பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், கோட்டேரு ஸ்ரவாணி
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
விழாக்காலங்களில் பலரும் வீடுகளில் நறுமணம் கொண்ட ஊதுபத்திகளை ஏற்றுவார்கள்.
இந்த ஊதுபத்தியிலிருந்து வரும் புகை மற்றும் மணம் பலருக்கும் உடல்நல பிரச்னைகளை ஏறுபடுத்துவதாக பல்வேறு அறிவியல் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், நுரையீரல் நிபுணர் சோனியா கோயல் ஊதுபத்தியிலிருந்து வெளியாகும் புகையை தினமும் சுவாசித்தால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என விளக்கினார். ஊதுபத்திகள் நுரையீரலை மெல்லக் கொல்லும் விஷம் என அவர் எச்சரித்தார்.
ஊதுபத்திகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை, நாளடைவில் நுரையீரல்களை பாதிக்கும் என்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருக்கும்போது நாம் சுவாசிக்கும் புகையை போன்று இதுவும் ஆபத்தானது என்று அவர் கூறினார்.
இல்லினாய் மாகாணத்தில் உள்ள ஆர்லிங்டன் ஹைட்ஸை தலைமையகமாக கொண்ட இந்த மருத்துவ அமைப்பில் சுமார் 6 ஆயிரம் மருத்துவர்கள் உள்ளனர்.
ஊதுபத்தியிலிருந்து வெளிவரும் புகையை சுவாசிக்கும் போது தலைவலி, சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், தோல் பிரச்னைகள் மற்றும் ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படும் என, இந்த மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராம் அளவுக்கான ஊதுபத்தியிலிருந்து 45 மி.கி. அளவுக்கான நுண்ணிய துகள்கள் (particulate matter – PM) வெளியாகின்றன. அதே சமயம் சிகரெட்டிலிருந்து 10 மி.கி. மட்டுமே வெளியாகிறது என, ACAAI அறிக்கை கூறுகிறது.
அதாவது, சிகரெட்டுகளை விட நான்கு மடங்கு அதிகமாக ஊதுபத்திகளிலிருந்து நுண் துகள்கள் வெளிவருகின்றன.
“ஊதுபத்திகளை ஏற்றுபவர்கள் அதனால் உடல்நலப் பிரச்னைகள், குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் என்பதை அறிவதில்லை,” என ACAAI உறுப்பினரும் மூத்த ஆய்வாசிரியருமான மேரி லீ-வாங் தெரிவித்தார்.
உடல்நலப் பிரச்னைகள் தவிர்த்து, ஊதுபத்திகள் காற்று மாசுபாட்டையும் சில சமயங்களில் தீ விபத்துகளையும் ஏற்படுத்துவதாக ACAAI கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
ஊதுபத்திகளில் என்னென்ன மாசுபடுத்தும் காரணிகள் உள்ளன?
- நுண்ணிய துகள்கள் (PM): 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்கள் நுண்ணிய துகள்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த துகள்கள் சுவாசப்பாதை அமைப்பின் கடைசி புள்ளி வரை பயணிப்பதால் அவற்றால் மோசமான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். ஊதுபத்திகள், சிகரெட்டுகள் மற்றும் மெழுகுவர்த்திகள் ஆகியவை வீடுகளில் நுண்ணிய துகள்கள் வெளியாவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த நுண்ணிய துகள்களுக்கு அதிகமாக ஆட்படும்போது நாள்பட்ட மூச்சு தொடர்பான பிரச்னைகள், இதய நோய்கள், நுரையீரல் திசுக்களுக்கு பாதிப்பு, முன்கூட்டிய இறப்பு ஆகியவை ஏற்படக்கூடும். புற்றுநோய்க்கான ஆபத்தும் அதிகமாக உள்ளது.
- கார்பன் மோனாக்ஸைடு (CO): கரிம சேர்மங்கள் (organic compounds) முறையாக எரிக்கப்படாத போது இந்த வாயு வெளியாகிறது. இந்த சேர்மங்கள் கார்போக்ஸிஹீமோக்ளோபினை (carboxyhemoglobin) உருவாக்குகிறது மற்றும் ரத்தத்தின் ஆக்ஸிஜன் கடத்தும் திறனை (oxygen-carrying capacity) குறைக்கிறது. இது நம் உடலுக்குள் சிறிது அளவில் நுழைந்தாலும் தலைவலி, சோர்வு, குமட்டல் உள்ளிட்டவை ஏற்படும். அதிகளவில் நுகரும் போது, உயிருக்கு ஆபத்தானதாக மாறும்.
- சல்ஃபர் டையாக்ஸைடு, நைட்ரஜன் டையாக்ஸைடு ஆகியவை ஏற்கெனவே உள்ள இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் சுவாச நோய்களை அதிகப்படுத்தும். நுரையீரலுக்கு இயற்கையாகவே இருக்கும் பாதுகாப்புக் கட்டமைப்பை பாதிக்கும்.
- ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் (Volatile organic compounds): வெவ்வேறு விதமான திட மற்றும் திரவ பொருட்களில் இருந்து இந்த சேர்மங்கள் வாயு வடிவில் வெளியாகும். பல்வேறு பொருட்கள், தொழிற்சாலை மற்றும் வணிக பொருட்களில் இந்த வேதிப்பொருட்கள் உள்ளன. இதனால் கண்கள் சிவப்பாதல், கண் வீக்கம், மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல், குமட்டல், வாந்தி, தலைவலி போன்றவை ஏற்படும். இந்த வேதி சேர்மங்களை நீண்ட காலத்திற்கு நுகரும்போது புற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறது. கல்லீரல் மற்றும் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.
- ஆல்டிஹைடுகள் (Aldehydes): இவை மற்றொரு வித ஆவியாகும் கரிமச் சேர்மங்கள். இவை அதிகமாக எரிச்சலூட்டும் சேர்மங்களாகும். இவை நாசி சளி சவ்வுகள் மற்றும் வாய்ப்பகுதியை பாதிக்கின்றன. இதனால் எரிச்சல் உணர்வு ஏற்படுகிறது. இது இருமலை ஏற்படுத்தும். ஃபார்மால்டிஹைடை அதிகமாக சுவாசிப்பதும் கவலைக்குரியது. இது கார்சினோஜென் (புற்றுநோய் காரணி) என வகைப்படுத்தப்படுகிறது.
- பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள்: இந்த வேதி சேர்மங்கள் புற தமனி நோயை (peripheral arterial disease – PAD) ஏற்படுத்தலாம்.
பட மூலாதாரம், Getty Images
யாருக்கு மிகவும் ஆபத்தானது?
ஊதுபத்தி புகையை சுவாசிப்பது குழந்தைகள், வயதானவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் பலவீனமானவர்களுக்கு மிகவும் ஆபத்தானது.
இந்த புகையை பல ஆண்டுகள் சுவாசிப்பது ஆஸ்துமா ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இதனால், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD – chronic obstructive pulmonary disease) மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும். போதுமான காற்றோட்ட வசதி இல்லாத அறையில் ஊதுபத்திகளை ஏற்றும்போது அதிக ஆபத்து ஏற்படுகிறது.
இந்த புகை மனிதர்களின் டிஎன்ஏவையும் பாதிக்கக்கூடும்.
“ஊதுபத்தி புகையை சுவாசிப்பது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. அதிகமாக ஊதுபத்தி புகையை சுவாசிப்பவர்களிடத்தில் இது பொதுவாக காணப்படுகிறது. ஏற்கெனவே ஆஸ்துமா உள்ளவர்களுக்கு நுரையீரல் அடைப்பு நோய் விரைவிலேயே ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. ஆஸ்துமா இல்லாதவர்கள் பத்து முதல் 15 ஆண்டுகளில் நுரையீரல் அடைப்பு நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்துகிறது,” என NIMS மருத்துவமனையில் நுரையீரல் நிபுணராக உள்ள மருத்துவர் அனுதீப் போத்தினா கூறுகிறார்.
“குழந்தைகளிடையே அவ்வப்போது ஆஸ்துமா (Periodic asthma ) ஏற்படுவது அதிகரிக்கிறது. இந்த பிரச்னை ஏற்படும் போது, குழந்தைகளுக்கு தொடர்ந்து இருமல் ஏற்படும். அப்போது, குழந்தைகளை உடனடியாக நுரையீரல் நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். புகை, தூசி மற்றும் கொசுவை விரட்டும் கொசுவர்த்தி ஆகியவற்றிலிருந்து குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டும். ஊதுபத்தியிலிருந்து வெளியாகும் புகை ஆஸ்துமா உள்ளவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஊதுபத்திகளை ஏற்றியவுடன் குழந்தைகள் மற்றும் உடல்நல பிரச்னைகள் கொண்டவர்கள் அந்த அறையை விட்டு வெளியேற வேண்டும்” என அவர் பரிந்துரைக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன?
- ஊதுபத்தி புகையை நீண்ட நேரம் சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும்.
- ஊதுபத்திகளை ஏற்றும் போது ஜன்னல்களை திறந்துவிட வேண்டும்.
- சிறுகுழந்தைகள் இருக்கும் போது ஊதுபத்திகளை ஏற்றாமல் இருப்பது நல்லது.
- குழந்தைகளை ஊதுபத்தி புகையிடமிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த ஊதுபத்திகள் சந்தையில் உள்ளன. அவை இயற்கையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இருந்தாலும், புகையை சுவாசிப்பது பாதிப்புகளை ஏற்படுத்தவே செய்யும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்டது என்றும் சூழலுக்கு உகந்தது என்றும் விளம்பரப்படுத்தப்படும் ஊதுபத்திகள் உண்மையிலேயே சூழலுக்கு ஏற்றதா என்பதை பிபிசி சுயாதீனமாக பரிசோதிக்கவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு