பட மூலாதாரம், Getty Images
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடியால் 138,000 பேர் உயிர் இழக்கின்றனர்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 60,000க்கும் மேற்பட்டோர் பாம்பு கடியால் இறக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 50 லட்சம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 4 லட்சம் பேருக்கு உடலின் ஒரு பகுதியை துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது அல்லது நிரந்தரமாக உடல் உறுப்புக்களில் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தப் புள்ளிவிவரங்கள் திகைப்பூட்டுகிறது அல்லவா?
ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் ஒரே காரணம் பாம்புகள் தான்.
உலகின் பல நாகரிகங்கள் மற்றும் கலாசாரங்களில் பாம்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. சில சமூகங்கள் அதை வணங்குகின்றன, சில அதைக் கண்டு அஞ்சுகின்றன.
சில பாம்புகள் உண்மையில் மிகவும் ஆபத்தானவை, ஆனால் சில பாம்புகள் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது.
சில வகைப் பாம்புகள் நூடுல்ஸ் போல மெல்லியவை, மற்றவை ஒட்டகச்சிவிங்கியை விட நீளமானதாகவும், முழு ஆடு அல்லது பன்றியை விழுங்கும் அளவுக்கு பெரியவையாகவும் இருக்கும்.
சுமார் 170 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாம்புகள் பரிணாம வளர்ச்சியால் பண்டைய பல்லிகளிடமிருந்து பிரிந்து தங்கள் கால்களை இழந்ததாக நம்பப்படுகிறது என்று சோபியா குவாக்லியா பிபிசி எர்த்தில் குறிப்பிடுகிறார்.
மரபணு ஆராய்ச்சியின்படி, பாம்புகளின் உண்மையான மூதாதையர் குறுகிய கால்விரல்கள் மற்றும் விரல்களைக் கொண்ட நீண்ட, மெல்லிய பல்லியாக இருக்கலாம்.
லாராசியாவின் சூடான காடுகளில் வாழ்ந்த பாம்புகள், இன்று வட அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐரோப்பா மற்றும் ஆசியா எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 3900 வகையான பாம்புகள் காணப்படுகின்றன, ஆனால் அவற்றில் 725 மட்டுமே விஷத்தன்மை கொண்டவை.
இவற்றில் 250 இனங்கள் ஒரு கடியால் ஒரு மனிதனைக் கொல்லும் தன்மை கொண்டவை.
அதேசமயம், விஷம் இல்லாத பாம்புகளும் மனிதர்களைக் கொல்லக்கூடும், ஆனால், ஆண்டுதோறும் ஒன்று அல்லது இரண்டு இறப்புகளுக்கு காரணமாக அமையும் அளவுக்கு இதுபோன்ற சம்பவங்கள் அரிதானவை.
உதாரணமாக, மலைப்பாம்புகள் தங்கள் இரையைச் சுற்றிக் கொண்டு மூச்சுத்திணறச் செய்து கொல்லலாம்.
உலகின் மிக ஆபத்தான 10 பாம்புகள்
பட மூலாதாரம், Getty Images
விஷப் பாம்புகளைப் பற்றி நாம் பேசும்போது, அதற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கலாம்.
முதலில், அதிக மக்களை கொல்லும் பாம்பு அல்லது அதிக விஷம் கொண்ட பாம்பு. அதாவது மிகவும் விஷமுள்ள பாம்பு.
இவை இரண்டும் ஒரே மாதிரியானவை அல்ல.
அதிக விஷமுள்ள பாம்பு மனிதர்களுக்கு அருகில் வாழாமல் இருக்கலாம், அல்லது ஆக்ரோஷமாக இல்லாமல் இருக்கலாம்.
பாம்புக் கடியால் திசுக்கள் அழுகும் (நெக்ரோசிஸ்) நிலை ஏற்படலாம். இதனால் உடலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய நிலை வரலாம்.
விலங்கு நடத்தை ஆராய்ச்சியாளரும் அறிவியல் எழுத்தாளருமான லியோமா வில்லியம்ஸ், பிபிசி வனவிலங்கு இதழான டிஸ்கவர் வைல்டில், உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் விஷமுள்ள பத்து பாம்புகளை பட்டியலிட்டுள்ளார்.
