அஷ்வத்தின் கண்கள் தன்னைத் தொடர்வதை உணர்ந்துகொண்டேதான் அர்ஜுன் குடியிருப்புத் திடலுக்குள் நுழைந்தான். பின்வரிசையில் ஒரு நாற்காலியைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தவன், அருகிலிருந்த காலி நாற்காலியின் சாய்வுப் பகுதியில் தன் கையை அணைப்பது போலப் போட்டுக்கொண்டான். ரம்யாவும், மகள் நந்திதாவும் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். அஷ்வத் பக்கவாட்டுச் சுவரோரம் நின்று யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.
சென்ற வாரயிறுதியில் விடிந்த சுதந்திர நாள் காலை, அதற்கே உரிய காட்சிகளுடன் புலர்ந்தது. விழாவுக்காக வாங்கப்பட்ட இனிப்புகள், கொடிக்கம்பத்தில் ஏற்றப்படக் காத்திருந்த மடித்துவைக்கப்பட்ட தேசியக்கொடி, தங்கள் உடைகளைச் சரிசெய்தபடி முணுமுணுத்துக்கொண்டிருந்த குழந்தைகள் என அந்த இடம் நிறைந்திருந்தது. நாற்காலிகள் ஒழுங்கற்ற வரிசைகளில் போடப்பட்டிருந்தன; கொடிக்கம்பத்தின் அடியில் பெயிண்ட் மங்கி, துருப்பிடித்த இரும்பு எட்டிப் பார்த்தது. அர்ஜுன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து மேடை தெளிவாகத் தெரிந்த அதே சமயம், அவனால் ஓர் அரைநிழல் மூலையில் தன்னை மறைவாக வைத்துக்கொள்ளவும் முடிந்தது.
கொடியேற்றப்பட்டு, அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடி முடித்தனர். சிலர் உணர்வுபூர்வமாகப் பாட, மற்றவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்தனர். அந்தக் கூட்டத்திலும், அஷ்வத்தின் கைகள் ஒரு கணம் இறுகியதை அர்ஜுன் கவனிக்கத் தவறவில்லை. குடியிருப்பு அமைப்பு மேலாளர் மீனாட்சி முதலில் பேசத் தொடங்கினார். அவரது சொற்கள் கச்சிதமாக இருந்தன: “நம் பிள்ளைகளுக்குச் சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை நாம்தான் கற்றுத்தர வேண்டும். அதற்கும்தான் இந்த விழா, இந்தப் பேச்சுப்போட்டி, பாடல்கள், மாறுவேடப் போட்டி எல்லாம். அப்போதுதான் அதன் மதிப்பு அவர்கள் மனதில் சற்றேனும் பதியும்.” நிமிர்ந்த, கூரிய தோரணையுடன் அவர் பேசி முடித்தார்.
பொருளாளர் என்ற முறையில் அடுத்து அஷ்வத் பேசினான். அலுவலகக் கூட்டங்களில் பேசிப் பழகிய அனுபவத்தில், செதுக்கப்பட்டது போன்ற செறிவான வாக்கியங்களிலான அவன் பேச்சு. நடுவே கூட்டத்தின் இரைச்சலும் மொய்த்துக்கொண்டிருந்தது. அர்ஜுனின் உள்ளுக்குள் பதற்றம் மெல்ல தலைதூக்கியது. தன் மீது தைக்கும் பார்வைகளை அவனால் தெளிவாக உணர முடிந்தது. அவை காற்றைக் கிழித்து வந்து, அவனை ஊடுருவிப் பிளப்பதைப் போலிருந்தன. அந்த வேனில் காலை வெயிலையும் உறைய வைக்கும் கூர்ம்பனி பார்வைகள் அவை. அதில் அஷ்வத்தின் பார்வையும் அடக்கம். பேசும்போது அவன் தலை திரும்பும் ஒவ்வொரு முறையும், அவன் கண்கள் தன் மேல் பதிவதையும், மறுகணமே குற்றமிழைத்தது போல சட்டென விலகுவதையும், அவனது தாடை இறுகுவதையும் அர்ஜுனால் காண முடிந்தது.
குழந்தைகள் ஒவ்வொருவராக மேடையேறினார்கள். சிலர் பாடிய நாட்டுப் பாடல்கள் திக்கித் திணறிப் பாதியில் நின்றன; சிலரின் நடனம் நடைப்பயணமாக மாறியது; தலைவர்களைப் போன்ற சிலரின் மேடைப் பேச்சுகள், மழலையின் ஒலியழகில் பொருள் மயங்கின. ‘இந்தப் பிள்ளைகள் ஒருபோதும் இவர்களைப் போன்ற தலைவர்களாக ஆகிவிடக் கூடாது’ என்ற எண்ணத்தில் அர்ஜுனின் உதடுகள் சிலமுறை வளைந்தன. அதே சமயம், இவர்களின் பெற்றோர்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போகாத வேறு சில தலைவர்களின் உருவங்கள் அவன் மனத்திற்குள் தோன்றி மறைந்தன.
நந்திதா சிவப்புப் பாவாடை அணிந்து மேடைக்கு வந்தாள். ரிப்பன் தளர்ந்ததால் சில முடிக்கற்றைகள் காற்றில் பறந்தன. ஒளி பொருந்திய கண்களுடன் கூட்டத்தை ஒருமுறை நோக்கியவள், அர்ஜுனின் கண்களைக் கண்டதும் புன்னகைத்து, நாணிலிருந்து விடுபட்ட அம்பு போலப் பாடத் தொடங்கினாள். அவளுக்கே உரிய வாசனையை நுகர்வது போல, அர்ஜுன் தன்னை அறியாமலேயே இருக்கையில் முன்னோக்கி நகர்ந்தான். அதிர்வும் தீர்க்கமும் கொண்ட அந்தக் குரல், மெல்லிய நூலால் அவனைக் கட்டிப்போட்டது.
பாடி முடித்ததும், தன் அம்மா ரம்யாவிடம் ஒரு நிமிடம் சென்றுவிட்டு, மலையில் மோதித் திரும்பும் தென்றலைப் போல அவள் அர்ஜுனிடம் ஓடி வந்தாள். “அங்கிள், நான் பாடினதைப் பார்த்தீங்களா?” என்று கேட்டாள். அந்தக் குரலில் கூரான எதிர்ப்பார்ப்பு இருந்தது.
“உனக்காகத்தானே நந்து நான் கீழே வந்தேன்,” என்று அர்ஜுன் சிரித்தபடியே சொல்ல, அவள் அவன் தலையிலிருந்த வேப்பிலையை எடுத்துவிட்டு, “இப்போ சரியா இருக்கு,” என்றாள். “அப்போ சாயங்காலம் எனக்குக் கிண்டர் ஜாய் வாங்கித் தருவீங்க, இல்ல?”
