• Wed. Mar 26th, 2025

24×7 Live News

Apdin News

ஊத்தங்கரை அருகே கொடிக் கம்பம் அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து திமுக நிர்வாகி உயிரிழப்பு; 4 பேர் படுகாயம் | A DMK executive died near Uthankarai

Byadmin

Mar 24, 2025


கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே கொடி கம்பம் அகற்றியபோது, மின்சாரம் பாய்ந்து திமுக நிர்வாகி உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை வருகிற ஏப்ரல் 28-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை, அந்தந்த கட்சியினர் அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 24) ஊத்தங்கரை அருகே உள்ள கேத்துநாயக்கனப்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த திமுக கொடி கம்பத்தை அகற்றும் பணியில், திமுக கிளை செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் பூபாலன், ஆறுமுகம், பெருமாள், சக்கரை ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாரதவிதமாக கொடி கம்பம் மின்சார வயர் மீது பட்டது. இதில், ராமமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த முன்னாள் ஊராட்சி தலைவர் பூபாலன், ஆறுமுகம், பெருமாள், சக்கரை உள்ளிட்ட பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதியுதவி: மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ மதியழகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறும்போது, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ராமமூர்த்தியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியும், இறுதிச் சடங்கிற்காக ரூ.50 ஆயிரம் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், படுகாயம் அடைந்த 4 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் கொடிக் கம்பம் அகற்றிடும்போது மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.



By admin