• Fri. Dec 27th, 2024

24×7 Live News

Apdin News

எஃப்ஐஆர் கசிவு, கைது பின்னணி… – அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் ஆணையர் அருண் விளக்கம் | Gnanasekaran is the only accused in the Anna University student sexual assault case – Commissioner Arun

Byadmin

Dec 26, 2024


சென்னை: “பாதிக்கப்பட்டவர்கள், என்ன கூறுகின்றனரோ அதை அப்படியே பதிவு செய்வதுதான் எஃப்ஐஆர். இந்த வழக்கிலும் அப்படித்தான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்திருக்கிறது. எஃப்ஐஆர் கசிவு தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “எஃப்ஐஆர் இப்படி பதிவு செய்திருக்க வேண்டும், அப்படி பதிவு செய்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் என்ன கூறுகின்றனரோ அதை அப்படியே பதிவு செய்வதுதான் எஃப்ஐஆர். இந்த வழக்கில் அப்படித்தான் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரிக்க ஆரம்பித்தோம்.

கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தனிப்படைக்கும் ஒரு பணியைக் கொடுத்து விசாரித்தோம். சந்தேகப்படும் நபர்கள் சிலரை கொண்டுவந்து விசாரித்தோம். விசாரணைக்குப் பின் அறிவியல்பூர்வமாக ஆதாரங்களை சேகரித்து, செல்போன் டவர் லொகேஷன், சிடிஆர் எல்லாம் பதிவிட்டு டிசம்பர் 25-ம் தேதி காலையிலேயே காவல் துறை குற்றம்சாட்டப்படும் நபரை பிடித்து விடுகிறோம். குற்றத்தை அந்த நபர்தான் செய்தார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, மேலும் விசாரணை செய்து அவர்தான் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்திய உடன் கைது செய்து ரிமாண்ட் செய்தோம். இதுதான், இந்த வழக்கைப் பொறுத்தவரையில் நடந்தது.

போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எஃப்ஐஆர் பதிவு செய்யும்போது, சிசிடிஎன்எஸ் (கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் அண்ட் சிஸ்டம்ஸ்) எனும் ஆன்லைன் போர்ட்டல் ஆட்டோமெட்டிக்காக லாக் ஆகிவிடும். சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆட்டோமெட்டிக்காக லாக் ஆவது தாமதமாகியிருக்கிறது. அந்த தாமதமான நிலையில், சிலர் பார்த்து அதை பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்கள் மூலம் எஃப்ஐஆர் வெளிவந்திருக்கலாம்.

இரண்டாவது, எந்த எஃப்ஐஆரை பதிவு செய்தாலும், புகார்தாரருக்கு ஒரு காப்பி கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பிரதி கொடுத்தோம். இந்த இரண்டு வழிகளில்தான் எஃப்ஐஆர் வெளியே வந்திருக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் எஃப்ஐஆர் வெளியே வந்திருக்கக்கூடாது. அவ்வாறு வெளியிடுவது சட்டப்படி குற்றம். அதேபோல், அதை எடுத்துவைத்து விவாதிப்பதும் சட்டப்படி குற்றம்.

பாதிக்கப்பட்டவரின் அடையாளம் எந்த வகையிலும் வெளியே தெரியக் கூடாது. நாம் கொடுக்கும் தகவல்களை வைத்தே பாதிக்கப்பட்ட நபரை கண்டுபிடிக்க முடியும் என்ற அளவுக்கு தகவல் தெரிவித்தாலே அதுவும் தவறு. எனவே, இந்த எஃப்ஐஆர் வெளியானது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும், யார் இதை கசியவிட்டார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

‘ஒருவர்தான் குற்றவாளி’ – இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை நடந்த புலன் விசாரணையில், ஞானசேகரன் ஒருவர்தான் குற்றவாளி. ஞானசேகரன் மீது சென்னையில் 2013-ல் இருந்து 20 வழக்குகள் உள்ளன. இந்த அனைத்து வழக்குகளும் திருட்டு போன்ற வழக்குகள்தான். ரவுடியிசம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இல்லை. அந்த 20 வழக்குகளில் 6-ல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மற்ற வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.

இதுவரை கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனால் பாதிக்கப்பட்டதாக வேறு எந்த பெண்களிடத்தில் இருந்தும் காவல் துறைக்கு புகார் வரவில்லை. ஞானசேகரனை கஸ்டடியில் எடுத்து விசாரித்து, போன் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் புகார்கள் பெறப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இதில் 56 சிசிடிவி வேலை செய்கிறது. அதிலிருந்து ஆதாரங்கள் கிடைத்தன. இந்த வழக்கைப் பொறுத்தவரை மாலை 4 மணிக்கு புகார் அளித்தனர். அதிலிருந்து அடுத்த நாளுக்குள் எஃப்ஐஆர் பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.



By admin