15
சுடுமண்நாவலில் இருந்து பேய்க்கொம்பன் சிறுகதை நூல் வரையாக உற்சாகமான பயணத்தை மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டு எழுத்தாளர் இராஜலட்சுமி தன் படைப்புக்கள் குறித்து வணக்கம் இலண்டன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.
“சுடுமண் வெளிவந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது. இந்நாவல் வண்ணதாசன், சரவணன் மாணிக்க வாசகம், நாராயணி கண்ணகி, என். ஸ்ரீராம் உள்ளிட்ட பல முக்கிய எழுத்துலக ஆளுமைகளால் வாசிக்கப்பட்டு பெரிதளவு பாராட்டுகளையும், சிற்சில ஆலோசனைகளையும் பெற்றுத் தந்தது. கூடவே, உரத்த சிந்தனை சிறந்த நாவலாசிரியர் விருது- 2024; தேனி இலக்கிய மேடையின் புதுமைப்பித்தன் நினைவு படைப்புச் செம்மல் விருது – 2024 முதலான விருதுகளையும் பெற்றுத் தந்த படைப்பு. சுடுமண் எழுதும் போது நடுநாட்டுப் பகுதிகளான சேமகோட்டை, கருக்கை காட்டுப் பகுதி, மேலருங்குணம், கொடுமணல் ஏரிப்பாளையம், டேவிட் கோட்டை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று களப்பணி செய்ததை அனைவரும் சுட்டிக்காட்டிப் பாராட்டியது பெரும் ஊக்கம் தந்தது. அடுத்த படைப்பு, கேரள தேசத்தின் தொன்மையான யஷிகள் பற்றிய கதைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அடர்வனம் நாவல். அது கௌரா இலக்கிய விருது – 2025 க்குத் தேர்வாகியது.
அடுத்த படைப்பு, தேநீர் பதிப்பக நாவல் போட்டி 2025-ல் முதல் பரிசு வென்ற “வெண்மணல்பாலை” என்ற நாவல். இது இந்திய தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் வாழும் பெண்களின் வாதைகளை அணுக்கமாக பேசும் ஒரு படைப்பு. நான் வேலை நிமித்தமாக, பல வருடங்கள் தமிழகத்தின் பல ஊர்களிலும், வட இந்திய மாநிலங்களிலும் நான் வாழ்ந்த காலங்களில் சந்தித்த திடமான மனுஷிகளின் வாழ்விலிருந்து பெற்ற சாரத்தைக் கொண்டே இந்நாவலை எழுதி இருக்கிறேன். இம்மாத இறுதியில் வெளிவர உள்ளது.
இவ்வாண்டு. [2026] துவங்கியதும் முதல் படைப்பாக “பேய்க்கொம்பன்” சிறுகதை தொகுப்பு சென்னை புத்தக திருவிழாவில் வாசகசாலை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பன்னிரெண்டு கதைகளில் பெரும்பாலானவை இலக்கிய இதழ்களில் இடம் பெற்றவை.இது எனது முதல் சிறுகதை தொகுப்பு.”






நேர்கண்டவர் – பூங்குன்றன்