• Tue. Feb 11th, 2025

24×7 Live News

Apdin News

“ஊழல் அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும்” – அண்ணாமலை | Corruption Minister Gandhi should resign immediately says bjp Annamalai

Byadmin

Feb 10, 2025


சென்னை: ‘ஊழல் அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே முதல் நபராக சிறை செல்வார்’ என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச காட்டன் வேட்டி சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் கமிஷன் காந்தி கடந்த ஆண்டு வேட்டி நெசவு செய்யப் பயன்படுத்தப்படும் கிலோ ரூ.320 வரை விற்கப்படும் பருத்தி நூலைக் குறைவாகவும், அதில் பாதி விலையான ரூ160-க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலை அதிகமாகவும் வாங்கி வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றியதை, தமிழக பாஜக சார்பாக, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து, மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர், வெறும் 22 சதவீதம் மட்டுமே காட்டன் என்பதைக் கண்டறிந்து, உற்பத்திச் செலவில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதை வெளிப்படுத்தினோம்.

2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி, தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் என்னை சந்தித்து இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தனர். மேலும், அதிகாரிகள் கேட்டதற்கிணங்க, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வேட்டி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தில் ஜூலை 13ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், இந்த ஊழல் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

இந்த ஆண்டும், பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில் வழக்கமாகப் பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள். இதனை அடுத்து, தமிழக அரசு கைத்தறித் துறையின் இயக்குனரான, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம், தரப் பரிசோதனையில் தெரிவு செய்யப்படாத சுமார் 20 லட்சம் வேட்டிகளை, அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கே திருப்பி அனுப்பி, அதே எண்ணிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை, அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பி வைக்கக் கூறி, கடந்த டிசம்பர் 3, 2024 அன்று குறிப்பாணை அனுப்பியிருக்கிறார்.

கூட்டுறவு சங்கங்கள் தரமான வேட்டிகளை அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும், கடந்த 06.02.2025 அன்று, நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பவில்லை என்றால், இழப்பீடு நடவடிக்கை எடுப்பதோடு. எதிர்காலத்தில் இந்த சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட மாட்டாது என்பதையும் விரைவுக் குறிப்பாணை தெரிவித்திருக்கிறார்.

ஆனால், கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில், தனது பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் பணத்தை நூதனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் காந்தி, தான் செய்யும் ஊழலுக்கு, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் தடையாக இருக்கிறார் என்பது தெரிந்ததும், அடுத்த இரண்டு நாட்களில், அவரை கைத்தறித் துறையில் இருந்து பணிமாற்றம் செய்திருக்கிறார்கள்.

கைத்தறித் துறையில் நடக்கும் மெகா ஊழலை கடந்த ஆண்டே கண்டுபிடித்துக் கூறியும், முதல்வர் ஸ்டாலின், அவரைத் தொடர்ந்து அதே துறையில் அமைச்சராக நீடிக்கச் செய்கிறார் என்றால், அமைச்சர் செய்யும் ஊழலின் பங்கு முதல்வருக்கும் செல்கிறது என்பதுதானே பொருள்? தனது பணியை சரியாகச் செய்து, ஊழல் நடப்பதை வெளிக்கொண்டு வந்த அரசு அதிகாரியை, இரண்டு நாட்களிலேயே பணிமாற்றம் செய்திருப்பது அதைத்தானே உறுதிப்படுத்துகிறது? இப்படி ஒரு ஆட்சி நடத்த அசிங்கமாக இல்லையா?

ஒவ்வொரு ஆண்டும், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளில் கொள்ளையடிக்கும் அமைச்சர் காந்தி, இனியும் கைத்தறித் துறை அமைச்சராக நீடிக்கக் கூடாது. உடனடியாக, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். வரும் 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.



By admin