• Fri. Apr 25th, 2025

24×7 Live News

Apdin News

ஊட்டியில் ஆளுநர் கூட்டிய மாநாடு – மாநில பல்கலை. துணை வேந்தர்கள் புறக்கணிப்பு | Governor’s conference in Ooty – State University Vice-Chancellors boycott

Byadmin

Apr 25, 2025


ஊட்டி: ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இதில் பெரும்பாலான அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்துக் கொள்ளும் மாநாடு, தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவி தலைமையில் நடந்து வந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் செய்யும் அதிகாரமும் இனி தமிழக அரசுக்கே உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்பட்டது. எனினும், அதனையும் மீறி இம்முறை துணை வேந்தர்கள் மாநாடு ஊட்டியில் இன்றும், நாளையும் நடக்கிறது. இதனால் இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் அனைவரும் கலந்து கொள்வார்களா என்ற சர்ச்சை நீடித்து வந்தது.

இந்நிலையில் இன்று மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இந்த மாநாட்டுக்கு 49 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணை வேந்தர்கள் 32 பேர் கலந்து கொண்டனர்.

அதே சமயம் அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்ளவில்லை. பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மட்டும் பங்கேற்றார். பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் இயக்குநர்கள், டீன் மற்றும் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர்.

குடியரசு துணைத் தலைவர் மற்றும் ஆளுநர் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டை முன்னிட்டு ராஜபவன் மாளிகை மற்றும் தாவரவியல் பூங்கா செல்லும் சாலை, ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



By admin