1. ஸா ஸ்கால்டட் வைப்பர்( Saw-Scalded Viper)
பட மூலாதாரம், Getty Images
மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் காணப்படும் ஒரு பாம்பு வகையான செதில் விரியன் பாம்பு, மிகவும் ஆக்ரோஷமானது.
ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயிர் இழப்பதற்கு காரணமாகக் கருதப்படும் இந்தப் பாம்பு, அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காணப்படுகிறது, இதன் காரணமாக இது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது.
இந்தியாவில், இந்தப் பாம்பு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐயாயிரம் இறப்புகளை ஏற்படுத்துகிறது.
2. இன்லேன்ட் டைபன் (Inland Taipan)
பட மூலாதாரம், Getty Images
மிகவும் விஷமுள்ள பாம்பைப் பொறுத்தவரை, இன்லேண்ட் தைபன் முன்னணியில் உள்ளது.
மத்திய ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த பாம்பு, முக்கியமாக எலிகளை வேட்டையாடுகிறது.
இந்தப் பாம்பு ஒரு கடி கடித்தால், நூறு பேரைக் கொல்லும் என்று கூறப்படுகிறது.
ஆனால், ஸா ஸ்கெல்ட் வைப்பரைப் போலல்லாமல், இது உயிரிழப்புகளை ஏற்படுத்தாது.
ஏனென்றால் இது மனிதர்கள் வாழும் பகுதிகளில் இருந்து விலகி, பெரும்பாலும் தொலைதூரப் பகுதிகளிலும், நிலத்தடியிலும் வாழ்கிறது.
3. கருப்பு மாம்பா (Black Mamba)
பட மூலாதாரம், Getty Images
காட்டின் ராஜா எனக் கூறப்படும் சிங்கம் கூட சரணடையும் அளவுக்கான ஒரு பாம்பு தான் கருப்பு மாம்பா.
சப்-சஹாரா (சஹாராவுக்கு தெற்கே உள்ள ஆப்ரிக்க நாடுகள்) பிராந்தியத்தில் காணப்படும் இந்த பாம்பு தைபனை விட மிகவும் ஆக்ரோஷமானது.
பொதுவாக மனிதர்களிடமிருந்து விலகி இருக்கும் இந்த பாம்பு, ஆபத்தை உணர்ந்ததும் மின்னல் வேகத்தில் தாக்கும். உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கடித்த அரை மணி நேரத்திற்குள் ஒருவர் இறந்துவிடுவார்.
4. ரஸ்ஸல் வைப்பர் (Russell Viper)
பட மூலாதாரம், Getty Images
இந்திய நாகப்பாம்பு, காமன் கிரெய்ட், செதில் விரியன் பாம்புடன் ரஸ்ஸல் வைப்பரையும் சேர்த்து பிக் ஃபோர் என்று அழைக்கிறார்கள்.
இந்த நான்கு பாம்புகளும் இந்திய துணைக்கண்டத்தில் அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாகின்றன.
ரஸ்ஸல் வைப்பர் கடிக்கும்போது, கடுமையான வலியை ஏற்படுத்தும்.
இது மிகவும் ஆக்ரோஷமாகவும், வேகமாகவும் செயல்படக் கூடியது. இந்தியாவில் காணப்படும் பாம்புக்கடிகளில் 43% சம்பவங்களுக்கு இந்த பாம்பே காரணம்.
5. காமன் க்ரெய்ட்(Common Krait)
பட மூலாதாரம், Getty Images
பிக் ஃபோர் பாம்புகளில் ஒன்றான இந்த பாம்பு அதிக விஷத்தன்மை கொண்டது. அது கடித்தால் இறப்பதற்கான வாய்ப்புகள் 80% ஆக உள்ளது.
இதன் விஷத்தில் நியூரோடாக்சின்கள் உள்ளன, அவை தசை முடக்கம், சுவாசக் கோளாறு மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தும்.
இது மற்ற பாம்புகள், எலிகள் மற்றும் தவளைகளை உண்ணும். இந்த பாம்பு மனிதர்களை நேருக்கு நேர் சந்திப்பது அரிது, ஆனால் இருட்டில் நீங்கள் அதன் மீது காலடி வைத்தால், அது நிச்சயமாக தாக்கும்.
6. இந்திய நாகப்பாம்பு(Indian Cobra)
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் உள்ள மிகவும் ஆபத்தான பாம்புகளில் ஒன்று தான் இந்திய நாகப்பாம்பு.
முன்னதாக இந்தியாவில், பாம்பாட்டிகள் ஒவ்வொரு தெருவிலும் இந்தப் பாம்புடன் சுற்றித் திரிந்தனர்.
விஷத்தன்மை கொண்ட இந்தப் பாம்பு மிகவும் ஆக்ரோஷமானது. இது மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் அல்லது அதற்கு அருகில் வாழ்கிறது. ஏனெனில் எலிகள் தான் அதன் முக்கிய இரையாக உள்ளன. அவை இந்த பகுதிகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன. அதனால்தான் இது மனிதர்களை அடிக்கடி சந்திக்கிறது.
7. பஃப் அடிர்(Puff Adder)
பட மூலாதாரம், Getty Images
இந்திய துணைக்கண்டத்திலிருந்து வெகு தொலைவில், பெரிய மற்றும் பயங்கரமான பஃப் அடிர் வகைப் பாம்புகள், ஆப்பிரிக்காவில் காணப்படுகிறன.
விரியன் குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பாம்பு, மற்ற அனைத்து ஆப்பிரிக்க பாம்புகளையும் விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
அச்சுறுத்தும் போது, அது ஓடிப்போவதற்குப் பதிலாக நேராக எதிர்கொள்கிறது. மக்கள் கடந்து செல்லும் இடங்களில் பெரும்பாலும் ஓய்வெடுக்கிறது.
அது அதன் உடலை பெரிதாக்கி, சத்தத்தை எழுப்பி, தாக்குவதற்கு முன் அது ஒரு எச்சரிக்கையையும் அளிக்கிறது.
8. காமன் டெத் அடிர்(Common Death Adder)
பட மூலாதாரம், Getty Images
இந்தப் பாம்பு ஆஸ்திரேலியாவின் காடுகளில் காணப்படுகிறது. இலைகளுக்கு இடையில் ஒளிந்து கொண்டு, இரை வரும்போது இவை தாக்கும்.
இதுபோன்ற பகுதிகளில் சுற்றித் திரியும் போது தற்செயலாக அதன் மீது கால் வைப்பவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானதாக மாறும்.
இதன் விஷம் ஒருவரின் உயிரைப் பறிப்பதற்கு போதுமானதாகவும், 60% மரணத்திற்கும் வழிவகுக்கிறது.
9. ராஜ நாகம்(King Cobra)
பட மூலாதாரம், Getty Images
இந்த பாம்பு சராசரியாக நான்கு மீட்டர் நீளம் கொண்டது. அதிகபட்சமாக 5.85 மீட்டர் நீளம் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய நாகப்பாம்பைப் போலவே, ராஜ நாகமும் இந்திய துணைக்கண்டத்தில் பெரும் கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
மனிதர்கள் அதன் பிரதேசங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். பாரம்பரிய சீன மருந்துகளில் பயன்படுத்துவதற்காகவும் இது வேட்டையாடப்படுகிறது.
இந்தியாவில்ராஜ நாகத்தை கொன்றால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
10. ஈஸ்டர்ன் டைமண்ட்பாக் ராட்டில்ஸ்னேக்
பட மூலாதாரம், Getty Images
இது வட அமெரிக்காவில் வாழும் மிகவும் ஆபத்தான பாம்பு.
ஆனால், இது ஆசியப் பாம்புகளை விட குறைவான ஆபத்தானதாகத் தெரிகிறது. மறுபுறம், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகிறது.
மிகப் பெரிய மற்றும் கனமான பாம்பான இதன் எடை 15 கிலோவுக்கு மேல் இருக்கும்.
இதன் விஷத்தில் ஹீமோடாக்சின் உள்ளது, இது இரத்த சிவப்பணுக்களைத் தாக்குகிறது.
இந்த பத்து பாம்புகளைத் தவிர, டைகர் ஸ்னேக், கோஸ்டல் தைபன் மற்றும் ஈஸ்டர்ன் பிரவுன் ஸ்னேக் ஆகியவை ஆபத்தான பாம்புகளாகக் கருதப்படுகின்றன.
பாம்புகளுக்கு வெவ்வேறு வகையான விஷங்கள் உள்ளதா?
பட மூலாதாரம், Getty Images
பாம்புகளுக்கு இரண்டு வகையான விஷங்கள் உள்ளன.
நியூரோடாக்ஸிக் விஷம் உடலின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஹீமோடாக்ஸிக் விஷம் இரத்தத்தைப் பாதித்து, திசு சேதத்தை ஏற்படுத்துகிறது.
நாகப்பாம்புகள், மாம்பாக்கள் மற்றும் கிரெய்ட்கள் நியூரோடாக்ஸிக் விஷத்தைக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் ராட்டில்ஸ்னேக்ஸ் மற்றும் அட்டர்ஸ் போன்ற விரியன் பாம்புகள் ஹீமோடாக்ஸிக் விஷத்தைக் கொண்டுள்ளன.
ஆனால், சில விதிவிலக்குகளும் உள்ளன.
அதேபோல் சில பாம்புகளின் விஷம் உடலில் கலவையான விளைவுகளைக் கொண்டுள்ளது.
சில விரியன் பாம்புகள் நியூரோடாக்ஸிக் விஷத்தின் கூறுகளைக் கொண்டுள்ளன, மற்ற பாம்புகள் கலப்பு விஷத்தைக் கொண்டிருக்கலாம்.
இப்போது இந்தியாவில் பாம்பு கடியால் இவ்வளவு பேர் உயிரிழப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது,
இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாம்புக்கடி சிகிச்சை மற்றும் கல்வி சங்கத்தின் தலைவரும் நிறுவனருமான பிரியங்கா கடம், இந்தியாவில் பல்லுயிர் பெருக்கம் மிகவும் வளமானது என்றும், மக்கள்தொகை அதிகமாக இருப்பதால் பாம்பு கடியால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இங்குதான் நிகழ்கின்றன என்றும் கூறுகிறார்.
“விரியன் பாம்பு இனத்தின் விஷம் ஹீமோடாக்ஸிக் வகையைச் சேர்ந்தது. இது இரத்தத்தை பாதிக்கிறது. இது இரத்தத்தை பாதித்து, உட்புற இரத்தப்போக்கை ஏற்படுத்துகிறது, இது உள் இரத்தக்கசிவு என்று அழைக்கப்படுகிறது.
அதனால் இரத்த நுண்குழாய்கள் வெடிக்கத் தொடங்குகின்றன. சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.
ஒரு நபர் விரியன் பாம்பு கடித்தால் உடனடியாக இறக்க மாட்டார், ஆனால் அதனால் ஏற்படும் சிக்கல்கள் மிக அதிகமாக இருக்கும். ஹீமோடாக்ஸிக் விஷம் உடலில் நுழைந்தால், பாதிக்கப்பட்ட நபர் உயிர்வாழ முடியும், ஆனால் சிறுநீரகங்கள் சேதமடையலாம், உட்புற பிரச்னைகள் ஏற்படலாம், உறுப்புகள் பாதிக்கப்படலாம்” என்று பிபிசியிடம் பிரியங்கா விளக்கினார்.
இவற்றைத் தவிர, க்ரைட் மற்றும் நாகப்பாம்பு போன்ற பாம்புகள் நியூரோடாக்ஸிக் விஷத்தைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது, அதன் பிறகு தசைகள் வேலை செய்வதை நிறுத்துகின்றன. நரம்பியல் அமைப்பை முடக்கும் இந்த விஷம், ஒரு மனிதனால் சுவாசிக்க முடியாத அளவுக்கு மோசமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் .
இதனால்தான் இதுபோன்ற பாம்புகள் கடித்த பிறகு உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இறப்புக்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.
விஷ எதிர்ப்பு மருந்து இல்லாதது ஒரு பெரிய சிக்கலாக உள்ளதா என்ற கேள்விக்கு, பிரியங்கா கடம் பதில் கூறுகையில், “இந்தியாவில், ‘பிக் ஃபோர்’ பாம்பு வகையை மையமாகக் கொண்டு விஷ எதிர்ப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது. நம் நாட்டில், குறிப்பாக வடகிழக்கில், பல்வேறு வகையான பாம்புகள் காணப்படுகின்றன, வங்காளத்தில் கிரேட்டர் பிளாக் கிரெய்ட், லெஸ்ஸர் பிளாக் கிரெய்ட் போன்ற பிற பாம்பு இனங்களும் உள்ளன. அவை கடிக்கும்போது, சரியான விஷ எதிர்ப்பு மருந்து சரியான நேரத்தில் கிடைக்காதது உயிரிழப்புக்கான அபாயத்தை அதிகரிக்கிறது” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு