பட மூலாதாரம், Getty Images
“உனக்கு அமைதி வேண்டுமென்றால், போருக்குத் தயாராகு” என்ற சொலவடை குறைந்தபட்சம் சுவிட்சர்லாந்திற்கு பொருந்தும்.
நினைத்துப் பார்க்க முடியாத ஆழத்திற்கு தோண்டப்பட்ட சுவிஸ் ஆல்ப்ஸின் கடினமான பாறைகளில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்திற்கான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆல்ப்ஸ் மலையானது, நூற்றுக்கணக்கான அணுசக்தி எதிர்ப்பு பதுங்குக் குழிகளைக் கொண்ட சிக்கலான வலையமைப்பை தன்னில் கொண்டுள்ளது.
சுரங்கப்பாதைகளின் நுழைவாயில்கள் மேடுகளின் கீழ், காட்டில் சிறிய கதவுகளுக்குப் பின்னால், அல்லது வெளிப்புறத்தில் வீடுகள் போல் தோற்றமளிக்கும் கட்டடங்களின் கீழ் மறைந்துள்ளன. உண்மையில் அவை இரண்டு மீட்டர் உயர கான்கிரீட் சுவர்களையும், துப்பாக்கியை பொருத்துவதற்கான துளைகளைக் கொண்ட ஜன்னல்களையும் கொண்ட சுரங்கப்பாதைகளாகும்.
8.8 மில்லியன் மக்கள்தொகைக் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் 370,000 க்கும் மேற்பட்ட அணுசக்தி தங்குமிடங்கள் இருப்பதால், உலகிலேயே அதிக தனிநபர் பதுங்கிடங்கள் கொண்ட நாடு என்ற பெயரைப் பெற்றுத்தந்துள்ளது. உண்மையில் மக்களை விட அதிக தங்குமிடங்கள் இருப்பதை சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் உட்பட நாட்டில் இருக்கும் அனைவருக்கும், தங்கள் சொந்த நாட்டிலோ அல்லது அண்டை நாட்டிலோ ஆயுத மோதல் அல்லது அணுசக்தி பேரழிவு ஏற்பட்டால், உத்தரவாதமான படுக்கை வசதி இருக்கவேண்டும் என சுவிட்சர்லாந்து நாட்டின் 1963ஆம் ஆண்டு சட்டம் கூறுகிறது.
ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் ஒரு சதுர மீட்டர் இடம் இருக்க வேண்டும். அத்துடன், ஒருவரின் வீட்டிலிருந்து அதிகபட்சமாக 30 நிமிட நடைப்பயணத் தூரத்தில் பதுங்கிடங்கள் இருக்கவேண்டும்.
அதுவே மலைப்பகுதிகளாக இருந்தால் 60 நிமிட நடைப்பயணத்தில் பாதுகாப்பிடம் அமைந்திருக்க வேண்டும்.அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களும் தங்கள் வீடுகளில் தங்குமிடங்களைக் கட்டி அவற்றைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
“பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த பதுங்கு குழிகளை உள்ளடக்கிய கட்டடங்களில் வசிக்கின்றனர். மக்கள் வசிக்கும் கட்டடத்தில் தங்குமிடம் இல்லையென்றால், பொதுவான கட்டடங்களில் அவை இருக்கும்,” என்று சிவில் பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகம் கூறுகிறது.
ஆயுத மோதல்களின்போது பயன்படுத்துவதற்காகவே தங்குமிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை நவீன ஆயுதங்களால் ஏற்படும் தாக்குதல்களையும் சமாளிப்பதாக இருக்கும். அவை அணுஆயுதம், உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்கள் போன்ற அபாயகரமான பொருட்களுக்கு எதிராகவும், வழக்கமான ஆயுதங்களுக்கு எதிராகவும் பாதுகாப்பை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டும்.
சுவிட்சர்லாந்தில் பதுங்கிடக் கலாசாரம் என்பது, ராணுவத்தை விட, சிவில் மற்றும் குடிமக்கள் பாதுகாப்பிற்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த தங்குமிடத்தின் திடமான வெளிப்புற ஓடு, சதுர மீட்டர் ஒன்றுக்கு குறைந்தது 10 டன் அழுத்தத்தை தாங்கக்கூடியது, அதாவது ஒரு கட்டடம் இடிந்து விழுந்தாலும் அதை தாங்கக்கூடியதாக பதுங்கிடம் இருக்கும்” என்று சிவில் பாதுகாப்புத்துறை விளக்குகிறது.
உதாரணமாக, ஒரு பூகம்பம் நேரிட்டால், இந்த தங்குமிடங்கள் மக்களுக்கான அவசரகால புகலிடமாக இருக்கும், அவற்றில் பொருத்தப்பட்டுள்ள ஃபில்டர்கள் மாசுபட்ட வெளிப்புறக் காற்றை சுத்திகரிப்பதால், உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
“தயார்நிலையில் இருப்பது நல்லது”
“அணு ஆயுதத் தாக்குதல் அல்லது பேரழிவு ஏற்பட்டால் அனைவரும் பாதுகாப்பாக தங்க ஓர் இடம் இருக்கிறது என்பது, என்னை பாதுகாப்பாக உணர வைக்கிறது. சுவிட்சர்லாந்திலோ அல்லது அண்டை நாடுகளிலோ போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தோன்றவில்லை. இருப்பினும், நாம் தயாராக இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்,” என்று ஜெர்மனி மற்றும் பிரான்சின் எல்லையில் உள்ள பாசல் நகரத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் ஸ்டாட்லர் என்பவர் பிபிசியிடம் கூறினார்.
ஆனால், தற்போது ஏதாவது நடந்தால், எந்த தங்குமிடத்திற்கு செல்ல வேண்டும் என்பது தனக்குத் தெரியாது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.
உண்மையில், தங்குமிடத்திற்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பம் வந்தால், அப்போது எங்கு செல்ல வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டால் போதும் என்று ஃபெடரல் சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் துணை இயக்குநர் டேனியல் ஜோர்டி கூறுகிறார்.
“ஒருவர் செல்ல வேண்டிய பதுங்கு குழி என்பது, அவர்களின் முகவரியுடன் தொடர்புடையது. ஆனால், குடும்பங்கள் அவ்வப்போது வீடுகளை மாற்றுவது அல்லது இடம்பெயர்வது என்பது இயல்பானது. எனவே, அவர்களின் தங்குமிடம் எங்கே என்று முன்கூட்டியே தெரிந்துகொள்வது குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும். தேவைப்படும்போது மட்டுமே இதைத் தெரிவிக்க வேண்டும் என்பதே எங்கள் பரிந்துரை” என்கிறார் ஜோர்டி.
சுவிட்சர்லாந்தின் பதுங்கிட கலாசார வலையமைப்பு இரண்டாம் உலகப் போருக்கு முந்தையது. அன்றைய காலகட்டத்தில், ஹிட்லரின் நாஜி ஜெர்மனி, பெனிட்டோ முசோலினியின் பாசிச இத்தாலி மற்றும் நடுநிலையாக இருக்க வேண்டும் என்ற அதன் தனிப்பட்ட சொந்த விருப்பத்திற்கு இடையில் சுவிட்சர்லாந்து சிக்கிக் கொண்டது. 1815 முதல் வெளிநாட்டுப் போர்களை சுவிட்சர்லாந்து தவிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பனிப்போர் காலமானது, பதுங்கிட வசதிகளை பொதுமக்கள், குறிப்பாக தனியார் நிறுவனங்கள் கட்டுவதற்கு அரசு ஊக்கமளித்தது. இந்தக் கட்டுமானங்கள் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ் பெற வேண்டும்.
தற்போது, பதுங்குக் குழிகள், தற்காலிக கிடங்குகளாகவோ, நெரிசலான சேமிப்பு அறைகளாகவோ அல்லது மதுபான அறைகளாகவோ மாறிவிட்டன. அவற்றில் சில அருங்காட்சியகங்கள், ஹோட்டல்கள் அல்லது உணவகங்களாகிவிட்டன.
“பதுங்கிடங்களின் கட்டமைப்பை மாற்றாமல் இடத்தைப் பயன்படுத்துவதே இந்த மாற்றத்திற்கான அடிப்படை யோசனையாகும். தேவைப்படும்போது, பதுங்கிடங்களை அதன் அசல் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் விதமாக மக்கள் மாற்றியமைத்துள்ளனர். தற்போது புழங்கும் இடத்தை, ஒரு பதுங்கு குழியாக மாற்றியமைக்க இரண்டு நாட்கள் அவகாசம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று சிவில் பாதுகாப்புக்கான மத்திய அலுவலகத்தின் துணை இயக்குநர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
சுமார் 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தங்குமிடங்கள்
பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத பதுங்குக் குழிகள் மோசமான நிலையில் உள்ளன, ஆனால் அவை அனைத்தும் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு, அனைத்தும் சரியாக இருப்பதாக சான்றிதழைப் பெற வேண்டும் அல்லது அதைச் சரிசெய்ய பணம் செலுத்த வேண்டும்.
“இதில் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை என்று தோன்றுகிறது. போர் ஆயுதங்களின் பரிணாமம் தற்போது மாறிவிட்டதால், சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடந்தால், உயிரிழப்புகள் பெருமளவில் ஏற்படக்கூடிய நிலை வந்துவிட்டது,” என்று சூரிச்சில் பல ஆண்டுகளாக வசித்து வரும் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த வழக்கறிஞர் யூஜெனியோ கரிடோ கூறுகிறார்.
“50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தங்குமிடங்கள் இன்றைய நவீன ஆயுதங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புக் கொடுக்குமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறுகிறார்.
தற்போது, “உலகளாவிய பாதுகாப்பு நிலைமை மாறி வருவதால்,” சுவிஸ் அரசாங்கம் பதுங்கு குழிகளை மேம்படுத்த விரும்புகிறது, அத்துடன் அவசரநிலை ஏற்பட்டால் பதுங்குக் குழிகள் செயல்படுவதையும், பயன்படுத்தத் தயாராக இருப்பதையும் உறுதிசெய்வதற்காக அவற்றை நவீனமயமாக்க 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
தங்குமிட மேம்பாடுகள் செய்யப்படுவது, போருக்கான தயாரிப்புகள் அல்ல, மாறாக பொதுப் பாதுகாப்பிற்கான முதலீடு என்று அதிகாரிகள் விளக்குகின்றனர்.
தாக்குதல் ஏதேனும் நடந்தால் தான் எந்த பதுங்குக் குழிக்கு செல்லவேண்டும்? அது எங்கே இருக்கிறது என்பதும் தெரியவில்லை என்று சூரிச்சில் வசிக்கும் இசபெல் கூறுகிறார். இருப்பினும், அப்படி ஒன்று இருப்பதே தனக்கு “மன அமைதியை” அளிப்பதாக பிபிசி முண்டோவிடம் அவர் தெரிவித்தார்.
“அணுசக்தி பேரழிவு அல்லது மோதல் போன்ற எந்தவொரு அவசரநிலையில் இருந்தும் மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த நடவடிக்கையாக இதை பார்க்கிறேன்; என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாக்க ஒரு இடம் இருப்பது எனக்கு மன அமைதியைத் தருகிறது.”
“உலகம் போகும் போக்கில், எதையும் நிராகரிக்க முடியாது, ஆனால் சுவிட்சர்லாந்து அதன் நடுநிலையைப் பேணி, தனது குடிமக்களுக்கு ஒரு பாதுகாப்பான நாடாகத் தொடரும், தேவைப்படுபவர்களுக்கு தங்குமிடம் வழங்கும் என நம்புகிறேன்,” என்று சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய வரவேற்பு மற்றும் நடுநிலைமை உணர்வை இசபெல் குறிப்பிடுகிறார்.
ஹிட்லரின் நாஜி ஜெர்மனியிலிருந்து தப்பி ஓடிய ஆயிரக்கணக்கான யூதர்களை சுவிட்சர்லாந்து வரவேற்றது என்பது வரலாறு.
ஆனால் ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை ஏற்றுக்கொள்வதற்கான சுவிஸ் அரசாங்கத்தின் முடிவு, நாட்டின் நீண்டகால அணிசேரா நிலைப்பாடு மற்றும் பொது அணுகுமுறையிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறித்தது.
அதிகரித்த ஆர்வம்
உள்ளூர் ஊடகங்களின்படி, மோதல் தொடங்கியதிலிருந்து பதுங்குக் குழி கட்டுமானத்தில் நிபுணத்துவம் பெற்ற சுவிஸ் நிறுவனங்களிடம் கட்டுமானம் தொடர்பான விசாரணைகள் மற்றும் கோரிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக தெரிகிறது. எடுத்துக்காட்டாக, ஆடம்பர தங்குமிடங்களைக் கட்டும் ஒப்பிடம் பங்கர்ஸ் நிறுவனம், சமீபத்திய மாதங்களில் அதன் தயாரிப்புகள் குறித்து விசாரிப்பவர்களின் எண்ணிக்கையில் “நிலையான அதிகரிப்பு” இருப்பதாகப் பதிவு செய்துள்ளது.
அத்துடன், மெங்கு ஏஜி மற்றும் லூனோர் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள பதுங்குக் குழிகளைப் புதுப்பிக்க அல்லது அவற்றின் செயல்பாட்டைச் சரிபார்க்க சோதனைகளை சந்தித்துள்ளன, அவற்றில் பல 1960கள் மற்றும் 1980களுக்கு முந்தையவை மற்றும் அவசர பராமரிப்பு தேவைப்படுபவை ஆகும்.
“ஆம், யுக்ரேனில் நடந்த போருக்குப் பிறகு, தங்குமிடங்கள் தயாராக இருப்பதையும், மக்கள் அவற்றை அணுகுவதையும் உறுதி செய்வதற்காக, மாகாணங்களிலிருந்தும், பொதுமக்களிடம் இருந்தும் பல கேள்விகள் வந்துள்ளன” என்று சிவில் பாதுகாப்பைச் சேர்ந்த டேனியல் ஜோர்டி உறுதிப்படுத்துகிறார்.
“எனது பதுங்குக் குழி எங்கே?” “எனக்கு ஒன்று இருக்கிறதா?” “அது இன்னும் அப்படியே இருக்கிறதா?” “என்னுடையதை எப்படி சரிசெய்வது?” போன்ற கேள்விகள் சுவிஸ் மக்களிடையே அடிக்கடி எழுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
பல ஆண்டுகளாக, சுவிட்சர்லாந்து “peace dividend” என்று அழைக்கப்படும் அமைதி ஈவுத்தொகையை நம்பியிருந்தது, இது அதன் தங்குமிடங்கள் மோசமடைய அல்லது கைவிடப்படுவதற்கு வழிவகுத்தது.
“இந்த ஈவுத்தொகை என்பது, போர் அல்லது மோதல்கள் முடிவடைந்த பிறகு பாதுகாப்பு செலவினங்களில் ஏற்படும் குறைப்பால் ஏற்படும் பொருளாதார நன்மைகள் ஆகும். சமீபத்திய தசாப்தங்களில் பாதுகாப்பு செலவினங்கள் செய்யப்படவில்லை, ஏனெனில், பனிப்போர் முடிந்த பிறகு, போரினால் அல்லது மக்களுக்கான உடனடி அபாயங்கள் குறித்த எந்த முகாந்திரமும் இல்லை என்ற நிலையில் அமைதி ஈவுத்தொகை சுவிட்சர்லாந்திடம் இல்லை” என்று எசேட்ஜியோ நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர், பேராசிரியர் ஜுவான் மொஸ்கோசோ டெல் பிராடோ விளக்குகிறார்.
யுக்ரேன் படையெடுப்பு, ஜபோரிஷியா அணுமின் நிலையம் போன்ற முக்கியமான அணுசக்தி உள்கட்டமைப்பை அச்சுறுத்தியதாக ஜுவான் நினைவுகூர்ந்தார். வெடிப்பு அல்லது தாக்குதல் ஏற்பட்டால், செர்னோபிலில் நடந்தது போல, கதிரியக்க மாசுபாடு மத்திய ஐரோப்பாவை பாதிக்கலாம்.
சில ஐரோப்பியப் பகுதியிலிருந்து தனது ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததும், மேற்கு ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அதன் அர்ப்பணிப்பும் சுவிட்சர்லாந்தை பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
வெளிநாட்டு மோதல்களுக்கு இடையில் சிக்கிய ஒரு பகுதி
“நீண்ட காலமாக, எதிரெதிர் நாடுகள் அல்லது முகாம்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு பிரதேசமாகவே சுவிட்சர்லாந்து இருந்தது. அந்த நிலைமை பல நூற்றாண்டுகளாக நீடித்தது.
பனிப்போர் முடிந்ததிலிருந்து, கண்டத்திற்குள் அமைதி மற்றும் நிலைத்தன்மை கொண்ட ஒரு தீவாகவே சுவிட்சர்லாந்து தோன்றியது, ஆனால் அந்த சீரான நிலைத்தன்மை யுக்ரேனில் நடந்த போரால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது,” என்று மொஸ்கோசோ டெல் பிராடோ கூறுகிறார்.
போரின் விளைவு இன்னும் யுக்ரேனில் வெளிப்படையாக தெரியாததால், பால்டிக் நாடுகள், பின்லாந்து, நோர்வே, ஸ்வீடன் போன்ற பிற நாடுகளும் இதேபோன்ற வழிகளில் எதிர்வினையாற்றியுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு மற்றும் ஆயுதங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ள நேரத்தில், சுவிட்சர்லாந்து கடந்த நூற்றாண்டில் ஆயுத மோதல்களுக்கு வெளியே இருக்க அனுமதித்த ஒரு பழைய பாதுகாப்பு அமைப்பை மீண்டும் செயல்படுத்தியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு