பட மூலாதாரம், Getty Images
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது ஒரு மாதத்திற்கு முன்பு கண்டறியப்பட்டது. 27 வயதான ராஜு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்.
“எனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதியானது. அப்போது எய்ட்ஸ் பற்றிய விளம்பரங்கள் அதிகம் இல்லாததால் அந்த நோய் இல்லை என்றே நினைத்துவிட்டேன். சில சமயங்களில் ஆணுறை பயன்படுத்தாமல் உறவு கொண்டது உண்மைதான்,” என்று பிபிசியிடம் பேசியபோது ராஜு கூறினார்.
91 சதவிகித எச்.ஐ.வி தொற்றுகள் பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவுகின்றன, அவர்களில் 90 சதவீதம் பேர் 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் கூறுகிறது.
சர்வதேச எய்ட்ஸ் சொசைட்டியின் உறுப்பினரும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மருத்துவருமான டாக்டர் கூட்டிகுப்பலா சூர்யா ராவ், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எய்ட்ஸ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். பிபிசி அவரிடம் பேசியபோது, எய்ட்ஸ் இல்லை என்று மக்கள் நம்புவதால், ஆணுறை பயன்படுத்தாமல் அல்லது பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றாமல் உடலுறவில் ஈடுபடுவதால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று சொன்னார்.
“கடந்த காலத்தில் எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ‘புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்ற விளம்பரம் மிகவும் பிரபலமானது. இப்போது இதுபோன்ற பிரசாரங்கள் அதிகம் காணப்படவில்லை என்பது உண்மைதான் என்றாலும், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேறு பல வழிகளில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் பாணி மாறிவிட்டது,” என்று எய்ட்ஸ் கட்டுப்பாடு சொசைட்டி அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் நாட்டையே உலுக்கிய ‘புள்ளி ராஜா’ இப்போது எங்கே? அதிகாரிகளால் ஊக்குவிக்கப்படும் புதிய வகை எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் எவ்வாறு செயல்படுகிறது?
பட மூலாதாரம், Getty Images
இப்போது எய்ட்ஸ் இல்லை என்ற எண்ணம் சிலருக்கு வந்ததற்கான காரணங்கள் என்ன? முன்னர் இருந்ததைப் போன்றே மக்களுக்கு இன்னும் எய்ட்ஸ் பற்றிய பயம் இருக்கிறதா?
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் இரண்டும் ஒன்றா? என்று கேட்டால் இரண்டும் ஒன்றல்ல என்றே சொல்லலாம்.
எச்.ஐ.வி என்பது மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸைக் குறிக்கிறது.
எச்.ஐ.வி என்பது ரத்தமாற்றம், பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் ஒருவருக்கு (எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவருக்கு) பயன்படுத்தப்பட்ட ஊசியை மற்றொருவருக்கு பயன்படுத்துவது போன்றவற்றால் பரவக்கூடிய வைரஸ் ஆகும்.
இந்த வைரஸ் உடலில் நுழைந்தவுடன், அது படிப்படியாக மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் எச்.ஐ.வி பாசிட்டிவ் என்று அழைக்கப்படுகிறார்கள்.
எய்ட்ஸ் என்பது நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறியாகும் (Acquired Immunodeficiency Syndrome). இதுவொரு வைரஸ் அல்ல. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கடுமையாக பாதிக்கப்படும் போது ஏற்படும் நிலை.
பட மூலாதாரம், Getty Images
‘புள்ளி ராஜா’ எங்கே?
ஒரு காலத்தில், ‘புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்ற பிரசாரம் கிராம மக்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எய்ட்ஸ்/எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதில் புள்ளி ராஜா பிரசாரம் வெற்றிகரமாக இருந்தது.
இருப்பினும், பறவைக் காய்ச்சல், எபோலா, பன்றிக் காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற வைரஸ்கள் மற்றும் கொரோனாவின் வருகையால் எய்ட்ஸ் குறித்த பிரசாரம் படிப்படியாகக் குறைந்தது என்றே சொல்ல வேண்டும்.
“புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?” என்பது போன்ற சூப்பர் ஹிட் பிரசாரங்கள் தற்போது வருவதில்லை.
சில காலமாக எய்ட்ஸ்/எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அது இன்னும் முழுமையாக இல்லாமல் போகவில்லை என்பதே உண்மை. எய்ட்ஸால் தொடர்ந்து பலர் பாதிக்கப்படுவது பதிவாகியிருக்கிறது.
உலகளவில் 4 கோடியே 8 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருக்கிறது என்றால், இந்தியாவில் 25.44 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உள்ளது.
எய்ட்ஸ் நோயாளிகளின் தற்போதைய நிலை என்ன என்பதைக் கண்டறிய, விசாகப்பட்டினம் KGH நடத்தும் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை மையத்திற்கு (Anti-Retroviral Treatment Center – எச்.ஐ.வி பாதித்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்துகளை வழங்கும் ஒரு சுகாதார மையம்) பிபிசி சென்றது.
அங்குள்ள அதிகாரிகளிடமும் எச்.ஐ.வி நோயாளிகளிடமும் பேசினோம். KGH இல் உள்ள ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை மையத்தின் மருத்துவ அதிகாரி சுரேந்திரா பிபிசியிடம் தெரிவித்த தகவல்கள் இவை:
“ஆன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுவொரு நம்பிக்கைக்குரிய முன்னேற்றம். ஆனால், நாட்டிலிருந்து எய்ட்ஸ் முழுமையாக மறைந்துவிடவில்லை. விசாகப்பட்டினத்தில் உள்ள KGH ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை மையத்திற்கு மாதந்தோறும் எய்ட்ஸ் பாதித்த 50 முதல் 60 பேர் வருகின்றன.”
பட மூலாதாரம், Getty Images
ஆன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சை மருந்துகள்
ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு, ஊக்குவிப்பு மற்றும் மருந்து விநியோகம் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை பிபிசி ஆய்வு செய்தது.
அதன் ஒரு பகுதியாக, ஆன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சை மையங்களைப் பார்வையிட்டு, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எய்ட்ஸ் நிபுணர்கள் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டியின் (APSACS) அதிகாரிகளுடன் பேசினோம்.
ஆன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சை மையத்திற்கு மருந்து வாங்குவதற்காக வந்த ஆண் ஒருவரிடமும், திருநங்கை ஒருவரிடமும் பிபிசி பேசியது. “ஒவ்வொரு மாதமும் மருந்து தருகிறார்கள். தேவை என்று கேட்டால், இரண்டு மாதங்களுக்கு ஏற்ற மருந்தை ஒரே நேரத்தில் தருகிறார்கள். மருந்துகளுக்கு ஒருபோதும் பற்றாக்குறை ஏற்பட்டதில்லை” என்று அவர்கள் கூறினர்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டி வழங்கிய தகவல்களின்படி, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 2025 அக்டோபர் மாத நிலவரப்படி ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளைப் பயன்படுத்துபவர்களில் 5318 ஆண்கள், 5687 பெண்கள் மற்றும் 67 திருநங்கைகள் இருந்தனர்.
விசாகப்பட்டினம் மாவட்டத்தில், 369 குழந்தைகள் உட்பட மொத்தம் 11,441 பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
உலக எய்ட்ஸ் தினம்
1988-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ளுங்கள், தகவல் பெறுங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என்பதாகும்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு திட்டங்களில் ஈடுபட்டுள்ள அரசாங்கங்கள், சுகாதார நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், எச்.ஐ.வி. பாதிப்புடன் வாழும் மக்கள், கிராம மற்றும் நகர்ப்புற அளவிலான குழுக்கள் ஒன்றிணைந்து எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு எய்ட்ஸ் தினத்தன்று ஏற்பாடு செய்கின்றன.
இருப்பினும், சமீபத்திய நிதி குறைப்பால், களத்தில் சிறப்பாகச் செயல்பட்ட சமூகக் குழுக்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சிவில் குழுக்களை அணுக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
எச்.ஐ.வி/எய்ட்ஸ் பிரசாரங்களுக்கான நிதி குறைந்துவிட்டதா?
இந்தியாவில் நடைபெற்று வரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளிடமிருந்து நன்கொடைகள் வடிவில் ஆதரவு கிடைத்து வருகிறது.
குளோபல் ஃபண்ட், UNAIDS, UNICEF, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, எல்டன் ஜான் எய்ட்ஸ் அறக்கட்டளை, கிளின்டன் ஹெல்த் அக்சஸ் இனிஷியேட்டிவ், உலக வங்கி, US Aid Care India, மற்றும் PATH India போன்ற அமைப்புகள் இவற்றில் அடங்கும்.
எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று குறைந்து வருவதாலும், பொதுமக்களின் கவனம் இவற்றிலிருந்து திசைதிருப்பப்படுவதாலும், பல வைரஸ்கள் பரவுவது அதிகரித்து வருவதாலும் எய்ட்ஸ் நோய்க்கான நன்கொடை குறைந்துள்ளது தெளிவாகிறது என்று டாக்டர் குட்டிகுப்பலா சூர்யா ராவ் கூறினார். இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடக்கிறது.
உதாரணமாக, இந்தியாவில் HIV/AIDS விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சிக்காக அதிக அளவில் செலவிட்ட மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (BMGF) ஆகும்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டிற்காக கேட்ஸ் அறக்கட்டளை இந்தியாவில் அவஹான் என்ற பெரிய அளவிலான திட்டத்தை மேற்கொண்டது. 2003 முதல் 2015ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டத்திற்காக கேட்ஸ் அறக்கட்டளை தோராயமாக 3,300 முதல் 3,500 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் இந்த நிதி கணிசமாகக் குறைந்தது. தற்போது இந்தியாவில் தாய் மற்றும் குழந்தை சுகாதாரம், ஊட்டச்சத்து, தடுப்பூசிகள், சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற திட்டங்களில் கேட்ஸ் அறக்கட்டளை கவனம் செலுத்துகிறது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் (ஏப்ரல் 1, 2021 முதல் மார்ச் 31, 2026 வரை) ஐந்தாம் கட்டத்திற்கு இந்திய சுகாதார அமைச்சகம் மொத்தம் 15,471.94 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது .
“அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி, எய்ட்ஸ் தொடர்பான அனைத்து திட்டங்களுக்கும் செலவிடப்பட வேண்டும். எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த பிரசாரத்திற்கு தனி நிதி ஒதுக்கீடு இல்லை. எனவே, பிரசாரத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியாது. இருப்பினும், பிரசாரம் நடந்து வருகிறது. கடந்த காலங்களைப் போலவே, ‘புள்ளிராஜா’ ஃப்ளெக்சிகள் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் குறைந்துவிட்டாலும், கல்லூரிகளிலும் டிஜிட்டல் ஊடகங்களிலும் எய்ட்ஸ் குறித்த பிரசாரம் வேறு பல வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது,” என்று மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டி அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
நிதி பற்றாக்குறை குறித்த கவலை
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச எய்ட்ஸ் மாநாடு 2026 பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கிறது. அதில், எய்ட்ஸ் விழிப்புணர்வு திட்டங்களுக்கான நிதி பற்றாக்குறை முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று சர்வதேச எய்ட்ஸ் சொசைட்டி ஏற்கனவே அறிவித்துள்ளது என்று டாக்டர் குட்டிகுப்பலா சூர்யா ராவ் கூறினார் .
“விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், சுகாதார வல்லுநர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று சர்வதேச எய்ட்ஸ் மாநாடு 2026 வலியுறுத்தும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு