பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அஜித் காத்வி
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
தங்கத்தின் விலை தினமும் புதிய உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், தங்கம் பெரிய அளவில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதையும் பார்க்க முடிகிறது.
லண்டனில் உள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் பெட்டகங்களிலிருந்து பல ஆயிரம் கிலோ தங்கம் தற்போது அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
சர்வதேச செய்திகளின்படி, அமெரிக்க தங்க வியாபாரிகள் விமானங்களில் தங்கத்தை நியூயார்க் நகருக்கு எடுத்துச் செல்கின்றனர். இது ஒரு வகையில் லண்டனில் தங்கப் பற்றாக்குறையையும், அமெரிக்காவில் தங்கப் பதுக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா தற்போது உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தங்கத்தை ஈர்க்கும் பிரம்மாண்ட காந்தம் போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
தற்போதுவரை, பிரிட்டன் தலைநகர் லண்டனில்தான் மிக அதிக அளவு தங்கம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது நியூயார்க்கின் மேன்ஹாட்டன் பகுதியில் அதிக தங்கம் குவிந்துள்ளதாக வால் ஸ்டீரிட் ஜர்னல் இதழில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கிறது.
லண்டனைத் தவிர, ஸ்விட்சர்லாந்திலிருந்தும் தங்கம் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தங்கத்திற்கான தேவை மிக அதிகமாக இருப்பதால், ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, தங்கத்திற்கான ஸ்பாட் விலை செவ்வாய்கிழமை இதுவரை இல்லாத அளவு ஒரு அவுன்சுக்கு (சுமார் 28 கிராம்) 2,942.70 டாலர்கள் என்ற உச்சத்தை தொட்டது. ஆனால் வெள்ளிக்கிழமை 2,932 டாலராக அதன் விலை இருந்தது.
தங்கத்தின் விலை இதே போன்று உயர்ந்துகொண்டிருந்தால், முதல் முறையாக அதன் விலை 3,000 டாலர்களை கூட எட்டக்கூடும்.
எப்போது தொடங்கியது?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பே லண்டன் மற்றும் உலகின் பிறப்பகுதிகளிலிருந்து தங்கம் அமெரிக்காவிற்கு செல்வதற்கு காரணம் என சொல்லப்படுகிறது .
ஸ்டீல் மற்றும் அலுமினியம் இறக்குமதிகள் மீது 25 % வரி விதித்ததைப் போல், டொனால்ட் டிரம்ப் தங்கத்தின் மீது 10 % வரி விதிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவே தங்க வியாபாரிகளை அவசரமாக தங்கத்தை லண்டனிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல தூண்டியிருக்கிறது.
அமெரிக்க பொருட்கள் மீது வரிவிதிக்கும் அனைத்து நாடுகள் மீதும் வரியை அதிகரிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்ததால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
டிரம்பின் திட்டம் அவர் நினைத்தது போல் நடந்தால், வரும் நாட்களில் சீனா, கனடாவோடு, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மிக அதிக வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
2024 நவம்பர் 5-ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அமெரிக்காவின் காமெக்ஸில் (COMEX – தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை வர்த்தகம் செய்யும் ஒரு முக்கிய சந்தை) தங்கத்தின் கையிருப்பு சுமார் 533 டன்னாக இருந்தது. அதன் பின்னர் அது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
டிசம்பர் 29ஆம் தேதி, தங்கத்தின் கையிருப்பு 681 டன்னாக இருந்தது. ஜனவரி 29, 2025-ல் அது 963 டன்னாக அதிகரித்தது. ஜனவரி 31ஆம் தேதி இந்த கையிருப்பு 1000 டன்களை கடந்தது. பிப்ரவரி முதல் வாரதில் 1100 டன் கையிருப்பு இருந்தது.
தங்கத்தை அதிகம் வாங்கும் இந்தியா மற்றும் சீனாவிற்கு செல்லவேண்டிய தங்கம் இப்போது லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு சென்றுகொண்டிருக்கிறது என்று ராய்ட்டர்ஸின் செய்து ஒன்று கூறுகின்றது.
பட மூலாதாரம், Getty Images
உலகிலேயே அதிக தங்க கையிருப்பைக் கொண்டுள்ள அமெரிக்கா
பிபிசியிடம் பேசிய ஹெச்டிஎஃப்சி செக்யூரிடிஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் செளமில் காந்தி, “தங்கம் லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு செல்வதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருக்கின்றன,” என்கிறார்.
“ஒன்று, டிரம்ப் வரி விதிப்பார் என்ற அச்சம். இந்த வரி எவ்வளவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அது 10% அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். இதுபோன்ற வரிகள் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான செலவை அதிகரிக்கும். எனவே தங்க இறக்குமதியாளர்கள் இழப்பு ஏற்படும் அபாயத்தை ஏற்கனவே குறைக்க தொடங்கிவிட்டனர்.”
“அத்தோடு, உலகிலேயே அதிக தங்க கையிருப்பு அமெரிக்காவில் இருக்கிறது. அது நீண்ட காலமாக தணிக்கை செய்யப்படவில்லை. எனவே வங்கிகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் லண்டன் பெட்டகங்களில் இருக்கும் தங்களது தங்கத்தை கணக்கில் காட்டுவதற்காக அமெரிக்காவிற்கு கொண்டு செல்கின்றன.”
“வரி யுத்தமும், சர்வதேச நிச்சயமற்ற தன்மையும்தான் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். தனது தங்க கையிருப்பை ஜனவரியில் அதிகரித்த சீனாவின் மத்திய வங்கி போல பல மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக்கொண்டிருக்கின்றன,” என்கிறார் செளமில் காந்தி.
“முக்கியமாக, பிரிக்ஸ் நாடுகள் தற்போது டாலர்களை குறைத்து கொண்டு தங்களது தங்க கையிருப்பை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனாலேயே தங்கத்தின் விலை உயர்கிறது” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் திருமணங்களுக்கு தங்கம் வாங்குவது குறையுமா?
தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், திருமணத்திற்கு தங்கம் வாங்க விரும்பும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆமதாபாத் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜிகர் சோனி பிபிசி குஜராத்தியிடம் பேசிய போது,” தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்காக நிதி சேமித்து வைத்திருக்கும் மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் வாங்க வேண்டும் என நினைத்திருப்பார்கள். ஆனால் தற்போதைய விலையில் அவர்களால் குறைவான அளவிலே வாங்க முடியும்” என்றார்.
“10 கிராம் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயாக மாறலாம்”
“தங்கத்தின் விலை உயர்ந்தாலும், மக்கள் அதன் மீதான ஆர்வத்தை இழந்துவிடமாட்டார்கள். மக்கள் தற்போது 14 முதல் 18 கேரட் தங்க நகைகளையும் வாங்குகின்றனர். இவை குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. ” என்கிறார் அவர்.
“அண்மையில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் பலர் பங்குச்சந்தையில் ஆர்வத்தை இழந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீட்டாக கருதுகின்றனர்.”
முன்னதாக டிரம்பின் வருகைக்கு பிறகு, கூடுதலாக 600 டன் தங்கம் அமெரிக்காவில் குவிக்கப்பட்டிருப்பதாகவும், தங்கத்தின் அடிப்படையில் அமெரிக்கா அதிக டாலர்களை அச்சடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கிறார் ஹரேஷ் ஆச்சார்யா. இண்டியா புல்லியன் ஆண்டு ஜூவல்லர்ஸ் அசோசியேசன் (IBJA) எனப்படும் இந்திய தங்க மற்றும் நகைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இயக்குநராக அவர் உள்ளார்.
இவ்வாறு நடைபெற்றால், வரும் மாதங்களில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ஒரு லட்சம் ரூபாயை எட்டக்கூடும்.
இந்தியாவில் பலர், புதிய தங்கத்தை வாங்குவதற்கு பதிலாக பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து நகைகளை தயாரித்து வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கான தங்கமும் அமெரிக்காவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது
அமெரிக்காவிற்கு அதிக அளவில் தங்கம் நகருவதால், இந்தியாவிலிருந்தும் தங்கம் அமெரிக்காவை சென்றடைந்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஒரு முன்னணி வங்கி இந்தியாவில் சுங்க வரியில்லா பகுதியில் சேமித்து வைத்திருந்த தங்கத்தை இரண்டு வாரத்திற்கு முன்னர் அமெரிக்காவிற்கு அனுப்பியது.
பொதுவாக பல வங்கிகள் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்து சுங்க வரி இல்லா பகுதியில் சேமித்து வைக்கும். அதன் பின்னர், தங்கத்திற்கு தேவை இருக்கும்போது மட்டும் அவர்கள் இறக்குமதி வரியை செலுத்தி தங்கத்தை எடுக்கிறார்கள்.
இவை தவிர, அவர்கள் விரும்பினால் அந்த தங்கத்தை மீண்டும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கலாம். அப்படிச் செய்தால் அவர்கள் எந்த வரியும் செலுத்த தேவையில்லை.
துபை சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வரும் தங்கமும் அமெரிக்காவிற்கு சென்றுகொண்டிருக்கிறது. இந்த தங்கம் சாதாரணமாக இந்தியாவிற்கு வரும்.
பிப்ரவரி 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஏழாவது வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
தங்க வியாபாரத்தின் மிகப்பெரிய வர்த்தக மையம் லண்டன். ப்ளும்பர்க் செய்தியின்படி லண்டனின் பெட்டகங்களில் 800 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புள்ள தங்கம் வைக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்குன்றன
உலக தங்க கவுன்சில் அறிக்கை ஒன்றின்படி, உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தற்போது பெரிய அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன.
மத்திய வங்கிகள் மூன்றாவது வருடமாக 1000 டன்னுக்கு மேல் தங்கத்தை வாங்கியுள்ளன. 2024-ல் அந்த வங்கிகள் 1,044 டன் தங்கத்தை வாங்கியுள்ளன.
2024-ல் அதிகபட்சமாக போலந்து 89.5 டன் தங்கம் வாங்கியிருந்தது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி 72 டன்னுக்கு மேல் தங்கம் வாங்கியது.
மிண்ட் நாளிதழ் செய்தியின்படி, இந்தியாவின் தங்கம் கையிருப்பு 2021ஆம் ஆண்டு 754 டன்னாக இருந்தது. 2024-ல் 876 டன்னாக அதிகரித்தது. இந்தியா அதன் அன்னிய செலாவணியில் 11% மேல் தங்கமாக வைத்திருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு