• Mon. Apr 7th, 2025

24×7 Live News

Apdin News

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழக டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | Low pressure area: Heavy rain likely in delta districts of Tamil Nadu on Tuesday

Byadmin

Apr 7, 2025


சென்னை: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை உருவாகியுள்ளது என்றும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.7) காலை 8.30 மணி அளவில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது நாளை (ஏப்.8), வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், வடக்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் நிலவக்கூடும்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் வழியாக தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஏப்.7) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

ஏப்.8-ம் தேதி (நாளை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்.9 முதல் ஏப்.13-ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (ஏப்.7) முதல் ஏப்.11 வரை, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை (ஏப்.8) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளில், ஏப்.10 மற்றும் ஏப்.11ம் தேதிகளில், தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில், இன்று (ஏப்.7) அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை (ஏப்.8) தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.



By admin