உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் இந்த அரசின் ஆட்டம் முடிவுக்கு வரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நாம் சாதாரணமாகக் கருதவில்லை. சவாலாகவே கருதுகின்றோம். எனவே, கடந்த தேர்தல்களை விட எவ்வாறு இம்முறை தேர்தலில் வாக்குகளை அதிகரித்துக் கொள்வது என்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தலில் நாம் கொழும்பில் வெற்றி பெற்றோம். எனினும், பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தோம். எனவேதான் இந்தத் தேர்தல் எமக்குச் சவாலானது என்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். எனினும், தற்போது தேர்தல் நிறைவடைந்து 6 மாதங்கள் கடந்துள்ளன.
அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தச் சவாலை எம்மால் வெற்றி கொள்ள முடியும் என்று நம்புகின்றோம். வைத்தியர் ருவைஸ் அனீபா தலைமையில் சிறந்த குழுவொன்றை கொழும்பில் களமிறக்கியிருக்கின்றோம்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய போது கொழும்பில் அதிகளவான வாக்குகளைப் பெற்றிருந்தார். பொதுத் தேர்தலில் அவரது ஆதரவாளர்கள் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர். எனவே, இம்முறை தேர்தலில் அந்த வாக்குகளை எவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் ஈர்ப்பது என்பது குறித்து அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத்துக்கான பட்டியல் எமக்கு எந்த வகையில் சவாலானதல்ல. அவ்வாறன்றி ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவு செய்யப்பட்டால் அவர்கள் எம்முடன் இணைந்து செயற்படுவர். எனவே, ஐ.தே.க. தனித்துக் களமிறங்குவதால் எமக்கு எவ்வித சிக்கலும் இல்லை.
தற்போது அரசுக்கு மக்கள் செல்வாக்கு குறைவடைந்து செல்கின் றது. எனவேதான் அது முழுமையாக வீழ்ச்சியடைய முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசு மும்முரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.” – என்றார்.
The post உள்ளூராட்சித் தேர்தலுடன் அநுர அரசின் ஆட்டம் முடிவுக்கு! – முஜிபுர் எம்.பி. கருத்து appeared first on Vanakkam London.