“கண்டிப்பா.”
அவள் குரல் சட்டெனத் தாழ்ந்தது. “நீங்களும் முரளி அங்கிளும் அப்பார்ட்மென்ட்டை விட்டுப் போறீங்களாமே? அம்மா சொன்னாங்க.” செடியின் இளம் தளிரைக் கிள்ளி எறிந்தது போன்ற சோகம் அவள் முகத்தில்.
“ஐயோ, அப்படியெல்லாம் இல்லையே,” என்று பரிவுடன் சொன்னான் அர்ஜுன். “நாங்க எங்கும் போகல. ஒருவேளை போனாலும், முரளி அங்கிள் என்னைச் சும்மா விட்டுடுவானா என்ன? அவன் திங்கள்கிழமை ஊரிலிருந்து வரட்டும், நீயே அவனிடம் கேள். நீ ரொம்ப அழகா பாடினாய்னு நான் அவன்கிட்ட சொல்றேன். உங்க அம்மா கிட்ட இருந்து வீடியோவும் வாங்கிக்கிறேன், ஓக்கேவா?”
அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது. “ஒருவேளை நீங்க போனாலும், அட்லீஸ்ட் முரளி அங்கிள் இங்கேயே இருக்கட்டும். அவர் ஒருத்தரால்தான் என் பேச்சுக்கு ஈடு கொடுக்க முடியுது.” மலர்ந்தது வாசனை பரப்பியது.
அர்ஜுனும் சிரித்துக்கொண்டே, “ஆமாம், சரிதான். உன்னைப் போல முப்பது டோராவையும் ஷின்-சானையும் தினமும் பள்ளிக்கூடத்தில் மேய்க்கிறானே,” என்றான்.
“அவரை எங்க ஸ்கூலுக்கு சாராக வரச் சொல்லுங்க. அப்போ என் கையில நிறைய ஸ்டார்ஸ் கிடைக்கும். எங்களுக்கு சயின்ஸ் எக்சிபிஷன் கூட இருக்கு. அவர் எங்க ஸ்கூல்ல தர்டு ஏக்கு வந்தா சூப்பரா இருக்கும்.”
ஆறு மாதங்களுக்கு முன்புதான் முரளி அர்ஜுனுடன் வந்து தங்கியிருந்தான். அதற்கு முந்தைய சில மாதங்கள், இருவரின் டேட்டிங் காலம் ஓர் அமைதியான மிதக்கும் சொர்க்கம் போலக் கழிந்தது. முரளியுடன் முதல் சந்திப்பின் மனத்தாக்கம் அர்ஜுனுக்குத் தெள்ளத்தெளிவாக நினைவிருந்தது. மீசையுடன் ஒட்டாத மெல்லிய தாடி, தொட்டால் விரல்கள் பதியும் என கழுத்து வளைவு, காப்பியழைப்பில் இருந்த இளவெம்மை, உடலைப் போலவே கருமேகம் என குளிர்மழைக்கால வாய்ச்சுவை.
அர்ஜுனின் பொறியியல் பணியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது முரளியின் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வேலை. வீட்டிலிருந்து வேலை இல்லை, நள்ளிரவு அழைப்புகள் இல்லை, அலுவலக அரசியலும் இல்லை. இருந்தபோதும் முரளி, “உன் வேலை எவ்வளவு சுதந்திரமானது, இப்போது ஏ.ஐ. கோடிங் கூட வந்திடுச்சே,” என்பான். அவன் கிண்டல் செய்கிறானா இல்லை உண்மையிலேயே சொல்கிறானா என அர்ஜுன் ஒருபோதும் யோசித்ததில்லை. “எனக்கு அப்படியா? ஒவ்வொரு வகுப்பும் புதிது. ஒவ்வொரு வாரமும் குழந்தைகளின் அடாவடித்தனம் ஒவ்வொரு தினுசாக மாறும். ஒரே மாதிரி பாடம் நடத்தவே முடியாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனம் தேவைப்படும். அந்தக் குட்டி அரக்கர்களைப் பற்றி உனக்குத் தெரியாது!” என்பான். ‘அரக்கர்கள்’ என்பது ஒரு செல்லமான வார்த்தைதான் என்பது அர்ஜுனுக்குத் தெரியும்.
முரளி சில சமயங்களில் தன் குழந்தைப்பருவத்தை இன்னும் கைவிடவில்லை என அர்ஜுன் நினைப்பதுண்டு. அவனால் எப்போது வேண்டுமானாலும் இயல்பாக அந்த மனநிலைக்குள் சென்று வர முடியும். குழந்தைகளுடன் இருந்தாலும் சரி, நாய்க்குட்டியுடன் இருந்தாலும் சரி, அவன் நீரின் தன்மையைப் போல அவர்களுடன் கலந்துவிடுவான். நந்திதா உட்பட அனைத்துக் குழந்தைகளுடனும் அவர்களின் விளையாட்டுகளிலும் குறும்புகளிலும் அவனும் ஒருவனாகிவிடுவான். “அவர் டியூஷன் டீச்சர்களைப் போன்ற அங்கிள் இல்லை,” என்று குழந்தைகள் சொல்வார்கள். பிள்ளைகள் மொபைல் ஃபோன் கேட்காமல் இருக்கிறார்களே என்பதே பெரிய விஷயம் எனப் பெற்றோர்களும் அதை அனுமதிப்பார்கள். ஆனால், பெரியவர்கள் மத்தியில் இருக்கும்போது எந்தவித பாவனையுமின்றி முரளி அவனாகவே இருப்பான்.
இவற்றைப் போன்ற தருணங்களில்தான்—முரளி குழந்தைகளுடன் சிரிப்பதும், அப்பார்ட்மென்ட் பார்க்கிங்கில் அவர்களுடன் விளையாடுவதுமாக இருக்கும்போது—அஷ்வத்தின் நிழல் அவ்வப்போது அவர்கள் மேல் படர்ந்தது. அவன் முகச்சிரிப்பைக் கடந்து, உடல் முழுவதும் ஒருவித பதற்றம் பரவுவதை அஷ்வத் ஒரு வார்த்தைகூட பேசாமலேயே அர்ஜுனால் உணர முடிந்தது. ஒருமுறை, அஷ்வத் தங்களையே உற்றுப் பார்ப்பதை அர்ஜுன் கவனித்தபோது, அவன் உடனடியாகத் திரும்பி, அருகிலிருந்தவரிடம் மிகுந்த உற்சாகத்துடன் உரக்கப் பேசத் தொடங்கினான்.
நந்திதா ஒரு மழையருவியைப் போலத் இடைவிடாமல் பேசக்கூடியவள். அர்ஜுனின் காதருகே சென்று, “புதுசா வந்திருக்க அமுதா மிஸ் எப்பவும் ‘உர்’ருனே இருக்காங்க. உங்கள மாதிரியேதான். ஆனா நீங்களாவது கொஞ்சமா சிரிப்பீங்க, அவங்க அப்பா மாதிரி சிரிக்கிறதே இல்லை. என் கையில ஸ்டார் கூட வரைய மாட்டேங்கிறாங்க. நான் ரொம்ப வாயாடியா இருக்கேன்னு அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டாங்க. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அப்பாவும் அம்மாவைப் பத்தி இதேதான் சொன்னாங்க. ஆனா, சொல்லிவிட்டு சிரித்து, ‘அம்மாவைப் போலவே மகள்’னு சொன்னாங்க. இங்க பாருங்க,” என்று தன் கையைக் காட்டி, “அப்பா இந்தப் பிரேஸ்லெட் வாங்கிக் கொடுத்தார்,” என்றாள். அது சோட்டா பீமின் சுட்கி சிறுமியின் படத்துடன், பல வண்ண நூல்களால் பின்னப்பட்டிருந்தது.
சில நிமிடங்களில் நந்திதாவை அழைக்க ரம்யா வந்தாள். அவள் முகத்தில் லேசான கவலையலை தெரிந்தது. “நான் அஷ்வத்திடம் பேசிப் பார்த்தேன். அவர் மனதை மாற்றிக்கொள்வது போல் தெரியவில்லை. நான் வேண்டுமானால் மீனாட்சியிடம் தனியாகப் பேசிப் பார்க்கட்டுமா?”
“வேண்டாம், அதனால உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது,” என்று அர்ஜுன் மறுப்பாகத் தலையசைத்தான்.
முந்தைய நாளிரவுகூட ரம்யா அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்: “இது சரியில்லை. ‘குறைந்தபட்சம் உங்கள் படுக்கையறையிலாவது வைத்துக்கொள்ளுங்கள்’ என்றெல்லாம் அவர்களால் எப்படிப் பேச முடிகிறது?” அதனுடன் ஒரு கோபமான எமோஜியும், அவனைச் சமாதானப்படுத்த ஒரு மலர் எமோஜியும் அனுப்பியிருந்தாள்.
ரம்யா தன் குரலைத் தாழ்த்தி, “இருந்தாலும் இது தப்புதானே?” என்றாள். “அஷ்வத் சில விஷயங்களில் ரொம்பப் பிடிவாதமாக இருக்கிறான். நான் பலமுறை சொல்ல முயற்சி செய்துவிட்டேன், ஆனால்…” ஒருமுறை பூங்காவில், அஷ்வத்தை அர்ஜுனிடமும் முரளியிடமும் பேச வைக்க அவள் முயன்றதும், அதற்கு அஷ்வத்திடமிருந்து சுருக்கென்ற மறுப்பு வந்ததும், நந்திதாவைக் கையோடு அங்கிருந்து அழைத்துச் சென்றதும் இருவரின் நினைவிலும் நிழலாடியது. அந்நினைவு அவர்களுக்கிடையில் அசையா காற்றைப் போலத் தேங்கியிருந்தது.
அர்ஜுன் தான் வாங்கி வந்திருந்த கிண்டர் ஜாயை நந்திதாவிடம் கொடுத்ததும், அவள் உற்சாகம் பொறியென தெரித்தது.
அஷ்வத் அங்கு வந்ததும் நந்திதா ஓடிச் சென்று அவனைக் கட்டிக்கொண்டு, “அப்பா, இங்க பாருங்க, அங்கிள் எனக்குக் கிண்டர் ஜாய் வாங்கிக் கொடுத்தாரே,” என்றாள். “அப்படியா… சரி, நாம சாயங்காலம் ஐஸ்கிரீம் சாப்பிடப் போகலாமா? உனக்குப் பிடிச்ச சாக்லேட் கார்னெட்டோ… சரியா? நான் அங்கிள்கிட்ட பேசிட்டு வர்றேன்,” என்று சொன்னான். பின்னர் ரம்யாவைப் பார்த்து ஒரு சம்மதம் பெற்றுக்கொண்டு, “இப்போ அம்மா கூட வீட்டுக்குப் போ,” என நந்திதாவிடம் கூறினான்.
மீனாட்சியும் அஷ்வத்தும் அர்ஜுனின் வீட்டிற்கு வந்தனர். ஹாலில் இருந்த அமர்மெத்தைகளுடன் இருந்த மர நாற்காலிகளில், அதன் மீது வைத்திருந்த களிமண் பொம்மைகளை அர்ஜுன் நகர்த்தி வைத்த பிறகு, அவர்கள் அமர்ந்தனர். அர்ஜுன் அவர்களுக்கு எதிரே இருந்த இரண்டு பீன் பேகுகளில் ஒன்றில் அமர்ந்துகொண்டான்.
“நீங்களும் முரளிதரனும் வேறு இடம் பார்த்துக்கொள்வது நல்லது,” என்று மீனாட்சி அமைதியாக ஆரம்பித்து, பின்னர் கூர்மையாகத் தொடர்ந்தார். “முன்பே சொன்னதுதான். இது குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு; இங்கு குழந்தைகள் இருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு எப்படிப்பட்ட முன்மாதிரியாக இருக்கிறோம் என்று கேட்டுப் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.” பலரின் குரல் தனக்கு வலிமை சேர்க்கும் என்பது போல அவர் நிமிர்ந்து அமர்ந்தார்.
“சில வருடங்களுக்கு முன்பு கூட இதேபோல நான்கு பேச்சுலர்ஸ் தங்கியிருந்தார்கள். இரவு நேர பார்ட்டி, காதைப் பிளக்கும் இசை என மொத்த பிளாக்கையும் தொந்தரவு செய்தார்கள். இந்தக் குடியிருப்புக்கு என்று ஒரு நன்மதிப்பு இருக்கிறது. உங்கள் சூழல் வேறு விதமாக இருக்கலாம், ஆனால் மற்றவர்களைப் பொறுத்தவரை இதுவும் ஒரு தொந்தரவாகவே பார்க்கப்படுகிறது.”
அர்ஜுன் தன் குரலை நிதானப்படுத்திக்கொண்டு, “நாங்களும் ஒரு குடும்பம்தானே?” என்றான். அடக்கப்பட்ட கோபத்தின் பாரத்தைச் சுமந்த அந்தச் சொற்கள், கத்தலாக இல்லாமல் அளவாக வெளிவந்தன.
மீனாட்சி மீண்டும் பேசினார், “நீங்கள் சொல்வது வேறு. இது நம் கலாச்சாரத்தில் இல்லாதது. நீங்கள் வேண்டுமானால் புதிதாகக் கட்டப்படும் உயர்அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குச் செல்லலாமே. அங்கு உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. அங்கே யாருக்கும் யாரையும் தெரியாது. நீங்கள் விரும்பியபடி இருக்கலாம். ஆனால் இங்கே அது முடியாது.”
அர்ஜுன் ஒரு பெருமூச்சுடன் தன் குரலை உறுதியாக்கிக்கொண்டு, “பாருங்கள் மேடம், நாங்க எந்தத் தவறும் செய்யவில்லை என்று கடந்த கூட்டத்திலேயே சொல்லிவிட்டோம். இப்போது முரளி ஊரில் இல்லை, அவன் வந்ததும் பேசிக்கொள்ளலாம்,” என்றான்.
அஷ்வத்தின் கண்கள் அர்ஜுனை நேருக்கு நேர் சந்திக்க மறுத்தன. கைகளைக் கட்டிக்கொண்டே அவன் பேசினான், “நாங்க டீசன்ட்டாகத்தானே சொல்கிறோம். எங்களை வேறு மாதிரி நிர்ப்பந்திக்க வைக்காதீர்கள்.” சொன்னதை விடச் சொல்லாததில் அதிக அழுத்தம் இருப்பது போல நிறுத்திப் பேசினான். “அர்ஜுன், உனக்கு என்னைத் தெரியும். இதைச் செய்ய எனக்கு பிடிக்கவில்லை என்றும் உனக்குத் தெரியும். ஆனால் நான் என் குடும்பத்தையும், என் மகளையும் பற்றி யோசிக்க வேண்டும். நீ மாறிவிட்டாய், முன்பிருந்த மாதிரி இல்லை. நீ மட்டும் தனியாகத் தங்குவதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.” பேசும்போது அவன் கால்கள் தரையைத் தாளமிட்டன, கைகள் இறுகி முழங்காலைப் பற்றிப் பிடித்தன.
அர்ஜுனின் மனம் கல்லூரி நாட்களுக்குச் சென்றது. அவர்கள் இருவரும் தங்கியிருந்த அறைக்குச் சென்றது. எளிதாக உதிர்ந்த காரணமற்றச் சிரிப்புகளுக்கு சென்றது. ஒருநாள் இரவு, விடுதி அறையில் அர்ஜுன் கோட் அடித்துக்கொண்டிருந்தபோது, அஷ்வத் ஓயாமல் ஜோக்கடித்துச் சிரித்துக்கொண்டிருந்த காட்சி நினைவுக்கு வந்தது. நட்பின் தாளம், கீபோர்டின் ஓசையைப் போல நில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்தது.
கல்லூரியின் இறுதியாண்டில், அர்ஜுன் இணையத்தின் மூலம் தன்னைப்பற்றி அறிந்து, ஒரு புதிய தெளிவை நோக்கிப் பயணித்தான். அதே காலகட்டத்தில், அஷ்வத் தனக்கிருந்த பெண் தோழிகளின் உறவையும் துண்டித்துவிட்டு, தனக்குள்ளேயே சுருங்க ஆரம்பித்தான். காரணம் கேட்ட அர்ஜுனுக்கு, ‘குடும்ப அழுத்தம், கடமை’ என்ற பதில்களே கிடைத்தன. கல்லூரி முடிந்ததும் அர்ஜுன் தன்னைப்பற்றி அஷ்வத்திடம் வெளிப்படுத்தியபோது, முதலில் அமைதியே பதிலாகக் கிடைத்தது. பின்னர் ஒருவித வெற்று ஏற்பு. இறுதியில் வலுவான அறிவுரை. “உன் குடும்பத்தைப் பற்றி யோசி. உனக்கு ஒரு மனைவி வேண்டும், குழந்தைகள் வேண்டும். இதுவெல்லாம் வாழ்க்கையின் ஒரு கட்டம். நீ கொஞ்சம் உறுதியாக இருந்தால், இந்த உணர்வுகள் எல்லாம் மறைந்துவிடும்.” இத்தனை வருடங்களில் சொற்கள் மாறினாலும், அந்தப் பல்லவி மட்டும் மாறவேயில்லை.
இப்போதும், இதோ தன் வீட்டு வரவேற்பறையில், அதே பிடிவாதச் செங்கோலைத் தாழ்த்தாத அஷ்வத் அமர்ந்திருந்தான். தன் வேலையில் சத்தத்திலிருந்து சிக்னலைப் பிரித்தெடுக்கத் தெரிந்த அர்ஜுனுக்கு, இரைச்சல் ஒரு நிலைக்கு மேல் அதிகமானால் சிக்னலை முழுமையாக இழக்க நேரிடும் என்பதும் தெரியும். அவன் பேச வாயெடுத்தபோது, கரையில் கட்ட முயன்ற படகின் கயிற்றுநுனியும் விட்டு விலகிச் செல்வதைப் போல அஷ்வத் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டான். மீனாட்சி தன் கைப்பையை எடுத்துக்கொண்டு எழுந்தபோது நிலவிய அமைதி, அந்த உரையாடல் முடிந்துவிட்டதற்கான அறிகுறியாக இருந்தது.
000
தன் அலுவலகத்திற்கு அருகில் இருந்ததால்தான் அர்ஜுன் இந்தக் குடியிருப்பைத் தேர்ந்தெடுத்தான். அஷ்வத்தின் குடும்பமும் அதே இடத்தில் வசித்தது ஊழ்விருப்போ வெறுப்போ தெரியவில்லை. அர்ஜுன் குடிவந்த முதல் நாள், பொருட்களை எடுத்து வைக்க அஷ்வத் உதவிசெய்து, “என்ன வேண்டுமானாலும் கேள்,” என்று கூறியிருந்தான். பின்னர், அவன் அழைப்பின் பேரில் அர்ஜுன் அவர்கள் வீட்டிற்குச் சாப்பிடச் சென்றான். நுழைந்ததும் வீட்டின் நிறவெளி கண்ணில் இசைந்து நுழைந்தது. மென்மையான மஞ்சள் திரைச்சீலைகள், பிரவுன் நிற சோஃபா, தென்றல் பட்டு அசைந்து மணியோசை எழுப்பும் அலங்காரத் தொங்கான்கள் என அழகாக இருந்தது. வரவேற்பறையின் சுவரில், அவர்களின் திருமண வரவேற்புப் புகைப்படம் பெரிதாக மாட்டி வைக்கப்பட்டிருந்தது.
உரையாடலின்போது அஷ்வத் வீட்டைச் சுட்டிக்காட்டி, “இந்த அலங்காரம் எல்லாம் ரம்யா செய்ததுதான், எனக்கு இதிலெல்லாம் ஈடுபாடு இல்லை,” என்றான். ரம்யா புன்னகையுடன், “ஆமாம், இந்த வண்ணத் தேர்வுகள் எல்லாம் என்னுடையதுதான்,” என்றாள். திருமணப் புகைப்படத்தைச் சுட்டி, “ஆனால் அது மட்டும் இவனுடைய யோசனை. இந்தப் புகைப்படம் ஹாலில் இருக்க வேண்டும் என்பது அஷ்வத்தின் ஆசை,” என்றாள். அந்தப் புகைப்படத்தில் ‘ஆர்.ஆர்.’ என அழகான வளையெழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அதைக் கூறும்போது அஷ்வத்தின் கண்களில் பெருமிதம் மின்னியது.
ரம்யா அர்ஜுனிடம், “நீங்களும் அதே நிறுவனத்தில்தான் வேலை செய்கிறீர்கள் என்று சொன்னான்,” என்றாள்.
“ஆமாம், ஆனால் வேறு துறை. நான் டேட்டா இஞ்சினியர். எனக்கு அஷ்வத்தைக் கல்லூரியில் இருந்தே தெரியும்.” பின்னர் அஷ்வத்தைப் பார்த்து, “அவன் அப்போதிலிருந்தே இலக்கில் தெளிவாக இருப்பான். இன்டர்ன்ஷிப் கிடைத்து, அதையே வேலையாக மாற்றி, இப்போது வேலையிலும் வேகமாக முன்னேறிவிட்டான். அவனுடைய வேகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்குமே,” என்றான்.
ரம்யா மெல்லிய புன்னகையுடன், “அஷ்வத்துக்கு எப்போதுமே வேலைதான் முக்கியம். எப்போதும் நந்திதாவுடன் நேரம் செலவிடுவதே குறைவுதான். நான் ஒருவாறு சமாளித்துக்கொள்கிறேன்,” என்றாள். பிறகு, அவள் நந்திதாவை அழைத்து அர்ஜுன் அங்கிளுக்கு ‘ஹாய்’ சொல்லச் சொன்னாள். அஷ்வத் பேச்சை மாற்றி, “இதுதான் உழைக்க வேண்டிய வயது. நாற்பதைத் தாண்டினால் என்ன சாதித்துவிட முடியும்? வாழ்க்கையில் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. ரம்யா எனக்குக் கிடைத்தது என் பாக்கியம். அவள் எல்லாவற்றையும் சரியாகச் சமன் செய்கிறாள்,” என்றான்.
ரம்யா இயல்பாகக் கேட்டாள், “சரி, அர்ஜுன், உங்களுக்குத் திருமணத் திட்டம்? கேர்ள் பிரெண்ட்?”
அர்ஜுன் எண்ணற்ற முறை ஒத்திகை பார்த்த பதிலைச் சொன்னான். “சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறேன். இப்போதைக்குத் தனியாள் தான். தேடிக்கொண்டுதான் இருக்கிறேன், எனக்கேற்ற ஒரு பையனை.”
அந்த பதிலை மற்றவர்களின் மனநிலையை அளக்கும் ஒரு அளவுகோலாகவே அவன் பயன்படுத்தி வந்தான். ரம்யாவின் முகபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை; அவள் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரியவில்லை. ஆனால், அஷ்வத்தின் தோள்கள் ஒரு கணம் இறுகின. அவன் பார்வை தாழ்ந்து, நந்திதாவை உள்ளே செல்லுமாறு கூறினான். பிறகு, “கல்லூரி முடித்ததிலிருந்தே நீ இதையேதான் சொல்கிறாய். அதற்கு முன் நீ சாதாரணமாகத்தான் இருந்தாய். வேலைக்குப் போன பிறகு மாறிவிட்டாய்.”
“நான் எப்போதுமே இப்படித்தான் இருக்கிறேன்,” என்று அர்ஜுன் நிதானமாகப் பதிலளித்தான். “இப்போதுதான் தைரியமாக வெளியே சொல்கிறேன், அவ்வளவுதான். நம் ஊரின் நிலைமை உங்களுக்குத் தெரியுமே…”
ரம்யா அதை ஆமோதித்தாள். “ஆமாம், கஷ்டம்தான். ஆனா கவலைப்படாதீங்க.”
“அப்படி இருந்திருந்தால் கல்லூரியிலேயே எங்களுக்குத் தெரிந்திருக்குமே? எல்லாரையும் போலத்தானே அவனும் இருந்தான்,” என்றான் அஷ்வத்.
“இப்போது என்ன சொல்லனும்? எல்லாரையும் போல நானும் பெண்களை சைட் அடிச்சேன்னு என்று சொல்ல வேண்டுமா? ஆமாம் ரம்யா, அப்படித்தான் இருந்தேன். வேறு என்ன செய்திருக்க முடியும்? ஆனால் அஷ்வத்தைப் போல எனக்கு நிறைய கேர்ள் பிரெண்ட்ஸ் இருந்ததில்லை,” என்றான் அர்ஜுன். சொன்ன பிறகு, இதைச் சொல்லியிருக்கக் கூடாதோ என்று அவனுக்குத் தோன்றியது.
“ஆமாம், அஷ்வத் சொல்லியிருக்கிறான்,” என்று ரம்யா கூறியதும் அர்ஜுனின் பதற்றம் தணிந்தது.
அஷ்வத் உடனே, “ஒன்றும் அதிகமாக இல்லை. ரம்யா, உன்னிடம் சொல்லியிருக்கிறேனே, இரண்டு பேர்தான். முதல் மூன்று வருடங்களில் இரண்டு கேர்ள் பிரெண்ட்ஸ் இருந்தாங்க. அதற்குப் பிறகு எதுவும் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்,” என்றான்.
“ஆமா, நம் வகுப்பிலேயே முதலில் திருமணம் செய்துகொண்டவன் நீதானே,” என்றான் அர்ஜுன்.
அஷ்வத் கேடய முகத்தோடு, “ரம்யா, உனக்கு எங்க குடும்பத்தைப் பத்தித் தெரியுமே? நான் ஒரே பையன், வேலைக்குப் போக வேண்டும், என் பெற்றோர் பேரன் பேத்தியைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இப்போது பார், அவர்கள் நந்திதா மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். ரம்யா, உனக்குத் தெரியாது, நான் அர்ஜுனுக்கு இதைத்தான் சொல்கிறேன், அது அவன் நல்லதுக்குத்தான்.”
