சென்னை: இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வையில் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
திருவள்ளுவர், கபீர்தாஸ், யோகி வேமனா ஆகிய மூவரது ஒப்பீடு குறித்த சர்வதேச கருத்தரங்கம், ஆளுநர் மாளிகை சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: திருவள்ளுவர், கபீர்தாஸ், யோகி வேமனா ஆகிய 3 பேரும் வெவ்வேறு இடங்களில் பிறந்தவர்கள். ஆனால், அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தினர். இந்திய இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும், ஒற்றுமையை நன்கு வலியுறுத்துவதை காணலாம். எப்படி ஒற்றுமையோடு வாழ முடியும் என்பதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும். ‘‘செப்பு மொழி பதினெட்டு உடையாள் சிந்தனையில் ஒன்றுடையாள்’’ என்று நாட்டின் ஒற்றுமையை பாரத மாதா வழியாக வலியுறுத்துகிறார் மகாகவி பாரதி.
நாடு சுதந்திரம் அடைந்தும், இன்னும் பலர் காலனி ஆதிக்க மனநிலையில் உள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தில் ‘பாரத்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது விளக்கப்படவில்லை. முதலில் ஐரோப்பியர்கள்தான் ‘இந்தியா’ என்று அழைத்தனர். அவர்களது வருகைக்கு முன்பு இந்த தேசம் வேறு விதமாக இருந்தது. இந்தியா என்பதைவிட வேறுபட்டது ‘பாரத்’. அது மிக பழையது, மிக பெரியது. அது வெறும் அரசியல் நிலம், மக்கள் நிறைந்த பகுதி மட்டுமல்ல. பாரத் என்பது ராஷ்ட்ரம் என கூறப்படுகிறது. பாரத் எப்படி உருவானது என ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
பாரதத்தில் ஞானிகள், ரிஷிகள், யோகிகள் எத்தனையோ பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒற்றுமையை பற்றி பேசியுள்ளனர். கிளைகள் பல இருந்தாலும் மரம் ஒன்றே. அது போல, பாரதத்தை சேர்ந்த நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர். பாரதத்துக்கு சாதி, மொழி, இனவேறுபாடு கிடையாது. நமதுகுழந்தைகளுக்கு பாரதத்தை பற்றி விளக்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக பாரதம் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதனால், இன்று பாரதம் பேசினால் உலகமே கவனமாக கேட்கிறது. பாரதம் இல்லாமல் உலகின் எந்த முடிவுகளும் எடுக்கப்படுவது இல்லை. இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வையில் தற்போது பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.