பட மூலாதாரம், AFP via Getty Images
இந்தியாவின் ஜென் ஸி (Gen Z) விசாலமானது, துருதுருவென இருப்பது மற்றும் அதிவேகமாக இணைக்கப்பட்ட ஒன்று. நாட்டின் மக்கள் தொகையில் கால்பங்காக இருக்கும் கிட்டத்தட்ட 25 வயதுக்குட்பட்ட 370 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தான் இவர்கள்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் அரசியல், ஊழல் மற்றும் சமத்துவமின்மை பற்றித் தொடர்ந்து அறிந்தே இருக்கிறார்கள்.
இருப்பினும், வீதியில் இறங்கிப் போராடுவது என்பது ஆபத்தானது மற்றும் தங்களுக்கு தொடர்பில்லாதது என அவர்கள் உணர்கிறார்கள்.
“தேச விரோதி” என்று முத்திரை குத்தப்படும் பயம், பிராந்திய மற்றும் சாதிப் பிளவுகள், பொருளாதார அழுத்தங்கள், மற்றும் தங்கள் செயல்களால் பெரிய அளவில் எந்தத் தாக்கமும் ஏற்படாது என்ற உணர்வு ஆகியவை அவர்களைத் தடுக்கின்றன.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளில், இதே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் – அதாவது 1997 மற்றும் 2012க்கு இடையில் பிறந்த ஜென் ஸி (Gen Z) தலைமுறை அண்மைக்காலத்தில் அமைதியாக இல்லை.
நேபாளத்தில், இளம் போராட்டக்காரர்கள் கடந்த மாதம் வெறும் 48 மணி நேரத்தில் ஒரு அரசாங்கத்தையே கவிழ்த்தனர்.
மடகாஸ்கரில், இளைஞர்கள் தலைமையிலான ஒரு இயக்கம் அதன் தலைவரைக் கவிழ்த்தது.
வேலைவாய்ப்புகள் குறித்து கவலையடைந்த இந்தோனீசியர்கள், உயரும் வாழ்க்கைச் செலவுகள், ஊழல் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டங்களுக்குப் பிறகு அரசிடம் இருந்து சலுகைகளைப் பெற முடிந்தது. வங்கதேசத்தில், வேலை ஒதுக்கீடு மற்றும் ஊழல் மீதான கோபம் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தது.
வேகமாக நகரும், பரவலாக்கப்பட்ட மற்றும் அரசியல் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் மீது கோபங்கொண்ட இந்த எழுச்சிகள் மறைகுறியாக்கப்பட்ட செயலிகள் (encrypted apps) மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, சமூக ஊடகங்களால் பெரிதாக்கப்படுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் காணப்பட்ட அறிகுறி?
இந்தியாவில், அதிருப்தியின் மங்கலான தீப்பொறிகள் காணப்படுகின்றன.
செப்டம்பரில், இமயமலைப் பகுதியான லடாக்கில், பிரதேசத்துக்குத் தனி மாநில அந்தஸ்து கோரிய போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வன்முறை மோதல்கள் நடந்தன.
இது குறித்துச் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், இந்தக் கலவரத்தை “நீண்ட காலமாக அடக்கப்பட்ட ஜென் ஸி-இன் கோபத்தின் அறிகுறி” என்று விவரித்தார்.
இந்த மனநிலை தேசிய அரசியலிலும் எதிரொலித்தது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலத்தில் பெரிய அளவிலான தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய பின்னர், “இளம் ஜென் ஸி வாக்காளர்கள் மோசடியைத் தடுத்து அரசியலமைப்பைக் காப்பாற்றுவார்கள்” என்று எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்தார்.
பிராந்தியக் கலவரங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, குறிப்பாக நேபாள எழுச்சிக்குப் பிறகு, தலைநகரில் இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்களை எதிர்கொள்வதற்கான தற்காலிகத் திட்டங்களைத் தயாரிக்குமாறு டெல்லி காவல்துறைத் தலைவர் படைகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைனில், விவாதம் தீவிரமாக உள்ளதுடன் ஆழமாகப் பிளவுபட்டுள்ளது.
ரெடிட் மற்றும் எக்ஸ் தளங்களில் சில பயனர்கள் இந்தியாவின் இளைஞர்களைத் தாய்நாட்டிலும் இதேபோன்ற போராட்டங்களை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
நேபாளத்தில் நடந்த குழப்பத்தின் வன்முறையை நினைவுபடுத்தும் மற்றவர்கள், தலைவர் இல்லாத கிளர்ச்சிகளை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கின்றனர்.
உண்மைச் சரிபார்ப்பு தளமான பூம்லைவ், இந்தத் தலைமுறைக்குள்ளேயே ஓர் “ஆன்லைன் போர்” நடப்பதாக விவரிக்கிறது.
ஒரு தரப்பு இந்த ஆர்ப்பாட்டங்களை நீதிக்கான சட்டரீதியான அழைப்புகள் என்று பார்க்கிறது; மற்றொன்று வெளிநாட்டுத் தலையீடு இருப்பதாகச் சந்தேகிக்கிறது.
பட மூலாதாரம், NurPhoto via Getty Images
இந்தியாவில் பிளவு
1970களின் நடுப்பகுதியில் நடந்த இந்திரா காந்திக்கு எதிரான போராட்டங்கள் முதல் சமீபத்திய கல்லூரி வளாக இயக்கங்கள் வரை, இந்தியாவின் மாணவர் செயல்பாடுகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
இருப்பினும், நேபாளம் அல்லது வங்கதேசத்தைப் போல மத்திய அரசைக் கவிழ்க்க முடியுமா என்பதில் நிபுணர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
அதற்கு ஒரு காரணம், இந்தியாவின் ஜென் ஸி பிளவுபட்டுள்ளது என்பதே. பிற நாடுகளில் இருக்கும் ஜென் ஸி இளைஞர்களைப் போலவே, பலரும் வேலைவாய்ப்பின்மை, ஊழல் மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றால் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆயினும், அவர்களின் கோபம் உள்ளூர் பிரச்னைகளைச் சுற்றியே எழுகிறது, இது ஒருங்கிணைந்த தேசிய இயக்கம் உருவாகுவதை சாத்தியமற்றதாக்குகிறது.
“எங்களை ஒன்றிணைக்கும் ஒற்றை சக்தியை என்னால் காணமுடியவில்லை,” என்கிறார் பிஹாரைச் சேர்ந்த 26 வயதான பத்திரிகையாளர் விபுல் குமார்.
“இந்தியாவில் அதிகாரம் நேபாளத்தை விட அதிகம் பரவலாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் கோபமும் அப்படித்தான். மத்திய அரசாங்கத்துக்குச் சவால் விட வேண்டும் என்று நான் விரும்பினாலும், பல இளைஞர்கள் அரசாங்க வேலைகளை மட்டுமே விரும்புகிறார்கள்.”
பட மூலாதாரம், Getty Images
ஜென் ஸி எழுச்சி எப்படிப்பட்டதாக இருக்கும்?
ஜென் ஸி புரட்சிக்கு இந்தியா ஒரு “வித்தியாசமான நாடாக” இருக்கும் என்று இளைஞர் கொள்கை மையத்தைச் சேர்ந்த சுதான்ஷு கௌஷிக் நம்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.
“வயது மட்டுமே வேறுபடுத்தும் ஒற்றைக் காரணி அல்ல. இந்தியாவில் இளைஞர்கள் பிராந்திய, மொழி மற்றும் சாதி அடையாளங்களுடன் வலுவாக இணைந்துள்ளனர். இது பெரும்பாலும் அவர்களை ஒருவருக்கொருவர் முரண்பட வைக்கிறது.
இந்தியாவில் ஒரு ஜென் ஸி எழுச்சி நடந்தால், அது தலித் ஜென் ஸி-ஆக இருக்குமா? அல்லது நகர்ப்புற அல்லது தமிழ் பேசும் ஜென் ஸியா? உண்மை என்னவென்றால், ஒன்றுடன் ஒன்று இணைந்த வெவ்வேறு நலன்களைக் கொண்ட பலதரப்பட்ட ஜென் ஸி சமூகங்கள் உள்ளன,” என்று இந்திய இளைஞர்களைப் பற்றிய புத்தகத்தின் ஆசிரியரும், இளைஞர் ஆர்வலருமான கௌஷிக் கூறுகிறார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் மற்றும் நகர உள்கட்டமைப்பு போன்ற பிரச்னைகளுக்காக ஒன்று திரளலாம்.
இந்தியாவின் படிநிலைச் சாதி அமைப்பால் ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட தலித் இளைஞர்கள் சாதி பாகுபாடு மற்றும் சமூக நீதிக்காகப் போராடலாம் மற்றும் தமிழ் பேசும் இளைஞர்கள் மொழி, பிராந்திய உரிமைகள் அல்லது உள்ளூர் மரபுகளுக்காகப் போராடலாம்.
மேலும், கிளர்ச்சிக்கான காரணங்கள் வேறுபடுகின்றன. குஜராத் மற்றும் ஹரியாணா மாநிலங்களில், இளம் உயர் சாதிச் சமூகங்கள் அதிக இட ஒதுக்கீடு கோரிப் போராடியுள்ளன. அதே சமயம், தமிழ்நாட்டில், பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கும் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இளைஞர்கள் வீதிகளில் இறங்கினர்.
பட மூலாதாரம், Getty Images
“தேச விரோதி” என்று முத்திரை
இந்த பிளவுகளுக்கு மேல் மற்றொரு தடை உள்ளது. “தேச விரோதி” என்று முத்திரை குத்தப்படும் பயம் மிகவும் விழிப்புணர்வுடனும் இணைப்பிலும் இருக்கும் இளைஞர்களைக் கூட வீதிக்கு வராமல் தடுக்கிறது என்கிறார் 23 வயதான அரசியல் அறிவியல் பட்டதாரி தைரியா செளத்ரி.
மாற்றுக் கருத்துடையவர்களை இழிவுபடுத்துவதற்காக இந்தியாவில் சில அரசியல்வாதிகள் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்களால் இந்தப் பதம் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு காலத்தில் அரசியல் விவாதங்களின் துடிப்பான மையங்களாக இருந்த நாட்டின் சிறந்த பல்கலைக்கழகங்களில் சில இப்போது போராட்டங்களைக் கட்டுப்படுத்துகின்றன அல்லது தடை செய்கின்றன.
“ஒரு காலத்தில் அரசு எதிர்ப்புச் செயல்பாடுகளின் மையங்களாக இருந்த இந்த நிறுவனங்கள் அந்த உணர்வை இழந்துவிட்டன,” என்கிறார் 23 வயதான ஆய்வாளர் ஹஜாரா நஜீப்.
இளைஞர்களின் ஆற்றல் நீடித்திருப்பதை புரிந்திருக்கும் அரசு, இந்தியாவின் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை கொள்கையாக மாற்றுவதாகவும், திட்டங்கள் அவர்களை சென்றடைவதன் மூலம் அவர்களின் ஆற்றலைச் சரியான வழியில் செலுத்த முயல்வதாகவும் கூறுகிறது.
இருப்பினும், பொருளாதார அழுத்தங்கள் பலரது வாழ்க்கைத் தேர்வுகளை வடிவமைக்கின்றன.
“பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்தியா பொதுவாக உலகை விடச் சற்று சிறப்பாகச் செயல்படுகிறது. இருப்பினும், வேலைவாய்ப்பின்மை கவலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது… வெளிநாடுகளுக்குக் குடியேறுவது ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.” என்கிறார் கௌஷிக்
இந்தியாவின் இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பதில்லை. 2024 தேர்தலுக்கு 18 வயதுடையவர்களில் 38% பேர் மட்டுமே வாக்காளர்களாகப் பதிவு செய்தனர். ஒரு குடிமக்கள் ஊடக தளத்தின் புதிய ஆய்வு, பாரம்பரிய அரசியலில் நம்பிக்கை குறைந்து வருவதைக் கண்டறிந்தது. அதாவது, இளம் இந்தியர்களில் 29% பேர் அதை முற்றிலுமாகத் தவிர்க்கிறார்கள்.
சமீபத்திய தசாப்தங்களில், பல இளம் இந்தியர்கள் மதம், கலாசாரம் மற்றும் மொழி சார்ந்த அடையாளங்கள் மூலம் தங்களை அதிகமாக வரையறுத்துக் கொள்கிறார்கள் என்று கௌஷிக் குறிப்பிடுகிறார்.
சிஎஸ்டிஎஸ் லோக்நிதியின் தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வு, ஆளும் பாரதிய ஜனதா கட்சி 2019ஆம் ஆண்டு பெற்ற 40% ஆதரவில் சிறிய சரிவுடன் 2024-லும் இளைஞர்களின் ஆதரவை வலுவாக பெற்றிருந்தது என்பதை கண்டறிந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
உறுதியாகச் சொல்வதானால், அவர்கள் பதின்ம வயதினராக இருந்தபோது பார்த்த ஒரு தசாப்த கால வீதி இயக்கங்களால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவின் ஜென்ஸியின் அரசியல் விழிப்புணர்வின் வேர்கள் ஆழமாகப் பதிந்துள்ளன.
அவர்களில் மூத்தவர்கள், அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் முதல் 2012 டெல்லி கூட்டுப் பாலியல் வல்லுறவு மீதான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வரை 2010களின் பெரிய வீதி இயக்கங்களைக் பார்த்து வளர்ந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
விளைவுகள் இல்லாமல் இல்லை
பின்னர், மாணவர்கள் 2019இல் காஷ்மீரின் தன்னாட்சி ரத்து, விவசாய சீர்திருத்தச் சட்டங்கள் மற்றும் மிக முக்கியமாக, சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் பெரிய வளாக மற்றும் வீதிப் போராட்டங்களை நடத்தினர்.
ஜென் ஸியால் பெரிதும் நடத்தப்பட்ட சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் மிக முக்கியமானவையாக இருந்தன – ஆனால் அவை விளைவுகள் இல்லாமல் இல்லை.
2019இல், டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டங்கள் நடந்தபோது, காவல்துறையினர் வளாகத்திற்குள் நுழைந்த பிறகு வன்முறை மோதல்கள் நடந்தன. மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டார். அவர் 2019 டெல்லி கலவரங்களில் ஒரு “முக்கிய சதிகாரர்” என்ற குற்றச்சாட்டை மறுத்தாலும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் சிறையில் இருக்கிறார்.
“போராட்டத்தை பற்றி யாருக்கும் சிந்திக்கவே தோன்றாத அளவு அரசு போராட்டத்தை தீமையானதாக சித்தரித்திருக்கிறது…” என்கிறார் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் யூத் ஃபெலோ (Youth Fellow) திட்டத்தில் பணியாற்றும் 26 வயதான ஜதின் ஜா.
சட்டம் ஒழுங்கை மட்டுமே பாதுகாப்பதாகக் கூறும் அரசு அதே நேரம் இந்தப் போராட்டங்களை வெளி சக்திகளாலோ அல்லது “தேச விரோத” சக்திகளாலோ தூண்டப்பட்டதாகச் சித்தரிக்கிறது.

இந்த அமைதியான ஈடுபாடு ஒரு ஆழமான தலைமுறைப் பண்பையும் பிரதிபலிக்கலாம்.
சமூகவியலாளர் தீபங்கர் குப்தா குறிப்பிட்டது போல், இளைஞர்களின் ஆற்றல் நிலையற்றது, ஒவ்வொரு தலைமுறையும் பழைய காரணங்களை மரபுரிமையாகப் பெறுவதற்குப் பதிலாக தங்கள் சொந்தக் காரணங்களை உருவாக்குகிறது.
சமீபத்திய வரலாறு ஒரு வடிவத்தைக் காட்டுகிறது: இளைஞர்கள் ஆட்சிகளைக் கவிழ்க்க முடியும், ஆனால் அரபு வசந்தம் முதல் வங்கதேசம் அல்லது நேபாளம் வரை நீடித்த மாற்றம் அல்லது இளைஞர்களுக்கான மேம்பட்ட வாய்ப்புகள் பெரும்பாலும் மழுப்பலாகவே இருக்கின்றன.
இப்போதைக்கு, இந்தியாவின் ஜென் ஸி கிளர்ச்சி செய்வதை விட அதிகம் உற்று நோக்குபவர்களாக இருப்பதாகவே தோன்றுகிறது – அவர்களின் மாற்றுக்கருத்து அடக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் அபிலாஷைகள் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாக உள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு