பட மூலாதாரம், Getty Images
பலருக்கும் பாம்புகள் என்றால் பயம்.
அவற்றின் பற்களில் உள்ள விஷம், திடீரென தாக்கும் தன்மை, “ஸ்…ஸ்…” என அவை சீறும் முறை போன்றவற்றை இந்த பயத்திற்கான காரணங்களாகக் கூறலாம். ஆனால் அனைத்து பாம்புகளும் நச்சுத்தன்மை கொண்டவை அல்ல. ஒரு சில பாம்புகள் மட்டுமே ஆபத்தானவை.
பல்லுயிர் பாதுகாப்பில் பாம்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பாம்புகளால் மிக வேகமாகச் செல்ல முடியும். கருப்பு பைத்தான் ஒரு மணி நேரத்தில் 19 கிலோமீட்டர் வேகத்தை அடைகிறது.
பாம்புகள் உணவை மென்று சாப்பிடுவதில்லை. இரையை முழுவதுமாக விழுங்கிவிட்டு மெதுவாக ஜீரணிக்கின்றன. சில வகை பாம்புகள் முதலை போன்ற பெரிய உயிரினத்தையும் விழுங்கி ஜீரணிக்கும் திறன் கொண்டவை.
உலகளவில் 4,000-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. அவற்றில் 600 இனங்கள் நச்சுத்தன்மை கொண்டவை.
அதிக ஆபத்தான நச்சுப்பாம்பான சுருட்டை விரியன் (Saw-scaled Viper) இது மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இந்தப் பாம்பு கடியால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 60,000 பேர் மரணமடைவதாக, ‘ப்ரெண்ட்ஸ் ஆப் ஸ்னேக்ஸ் சொசைட்டி’ அமைப்பின் பொதுச் செயலாளர் அவிநாஷ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இது அதிக விஷத் தன்மை கொண்ட பாம்புகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
பட மூலாதாரம், Roger Hamling
பாம்புகளின் எண்ணிக்கையை எப்படிக் கணக்கிடுவது?
பாம்புகள் இயல்பிலேயே தனித்து வாழும் உயிரினங்கள் என்பதால், அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம்.
உலகில் உள்ள பாம்புகளின் எண்ணிக்கை தெளிவாக இல்லை என்றாலும், கிடைக்கக்கூடிய சில தரவுகளின் அடிப்படையில் எந்த நாடுகளில் அதிக பாம்பு இனங்கள் உள்ளன என்பது குறித்த புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.
மற்ற பாலூட்டிகள் மற்றும் பறவைகளைப் போலல்லாமல், காடுகள் நிறைந்த பகுதிகளில் பாம்புகளை எண்ணுவது கடினம்.
ஹெர்பெட்டாலஜிஸ்டுகள் (நீர், நில வாழ்வன மற்றும் ஊர்வனவற்றைப் பற்றி ஆய்வு செய்யும் உயிரியலாளர்கள்) கள ஆய்வுகள் மற்றும் பல்லுயிர் தொகுப்புகளைப் பயன்படுத்தி பாம்புகளின் எண்ணிக்கையைக் மதிப்பிடுகின்றனர்.
இவை தவிர, அவர்கள் பல்வேறு உயிரினங்கள் எவ்வாறு பரவியுள்ளன என்பது தொடர்பான வரைபடங்கள், உள்ளூர்வாசிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் பாம்புக்கடி சம்பவங்களின் எண்ணிக்கை போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர்.
மெக்சிகோ
மெக்சிகோவில் மட்டும் 438 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. அங்கு அதிக பாம்புகள் வசிக்கும் பகுதிகளில், ஒவ்வொரு பத்து அடி தூரத்திற்கும் ஒரு பாம்பு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
மெக்சிகோவில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ராட்டில்ஸ்நேக் இனங்கள் உள்ளன.
மெக்சிகோவின் கடலோர சதுப்புநில காடுகள், அடர்ந்த காடுகள், வறண்ட பீடபூமிகள் மற்றும் பாலைவன சமவெளிகள் ஆகியவை பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக அமைகின்றன.
மெக்சிகோவில் பாம்புகள் இல்லாத பகுதி என எதுவும் இல்லை.
மெக்சிகோவின் 32 மாநிலங்களில் எங்கு சென்றாலும் பாம்புகளைக் காணலாம்.
அங்கு பாம்புகள் அதிகமாக இருப்பதற்குக் காரணம், சாதகமான காலநிலையும் உணவு பரவலாகக் கிடைப்பதும் தான்.
மெக்சிகோவின் மேற்கு கடற்கரையில் காணப்படும் குரோட்டலஸ் பசிலிஸ்கஸ் என்ற ராட்டில்ஸ்னேக், உலகின் மிக நீளமான பாம்புகளில் ஒன்றாகும், இது ஆறு அடி வரை நீளம் கொண்டது.
மெக்சிகோவில் வேட்டைக்காரர்களிடமிருந்து பாம்புகளைப் பாதுகாக்க சிறப்புச் சட்டங்கள் உள்ளன.
பட மூலாதாரம், Sylvain CORDIER
பிரேசில்
அமேசான் மழைக்காடு இருப்பதால் பிரேசில் இந்த பட்டியலில் இருப்பது ஆச்சரியமளிக்கும் விஷயமல்ல.
பிரேசிலில் 420 வகையான பாம்புகள் உள்ளன. அமேசான் மழைக்காடுகள் உலகிலேயே பாம்புகள் மிகப்பெரிய அளவில் இனப்பெருக்கம் செய்யும் இடமாகக் கருதப்படுகின்றது.
இந்தக் காடுகள் பல ஆண்டுகளாக பல்வேறு உயிரினங்களுக்கு தாயகமாக இருந்து வருகின்றன.
பிரேசிலில் 30 வகையான விஷ பாம்புகள் உள்ளன, அவற்றில் எரித்ரோலாம்ப்ரஸ் இனமும் ஒன்று, இது இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு உடல் நிறங்கள் மற்றும் லேசான விஷம் கொண்ட நீண்ட, மெல்லிய பாம்பாக அடையாளம் காணப்படுகின்றன.
பிரேசிலில் நகரங்களிலும் கூட பாம்புகளைக் காண முடியும்.
தரையில் ப்லைன்ட் ஸ்நேக் வகைகளும், மரங்களில் கிளிப் பாம்புகளும் (parrot snake), கூரைகளில் எலிப் பாம்புகளும் (rat snake) இருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.
உலகின் இரண்டாவது நீளமான பாம்பாக அங்கீகரிக்கப்பட்ட அனகோண்டாவும் பிரேசிலில் காணப்படுகிறது. அடர்த்தியான தோலும், உடல் அமைப்புமுமே அதன் அச்சுறுத்தும் தோற்றத்துக்கு காரணமாகின்றன.
பட மூலாதாரம், SSPCA
இந்தோனீசியா
மலைப் பகுதிகளில் மலையேற்றம் செய்வதும், அங்குள்ள இயற்கையான சூழலை சுற்றிப் பார்ப்பதும் சாகச விரும்பிகளின் கனவுத் திட்டங்களில் ஒன்று. மற்ற நாடுகளில் இது அவ்வளவு கடினம் அல்ல.
ஆனால் இந்தோனீசியாவின் ஜாவா அல்லது சுமத்ரா பகுதிகளில் இப்படிப்பட்ட ஒரு சாகச பயணத்தைத் தொடங்கி முடிப்பது என்பது, கிட்டத்தட்ட முடியாத காரியம்.
இந்தப் பகுதிகளில் நீங்கள் ஒரு மலையில் ஏறினாலும் சரி அல்லது அங்குள்ள காடுகளின் வழியாக உங்களது பயணத்தைத் தொடங்கினாலும் சரி, இலக்கை அடைவதற்கு முன்பு பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
இங்குள்ள ஆபத்தான பாம்புகள் உங்கள் உடலின் ரத்த நாளங்களில் வலுவான விஷத்தை செலுத்துகின்றன.
அப்பகுதியில் காணப்படும் தேள்கள் கடித்தால் கடும் வலியுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது. கோரல் பாம்பின் (coral snake)நஞ்சு, உடலில் உள்ள திசுக்களை சேதப்படுத்திவிடும்.
இதனை வாசிக்கும் போது மிகையாகத் தோன்றலாம் . ஆனால் இந்தோனீசியாவின் பாம்புகளை எடுத்துக்கொண்டால், இந்த விவரணையே சற்று குறைவு தான்.
இந்தோனீசியாவில் 376 வகையான பாம்பு இனங்கள் உள்ளன.
சில வகைப் பாம்புகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
2024 ஆம் ஆண்டு வடக்கு சுலவேசியில் உள்ள ஒரு ஏரியில் ஹைப்சிஸ்கோபஸ் இந்தோனெசினிஸ் என்ற அரிய நீர்ப்பாம்பின் இருப்பு முதன்முதலில் உலகிற்கு தெரியவந்தது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா
இந்தியா இந்தப் பட்டியலில் இருப்பது ஆச்சரியமல்ல. காரணம், இந்தியா மிதவெப்ப மண்டலத்தில் உள்ளது.
ஒரு பக்கம் பாலைவனம், மறுபுறம் பனி மலைகள், நாட்டின் நடுவில் பெரிய மலைத்தொடர்கள், பரந்த சமவெளிகள் என, இந்தியா நிலவியல் பன்முகத்தன்மையின் மையமாகத் திகழ்கிறது.
இந்தியாவில் 305 வகையான பாம்புகள் உள்ளன.
2020 ஆம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சேற்றுப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு இமயமலையில் உள்ள மரு முலா கிராமத்தில் உள்ள சூரா பள்ளத்தாக்கில் குக்ரி பாம்பு காணப்பட்டது.
இந்தியாவில் எல்லா பிராந்தியங்களிலும் பாம்புகள் உள்ளன. சாம்பல் நிற கீல்பேக் வகை உட்பட பல விஷ பாம்புகள் உள்ளன.
திறந்த வெளிகளில் சுற்றித் திரியும் ராட்டில்ஸ்நேக்குகள், முதன்முதலில் 1758ல் கண்டறியப்பட்டன.
இந்தியாவில் மிகவும் ஆபத்தான விஷ பாம்புகளில் ஒன்றான சுருட்டைவிரியன் (saw-scaled viper) 1801-இல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதிக விஷமுள்ள பாம்புகளில் ஒன்றான நாகப்பாம்பு, மணிக்கணக்கில் அசையாமல் நிற்கும் திறன் கொண்டது. அவை பெரும்பாலும் வயல்களில் காணப்படுகின்றன என்பது இவற்றில் உள்ள மற்றொரு ஆபத்து.
பட மூலாதாரம், Getty Images
கொலம்பியா
கொலம்பியாவின் பாம்புகள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல், அங்குள்ள போதைப்பொருள் கும்பல்கள் மீதான பயத்துக்கு இணையானவை. மேகங்கள், மூடுபனி மற்றும் ஈரமான காடுகள் கொண்ட நாடாக கொலம்பியா திகழ்கிறது. அங்குள்ள காடுகளில் எங்கு திரும்பினாலும் உங்களால் பாம்புகள் எழுப்பும் சத்தத்தைக் கேட்க முடியும்.
அங்குள்ள காடுகளின் எந்த மூலையிலோ அல்லது வளைந்து செல்லும் சாலைகளிலோ கூட பாம்புகள் பதுங்கியிருக்கலாம்.
கொலம்பியாவில் ஆண்டிஸ் மலைத்தொடர் உள்ளது.
பிரேசிலில் இருப்பதைப் போலவே கிழக்கு கொலம்பியாவிலும் அனகோண்டாக்கள் பெருமளவில் காணப்படுகின்றன.
கொலம்பியாவைத் தொடர்ந்து சீனா, ஈக்வடார், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
மக்களிடையே அதிகரிக்கும் விழிப்புணர்வு
“இந்தியாவில் காணப்படும் விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் நான்கு பாம்பினங்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இவை ‘பிக் ஃபோர் விஷப் பாம்புகள்’ (Big Four Venomous Snakes)என்று அழைக்கப்படுகின்றன,” என ப்ரெண்ட்ஸ் ஆப் ஸ்நேக் சொசைட்டி (Friends of Snake Society) அமைப்பின் பொதுச் செயலாளர் அவினாஷ் தெரிவித்தார்.
பாம்புகள் குறித்து பொதுமக்களிடையே இன்னும் தவறான எண்ணங்களும் அச்சங்களும் இருப்பதாகவும், ஆனால் சில அமைப்புகளும் அரசாங்கமும் மேற்கொண்ட திட்டங்களால் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“முன்னதாக, பாம்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றைப் பிடிக்கவும் ஒரு நாளைக்கு நூறு அழைப்புகள் மட்டுமே எங்களுக்கு வந்தன. இப்போது ஒரு நாளைக்கு 300 அழைப்புகள் வருகின்றன,” என்று அவினாஷ் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.
அதிக எண்ணிக்கையிலான பாம்பு இனங்களைக் கொண்ட நாடுகள் மட்டுமல்ல, பாம்புகளே இல்லாத நாடுகளும் உள்ளன.
நியூசிலாந்து, அயர்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, அண்டார்டிகா மற்றும் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான கிரிபாட்டி ஆகியவற்றில் பாம்புகள் இல்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு