ஊட்டி: ஊட்டி வந்த குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவியுடன் தோடர் பழங்குடியினரை சந்தித்தார். அங்கு தோடரின மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.
குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், தனது மனைவியுடன் 3 நாள் பயணமாக ஊட்டி வந்துள்ளார். ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்கள் மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் மதியம் ஊட்டி அருகேயுள்ள தோடர் பழங்குடியினரின் தலைமை வசிப்பிடமான முத்தநாடு மந்து சென்றார். அங்கு அவர் தோடர் பழங்குடியினருடன் கலந்துரையாடினார். பின்னர் தோடரின மக்களுடன் அவர்களது பாரம்பரிய நடனமாடி மகிழந்தார்.
குடியரசு துணைத்தலைவருடன் அவரது மனைவி, ஆளுநர் ஆர்.என்.ரவி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
நாளை அவர் முதுமலை புலிகள் காப்பகம் செல்கிறார். அங்குள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடுகிறார்.
இதனால், நாளை காலை 6.00 மணி முதல் மதியம் 12 மணி வரை வாகன சுற்றுலா செயல்படாது என்றும், தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகள் மாலையில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அவர் தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்கிறார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு 27ம் தேதி ஊட்டியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை திரும்புகிறார். அங்கிருந்து டெல்லி செல்கிறார்.