ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்டப் பாலங்கள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த 2024-25-ம் ஆண்டில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள், முதல்வரின் அறிவிப்புகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் தேவைப்படும் உயர்மட்ட பாலங்களை முன்னுரிமை அடிப்படையில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 18 மாவட்டங்களில் 1,977.20 மீ. நீளமுள்ள 34 உயர்மட்ட பாலங்களை ரூ.177.85 கோடி மதிப்பில் கட்ட நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை, கடலூர், திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், நீலகிரி, திருப்பூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 18 மாவட்டங்களில் மொத்தம் 34 பாலங்களை ரூ.177 கோடியே 84 லட்சத்து 60 செலவில் கட்டுவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இப்பாலங்களின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.