அப்போது அர்ஜுனை நோக்கிய ரம்யாவின் கண்ணசைப்பு, அஷ்வத் உடைத்த பாலங்களுக்கான கற்களை அடுக்கிக்கொண்டுவந்தன போல் இருந்தது.
000
முரளி தன்னுடன் வந்து தங்கிய பிறகு, அர்ஜுனின் குடிமைச்சூழலே மாறிப்போனது. ரம்யாவுக்கு அதில் மிகுந்த மகிழ்ச்சி. “இந்த சனிக்கிழமை பிட்சா நைட், நீங்க இருவரும் கண்டிப்பாக வர வேண்டும்,” என்று அழைத்தாள். அவர்களும் பாதாம் கேக் செய்து எடுத்துச் சென்றார்கள்.
அர்ஜுன் அஷ்வத்திடம், “என்ன அஷ்வத், இப்போதெல்லாம் என்னிடம் அதிகம் பேசுவதே இல்லையே?” என்று கேட்டான். முரளி, ரம்யா மற்றும் நந்திதாவுடன் பேசிக்கொண்டிருப்பதை நோக்கியபடியே அஷ்வத் சொன்னான், “அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே. நம் இருவருக்குமே வேலைப்பளு அதிகம். சோ நேரம் அப்படியே போய்விடுகிறது. நான் சொல்வது சரிதானே?”
பிறகு, தொடர்ந்து “உன் பெயர்தான் அப்பார்ட்மென்ட் முழுவதும் பேசப்படுகிறது,” என்றான் அஷ்வத்.
“அப்படியா? அப்படி இருக்காதே, முரளியின் பெயராகத்தான் இருக்கும். நான் யார் என்று உங்கள் இருவருக்கு மட்டும்தானே தெரியும்,” என்று அர்ஜுன் சிரித்தான்.
அது உண்மைதான். முரளி வந்ததிலிருந்து, தன் இயல்பான குணத்தால் அனைவரிடமும் எளிதாக நெருக்கமானான்.
“முரளி வீடா? அதோ, ‘பி’ பிளாக்கில் மூன்றாவது மாடி,” என்று காவலாளி இப்போது உணவு டெலிவரி செய்பவர்களைச் சரியாக அனுப்பிவிடுகிறார். அர்ஜுன் அதற்காகக் கீழே செல்ல வேண்டிய தேவை இருப்பதில்லை. “உன் நண்பன் முரளி கொடுத்த பிளம்பர் எண்ணில் பேசினேன். இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. குழாய் ஒழுகல் நின்றுவிட்டது என்று முரளியிடம் என் தாங்க்ஸ் சொல்லிவிடு,” என்று வாசுதேவன் தன் ஸ்கூட்டியில் சென்றுகொண்டே கூறினார். உடற்பயிற்சிக் கூடத்தில் ராம்குமார், “ப்ரோ, முரளி ப்ரோ கேட்டாரு, இந்த வார இறுதியில் நம் பேக்கரியில் ரெட் வெல்வெட் கேக் கிடைக்கும் என்று சொல்லிடுங்க,” என்றார். நாட்கள் செல்லச் செல்ல அர்ஜுனும் முரளியும் சேர்ந்தே அப்பார்ட்மென்ட் திடலில் நடைப்பயிற்சிக்குச் செல்லத் தொடங்கினர்.
அஷ்வத் தொடர்ந்து, “ஆமாம், நேற்றுகூடப் பார்த்தேன். சூப்பர் மார்க்கெட் போயிட்டு வந்தீங்க, இல்ல?” என்று கேட்டான். அவன் குரலில் ஒருவித தீவிரம் இருந்தது. “இருவரும் தோளோடு தோள் உரசி, கைகளைப் பிடித்துக்கொண்டு… ரொம்ப ஈசியா இருக்கோ? ஜாக்கிரதையாக இரு, அர்ஜுன். என் அருகில் வாசுதேவனும் இருந்தார். இதெல்லாம் தேவையா என்று யோசித்துக்கொள். தட்ஸ் டூ மச்.” அவன் அர்ஜுனிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை.
000
கடந்த மாதம் ஒரு மாலையில், நந்திதா முரளியிடம் ஓடிவந்து, “அங்கிள், நான் உங்க இரண்டுபேரையும் டிவியில் பாத்தேனே. கண்ணுக்கு கலர்கலரா மாஸ்க் போட்டிருந்தீங்க. உங்களைச் சுற்றி நிறைய கலர்சுல கொடிகொடியா இருந்தது. எனக்கும் அதுபோல ஒரு மாஸ்க் வாங்கித் தருவீங்களா?” என்று கேட்டாள்.
முரளி ஒரு கணம் அர்ஜுனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, “உன் அம்மா அப்பாவிடம் கேட்க வேண்டியதுதானே?” என்று கேட்டான். அவள் தலையசைத்து, “அப்பாகிட்ட கேட்டேன், அவர் திட்டிட்டார். ஒரு வாரத்திற்கு ஷின்-சான் பார்க்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்,” என்றாள்.
முரளி குனிந்து அவள் கண்களைப் பார்த்து, “நான் உங்க அம்மாவிடம் பேசுகிறேன், சரியா? இப்போ வா, நாம் களிமண்ணில் ஏதாவது செய்யலாம். நிறைய கலர்ஸ் இருக்கு,” என்று சொல்வதை அர்ஜுன் கேட்டான். ஒரு மரம் வளர்வதற்கு முன்பே, நாம் அதைச் சுற்றிச் சுவர் எழுப்பி வேலி போட்டுவிடுகிறோம். அவள் பார்த்த காட்சிக்கும், அதை அவள் புரிந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட விதத்திற்கும் இடையிலான இடைவெளியை அவன் உணர்ந்தான். ஒரு குழந்தையின் களங்கமற்ற கேள்வி, பெற்றோராலும் சமூகத்தாலும் வரையப்பட்ட கனத்த கோடு ஒன்றை எப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
முரளியுடன் இருப்பதுதான் தனக்கு அந்த வேலிகளை உடைக்கும் தைரியத்தைக் கொடுக்கிறது என்பதை அர்ஜுன் உணர்ந்தான்.தனியனாக, வெளிச்சம் படாமல் தலைகுனிந்து நடந்திருப்பான். ஆனால் முரளியுடன் இருக்கும்போது, நடவாத வெளியில் நடக்கவும், எட்டாத உயரங்களை எட்டவும் முயன்றுகொண்டிருக்கிறான். முரளியின் அருகாமையில், பொது இடங்களில் புதைமணலில் நிற்பது போன்ற உணர்வின்றி, ஓர் அமைதியான உள்ளியல்புடன் அவனால் இருக்க முடிகிறது.
முரளியிடம் உலைவற்ற நிதானமன்றி வேறில்லை. வரப்போகும் பாதையின் திருப்பங்கள் அனைத்தும் அவனுக்கு முன்பே தெரியும் என்பது போல அவன் நடப்பான். அவனுடன் வாழ்வது அர்ஜுனுக்கு ஒருவித இலகுவான உணர்வைக் கொடுத்தது. தயக்கமற்ற தாளம் போல இருந்தது. அர்ஜுன் தன்னுடன் வந்து வாழுமாறு கேட்டபோது, எந்தவித நாடகமும் இல்லாமல் இயல்பாக ‘சரி’ என்று முரளி ஒப்புக்கொண்டான். ஆர்ப்பாட்டமான உறுதிமொழியைவிட, எளிமையான ‘சரி’ என்பதற்குத்தான் என்னவோர் எடைமிகுதி! அது அவன் மனத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு நிகழ்வு போலிருந்தது. இருவரின் பெயர்களும் வாடகை ஒப்பந்தத்தில் இணைந்தன. திருமணமாகாத இரு ஆண்கள் ஒரே வீட்டில் தங்குவதில் பொதுவாக எந்தச் சிக்கலும் இல்லை. மேலும், அர்ஜுனின் பொறியாளர் வேலையை விட, முரளி ஆசிரியராக இருப்பது கூடுதல் மரியாதையைப் பெற்றுத் தந்தது.
000
சுதந்திர நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த குடியிருப்புவாசிகள் கூட்டத்திற்கு அர்ஜுனுக்கும் முரளிக்கும் அழைப்பு வந்தது; எல்லாவற்றையும் மாற்றியது. “எங்களுக்கு உங்கள் மீது அதிகாரப்பூர்வமாகப் புகார் வந்துள்ளது,” என்று மீனாட்சி தொடங்கினார். அதைத் தொடர்ந்து கேள்விகளும், மிரட்டல்களும், அறிவுரைகளும் கொட்டின.
“நாங்கள் உங்களைத் தொலைக்காட்சியில் பார்த்தோம். மிகவும்… கண்களைப் பறிக்கும் நிறங்கள்…” என்று பக்கத்து பிளாக் காமாட்சியம்மாள் ‘நிறங்கள்’ என்ற வார்த்தையை முகச்சுளிப்புடன் உச்சரித்தார். வாசுதேவனும் அவருடன் சேர்ந்துகொண்டு, “இது ஒரு ஒழுக்கமான சமூகம். இனிமேல் இதுபோல அப்பார்ட்மென்ட் வளாகத்தில் நடந்துகொள்ளாதீர்கள். குறைந்தபட்சம் உங்கள் படுக்கையறையிலேயே வைத்துக்கொள்ளுங்கள்,” என்றார். ரம்யா குறுக்கிட்டு, “சார், இப்போது என்ன ஒழுக்கம் குறைந்துவிட்டது என்கிறீர்கள்? அவர்களால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லையே,” என்று பலமாக சொன்னதை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
அறையில் பல முணுமுணுப்புகள் எழுந்தன. சிலர் அவர்களைக் கண்கொட்டாமல் பார்த்தனர். வேறு சிலரோ பார்வையைத் தவிர்த்து நாற்காலியில் நெளிந்தனர். அஷ்வத் அமைதியாக இருந்தான்.
“அதில் என்ன தவறு இருக்கிறது?” என்று முரளியின் குரல் தணிவானகவும் உறுதியாகவும் ஒலித்தது. “கைகளைப் பிடித்து நடப்பது இயல்பானதுதானே.”
அஷ்வத், “காலம் மாறிவிட்டது. இப்போது கைகளைப் பிடித்து நடப்பது நட்பாகப் பார்க்கப்படுவதில்லை. இது குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரும் நல்ல பாடம் அல்ல,” என்றான்.
“நாங்கள் நடிக்கவில்லை. நாங்கள் பார்ட்னர்கள், இணைந்து வாழ்கிறோம்.” இந்தப் பதில் அறையைப் பிளவுபடுத்தியது. யாரோ குரலை உயர்த்தினார். திருப்தியின்மையின் சலசலப்பு பரவியது.
“அப்படியானால் அதை உங்கள் வீட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்!” என்று அஷ்வத் கத்தினான்.
“நீ உன் மனைவியின் கையைப் பிடித்து நடக்கக் கூடாது என்று நாங்கள் சொன்னோமா? நீங்கள் குடும்பமாகச் செல்லும்போது நாங்களா உங்களை ஒரு கிலோமீட்டர் தள்ளி நடக்கச் சொன்னோம்?” என்று முரளி கேட்டான்.
அஷ்வத் முழங்கிக்கொண்டு முரளியின் சட்டையைப் பிடித்தான். “தாயோளி! கொஞ்சம் இடம் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறிவிடுகிறீர்கள். உங்களைப் போன்ற ஆட்கள் என்னைப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகத்திலேயே என்னால் ஜிம்முக்குக் கூட நிம்மதியாகப் போக முடியவில்லை.” அந்த வார்த்தைகள் கோபத்தையும் தாண்டிய ஒரு ஆழமான உணர்ச்சியிலிருந்து சிதறி விழுந்தன.

“மிஸ்டர் அஷ்வத், இதெல்லாம் வேண்டாம், போய் உட்காருங்கள். வார்த்தைகளைக் கவனித்துப் பேசுங்கள்,” என்று மீனாட்சி கடிந்துகொண்டார்.
அர்ஜுன் அதிர்ச்சியுடன் சொன்னான், “அஷ்வத், எங்களைப் பற்றி நீதான் அதிகமாக யோசிக்கிறாய். நாங்கள் யாரையும் பின்தொடரவில்லை, யாரையும் தேவையில்லாமல் பார்க்கவுமில்லை. நீ உன் மனைவியுடன் கைகோத்து நடக்கவில்லை என்றால், அது நீ உன் வீட்டில் பேச வேண்டிய விஷயம்.”
000
திங்கட்கிழமை காலை, முரளியின் கால்தடங்கள் வீட்டுக்குள் வருவதற்காக இரண்டு கோப்பைகளில் காபி ஆவி பறக்க மேசையில் காத்திருந்தது. லேசாகத் திறந்திருந்த கதவின் வழியே, புத்துணர்ச்சியான வெளிக்காற்று நுழைந்து, இரவு சேர்ந்த வெப்பத்தை வீட்டிலிருந்து வெளியேற்றிக்கொண்டிருந்தது. முரளி வந்ததும், மீனாட்சியும் அஷ்வத்தும் வந்து பேசியதை அவனிடம் கூறி, இன்னும் ஓரிரு மாதங்களில் வேறு வீட்டிற்குச் செல்வதுதான் நல்லது என்ற தன் முடிவைச் சொல்ல அர்ஜுன் காத்திருந்தான்.
முரளியின் முகத்தைப் பார்த்ததுமே, அவனிடம் இயல்புக்கு மாறான ஒரு மாற்றத்தை அர்ஜுனால் உணர முடிந்தது. வீட்டிற்குத் திரும்பும் வழக்கமான உற்சாகமோ, பெயரைழைப்போ இல்லை. முகம் உப்பியிருந்தது, காதோரம் சிவந்திருந்தது, ஏதோ ஒரு பெரும் ரகசியத்தைச் சுமப்பது போல அவன் கண்கள் உள்நோக்கிச் சுழன்றிருந்தன. அருகமர்ந்தபோது, முரளியின் கழுத்து சிவந்திருந்ததை அர்ஜுன் கவனித்தான். அந்தக் கருஞ்சிவப்புத் தீற்றலுக்கு அங்கு வேலையே இல்லை. முரளியின் காய்ந்த உதடுகள் பிரிந்து, “அஷ்வத்” என்ற ஒரு வார்த்தையை மட்டும் உதிர்த்தன.
அர்ஜுனுக்குள் இருக்கும் வழக்கமான சிறு தயக்கமும் அந்த நொடியில் மறைந்தது. “இப்போதே போய்க் கேட்கலாம் வா,” என்று சொல்லியபடியே டெட்டாலும் தண்ணீரும் கொண்டு வந்தான். முரளி அவன் மணிக்கட்டைப் பிடித்தபோது, அந்தப் பிடியின் வெப்பத்திலேயே அர்ஜுன் தன் முடிவை மாற்றிக்கொண்டான்.
முரளி நாக்குழறும் குரலில் கூறினான், “அவன் என்னை அடிக்கவில்லை.” நடுங்கும் கையால் தன் சட்டைக் காலரை விலக்கி, அது உதடுகளின் அழுத்தத்தால் ஏற்பட்ட கறை என்று காட்டி, “லிஃப்டில் வரும்போது,” என்றான்.
ஒரு வயலின் கம்பியைத் திருகி முறுக்கேற்றுவதைப் போல, அர்ஜுனின் மனதில் ஏதோ ஒன்று அழுத்தி இழுத்தது. நடுங்கிக்கொண்டிருந்த முரளியின் கைகளை அவன் இறுகப் பற்றிக்கொண்டான். ஆனாலும், நடுக்கம் நின்றபாடில்லை. முரளியின் கையில் வீட்டுச் சாவி இன்னும் இறுக்கமாகப் பிடிக்கப்பட்டிருந்தது.
நான்கு பக்கமும் மூடிய அந்த லிஃப்டின் கண்ணாடிச் சுவர்களில் தங்கள் பிம்பங்கள் பிரதிபலித்துக்கொண்டிருக்க, அஷ்வத்தின் செயலுக்கு எதிராகத் தன் கைகளை மார்புக்குக் குறுக்கே தடுப்பாக வைப்பது மட்டுமே அவனால் செய்ய முடிந்த ஒரே காரியமாக இருந்தது. கத்துவதற்கோ, ‘விடு’ என்று சொல்வதற்கோ கூட அவனுக்கு நேரம் இருக்கவில்லை. அவன் கழுத்தில் தன் வன்முறையைப் பதித்துவிட்டு, “என்னை மன்னிச்சிரு,” என்று அஷ்வத் சொன்னது இன்னும் முரளியின் காதுகளில் இருந்து அகலவில்லை. லிஃப்ட் கண்ணாடியில் தெரிந்த அஷ்வத்தின் பிம்பம் அந்தக் கணம் ஆயிரமாகப் பெருகியது போல, அவன் குரல் இப்போது பன்முறை எதிரொலித்துக்கொண்டே இருந்தது.
படுக்கையிலேயே போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த முரளியை அர்ஜுனால் உள்வாங்க இயலவில்லை. அதே போர்வையை ஒரு பறக்கும் கம்பளமாகவோ, பருந்தாகவோ மாற்றிப் பறக்கும் திறன் கொண்டவன், இப்போது அதுவே ஒரு கூண்டாக, ஒரு சுருள்குகையாக மாற, அதற்குள் ஒடுங்கிக்கிடந்தான். கரையா வடுவாய் மனத்தில் உறையும் இந்தக் காயத்தை, தூரம் ஒருவேளை மறக்கடிக்கச் செய்யலாம் என்று அவர்கள் இருவரும் உடனடியாகக் கிளம்ப முடிவெடுத்தனர்.
மறுநாள் கிளம்புவதற்காக சில நாட்களுக்குத் தேவையான பொருட்களை மட்டும் அர்ஜுன் இரவு முழுவதும் எடுத்து வைத்துக்கொண்டான். ஒரு நண்பரின் வீட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு, வேறு இடம் தேடலாம் என்பது திட்டம்.
அடுத்த நாள் காலையில், நந்திதா வெறுங்காலுடன் இரண்டு மாடிகள் ஏறி அவர்கள் வீட்டிற்கு வந்தாள். பள்ளிச் சீருடையில் இல்லை. “நானும் அம்மாவும் பாட்டி வீட்டிற்குப் போகிறோம். அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கொண்டார்கள்,” என்றாள்.
வாசலின் நிலைப்படியைப் பிடித்தபடி ஓரமாக நின்றுகொண்டு, அவள் கண்கள் வீட்டிற்குள் அலைபாய்ந்தன. அவள் சிறுநெஞ்சு பெண்டுலத்தை விட இரு மடங்கு வேகமாக அடித்துக்கொண்டது. “பாட்டு கிளாஸ் முடிஞ்சு அம்மாவும் நானும் வீட்டுக்கு வந்தப்போ, வாசல்கிட்ட அப்பா மாதிரி செருப்பு ஒன்னு இருந்தது. ஆனா அது அப்பாவுடையது இல்ல. ஒரு அங்கிள் அவசரமா வெளியே வந்தார், அவரை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை. அப்பா கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசல. சோபா மூலையில் உட்கார்ந்துட்டார். அம்மா எங்க டிரஸ்ஸைப் பேக் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பாட்டி வீட்ல இருந்துதான் ஸ்கூல்னு அம்மா சொன்னாங்க.”
அவள், “நீங்களும் அங்கிளும் என்ன வந்து பாப்பீங்களா?” என்று கேட்கத் தொடங்கும்போதே, “கண்டிப்பா,” என்று அர்ஜுனின் குரல் தானாகப் பதிலளித்தது.
– விஜய் ரெங்கராஜன்
நன்றி : அகழ் இணையம்
The post உள்ளச்சம் | சிறுகதை | விஜய் ரெங்கராஜன் appeared first on Vanakkam London.