்யும் அதே நேரம், அதன் இயல்பு தன்மையும் தக்க வைப்பது சவாலாக உள்ளது.
ஐஸ் க்ரீம் என்பது பிரதானமாக க்ரீம் மற்றும் சர்க்கரையைக் கொண்டதாகும். ஐஸ் க்ரீமை தயாரிக்கும் இயந்திரங்கள் அந்த சர்க்கரை பசையை குளிரூட்டப்பட்ட உருளையான பாத்திரத்தில் சுழற்றுகின்றன. அந்த பாத்திரத்தின் உள் ஒரு உறைந்த தோல் உருவாகும், அது அகண்ட கரண்டி கொண்டு உரித்து எடுக்கப்படும்.
இதனால் ஐஸ் க்ரீமில் சமமற்ற அளவிலான ஐஸ் கட்டிகள் உருவாவது தவிர்க்கப்படும். நீங்கள் கடையிலிருந்து ஐஸ் க்ரீம் வாங்கி வீட்டுக்கு வருவதற்குள் ஐஸ் க்ரீம் சில நேரங்களில் சமமற்ற அமைப்பை கொண்டிருப்பதற்கு இதுவே காரணமாகும்.
ஐஸ் க்ரீம் தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டு, விற்பனையகங்களின் குளிரூட்டிகளைச் சென்றடையும் முன்பான நெடும் பயணத்தில், சற்று வெப்பமடைந்து, உருகி, பிறகு மீண்டும் குளிரூட்டப்படுகிறது. இந்த போக்கில் அவற்றின் மீது சமமற்ற கட்டிகள் உருவாகிவிடும்.
ஐஸ் க்ரீமை அதன் முதல் குளிரூட்டியிலிருந்து, பூஜ்ஜியம் டிகிரிக்கு மேல் உள்ள வெப்பத்துக்கு மாற்றும் போது, இந்த பிரச்னை ஏற்படுவது வழக்கமாகும்.
ஐஸ் க்ரீம் இடம் மாற்றப்படும் போது உருகுவதை தவிர்ப்பதற்காக காரேகீனான் (ஒரு வித பாசியிலிருந்து கிடைப்பது) போன்ற பல்வேறு நிலைப்படுத்திகளை ஐஸ் க்ரீம் தயாரிப்பவர்கள் உபயோகப்பத்திவருகின்றனர்.
விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் உணவு விஞ்ஞானியும் தற்போது ஜெனரல் மில்ஸ் எனும் அமெரிக்க உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிபவருமான காமரோன் விக்ஸ், ஜப்பானின் உருகாத ஐஸ் க்ரீம் வீடியோவை பார்த்து பாலிஃபெனால்ஸ் எப்படி நிலைப்படுத்திகளாக செயல்பட முடிகிறது என்று வியந்தார்.
பாலிஃபெனால்ஸ் பொதுவாக ஆரோக்யத்தை ஊக்குவிக்கும் பண்புகளுக்காக அறியப்படுபவை.
டானிக் அமிலம் என்ற குறிப்பிட்ட பாலிஃபெனாலை அதிக அளவில் க்ரீம்களில் பயன்படுத்தி சோதித்துப் பார்த்தார் விக்ஸ். அவர் 0.75%, 1.5%, 3% என்ற விகிதத்தில் டானிக் அமிலம் கலந்து பரிசோதித்துப் பார்த்தார். டானிக் அமிலம் கூடுதலாக சேர்க்கும் போது ஐஸ் க்ரீம் கெட்டியாகி வருவதை கவனித்தார். ஐஸ் க்ரீமை 24 மணி நேரங்களுக்கு குளிர வைத்த பிறகு கவனித்த போது 3% டானிக் அமிலம் சேர்க்கப்பட்ட ஐஸ் க்ரீம் கத்தியால் வெட்டக் கூடியதாக இருந்தது, தலைகீழாக திருப்பிய போதும் குவளையிலிருந்து கீழே விழாமல் இருந்தது.
நுண்ணோக்கியை கொண்டு ஐஸ் கிரீமை பரிசோதித்த விக்ஸ், அதிக டானிக் அமில செறிவுகள் அதிக வேறுபடுத்தப்பட்ட கொழுப்பு உருண்டைகளை கொண்டிருப்பதை கவனித்தார்.
டானிக் அமிலம் ஐஸ் க்ரீமில் உள்ள புரதங்களுடன் சேர்ந்து கொழுப்பு உருண்டைகள் உருகுவதைத் தடுக்கும் வகையில் செயல்படுகிறது என்று அவரும் அவரது நண்பர்களும் ஊகித்தனர்.
உருகிய ஐஸ் க்ரீம் படிகங்களிலிருந்து வெளியாகும் கொழுப்புகள் பாலிஃபெனால் இருப்பதனால் அங்கேயே தங்கிவிடுகின்றன, எனவே தான் ஐஸ் க்ரீம் உருகுவது தடுக்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
உருகாத ஐஸ் க்ரீம் சாத்தியமாகுமா?
சில மணி நேரங்கள் ஆன போது விக்ஸ் மற்றொரு விசயத்தை கவனித்தார். இது போன்ற சோதனைகளில் தயாரிக்கப்பட்ட ஐஸ் க்ரீம் களி போன்ற திட்டத்தில் இருந்தது, எனினும் அதன் வடிவத்தில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. மேலும், நிச்சயமாக பாலிஃபெனால்கள் ஐஸ் க்ரீம்களை குளிர்ச்சியாக வைத்திருக்கவில்லை.
உருகாத ஐஸ் க்ரீம், ஆனால் களி போன்ற திட்டத்தில் வெப்பமடைந்து இருப்பதை நாம் யாரும் விரும்ப மாட்டோம்.
உணவுகளை பொருத்தவரை, சாப்பிடுபவரின் எதிர்ப்பார்ப்புகள் நாம் நினைப்பதை விட முக்கியமானதாகும். நீங்கள் வெண்ணிலா ஐஸ் க்ரீம் என்று நினைத்துக் கொண்டு வாயில் போடும் போது அது உருளை கிழங்கு மசியல் போல் இருந்தால் நினைத்துப் பாருங்கள் எப்படியிருக்கும் என்று.
ஒரு வேளை பாலிஃபெனால்கள் நன்கு அறியப்பட்ட நிலைப்படுத்திகளுடன் இணைந்து, ஐஸ் க்ரீம் நீண்ட தூரம் எடுத்து செல்லப்படும் போது, அது கிட்டத்தட்ட அதன் இயல்பான தன்மையில் இருக்க உதவலாம்.
ஆனால் வெப்பத்தை தாங்கவும், அதன் வடிவத்தை அப்படியே வைத்திருக்கவும் அதிக பாலிஃபெனால்கள் கொண்ட ஐஸ் க்ரீம்கள் உங்கள் அருகில் உள்ள கடைகளுக்கு வந்து சேருமா? காலம் தான் பதில் சொல்லும்.