• Mon. Sep 7th, 2026

24×7 Live News

Apdin News

எஃப்.கியூ.எல். செயலியால் பணத்தை இழந்தது எப்படி? மதுரை காசம்பட்டி கிராம மக்கள் பேட்டி

Byadmin

Sep 7, 2026


காணொளிக் குறிப்பு, ஆன்லைன் செயலியில் பணம் பறிகொடுத்த நபர்கள்.

எஃப்.கியூ.எல். செயலியில் பணத்தை இழந்தது எப்படி? கலங்கி நிற்கும் கிராம மக்கள் பேட்டி

பிரசுரிக்கப்பட்டது

(எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடம் தரலாம்)

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் எஃப்.க்யூ. எல், வி.ஜி என்ற செயலிகள் மூலம் முதலீடு செய்தால் 40 முதல் 45 நாட்களுக்குள் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என நம்ப வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் பணத்தை இழந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

எஃப்.க்யூ.எல் இன்வெஸ்ட்மெண்ட் டிரேடிங், எஃப்.க்யூ.எல் எக்ஸேஜ் செயலி, வி.சி இம்வெஸ்ட்மெண்ட் க்ரூப் சிண்டிகேட்ஆகிய பெயர்களில் பல அடுக்கு சந்தைப்படுத்தல் மற்றும் கிரிப்டோ வர்த்தகத்தின் பெயரில் இந்தத் திட்டம் செயல்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை கூறுகிறது. மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் மொத்த தொகை குறித்த விவரங்களை காவல்துறை இதுவரை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.

காசம்பட்டி என்ற கிராமத்தில் பெரும்பாலான குடும்பங்கள் இதில் பாதிக்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த கிராமத்துக்கு சென்றது பிபிசி தமிழ். நத்தம் நகரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காசம்பட்டி.

அங்கு மக்கள் பலர் சோகமான முகத்துடன் இருந்தனர். சிலரிடம் பேச முயன்ற போது, பணத்தை இழந்ததை எண்ணி சாப்பிடக் கூட முடியாத அளவு சோகத்தில் இருப்பதாகவும், பேச தெம்பு இல்லை என்றும் கூறினர்.

சிலர், “ஏற்கெனவே பணத்தை இழந்துவிட்டோம். எப்படி ஏமாந்தோம் என பேட்டி கொடுத்து மரியாதையையும் இழக்க விரும்பவில்லை” என்றனர்.

எனினும், பிபிசியிடம் பேசிய திருமலை என்பவர் என்ன நடந்தது என்பதை கண்கலங்கியபடி விவரித்தார்.

71 வயதான முத்துசாமி பிபிசியிடம் கூறும் போது பக்கத்து கிராமத்தில் வசிக்கும் உறவினர் ஒருவர் கூறி இதில் முதலீடு செய்ததாக கூறினார். மூன்று கணக்குகள் தொடங்கி மொத்தம் 4.5 லட்சம் ரூபாய் தான் முதலீடு செய்ததாக முத்துசாமி கூறுகிறார். கணக்கு தொடங்கிய பலருக்கு தொடக்கத்தில் பணம் கிடைத்ததை கண்டு கிராமத்தில் பலரும் பணம் செலுத்தத் தொடங்கியதாக அவர் கூறுகிறார்.

காசம்பட்டி மட்டுமின்றி பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த வெள்ளி பட்டறை தினக்கூலியான ஷேக் அப்துல்லா இந்த மோசடியால் தனது வாழ்க்கை 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாக கூறுகிறார்.

நிறைய கடன் வாங்கி இதில் தான் முதலீடு செய்திருப்பதாகவும் ஷேக் அப்துல்லா கூறுகிறார். இந்த செயலி எப்படி செயல்படும், இதில் தாங்கள் இணைந்தது ஏன் என மதுரையைச் சேர்ந்த ஆனந்தி பிபிசியிடம் விளக்கினார்.

இந்த மோசடி சம்பவத்தை ஒட்டி ஓர் உயிரிழப்பு சம்பமும் நடந்திருக்கிறது. இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து, இந்த முதலீட்டுத் திட்டத்தில் மற்றவர்களை இணைத்து வந்த காசம்பட்டியைச் சேர்ந்த ராசு என்ற இளைஞர் கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். ராசுவின் மரணத்தைத் தொடர்ந்து, பணத்தை மீட்டுத் தரவும் தொடர்புடையவர்களைக் கைது செய்யவும் வலியுறுத்தி மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் அஞ்சம்மாள் மற்றும் சகோதரர் பொதியன் குற்றம் சாட்டுகின்றனர்.

குடும்பத்தினரின் குற்றச்சாட்டு குறித்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனிடம் பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த குணசேகரன், குடும்பத்தினரும் கிராம மக்களும் சந்தேகம் எழுப்பியதால் முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல்துறை விசாரணையில் மரணத்தில் சந்தேகத்துக்குரிய அம்சம் கண்டறியப்படவில்லை. எனவே தற்கொலை என்ற அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது என தெரிவித்தார்.

இந்த மோசடி தொடர்பான வழக்குகள் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. செப்டம்பர் 1ஆம் தேதி காவல்துறை வெளியிடப்பட்ட தகவலின்படி, 17 பேர் கைது செய்யப்பட்டு, தொடர்புடைய 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கிரிப்டோ வாலெட்கள் மற்றும் வெளிநாட்டுத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுவதாக போலீசார் கூறுகின்றனர்.

இந்த வகையான மோசடி குறித்து பிபிசியிடம் பேசிய சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்கறிஞர் கார்த்திகேயன், குறுகிய காலத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறும் திட்டங்களை மக்கள் நம்பக் கூடாது. கிரிப்டோ முதலீடுகளில் அதிக ஆபத்து உள்ளது. இந்தியாவில் பங்குகள் அல்லது பரஸ்பர நிதிகளைப் போன்று செபியின் முழுமையான முதலீட்டாளர் பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் கிரிப்டோ சொத்துகள் வருவதில்லை என எச்சரித்தார்.

மக்கள் பணத்தை மீட்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து விளக்கிய அவர், “டிஜிட்டல் பரிவர்த்தனை வழியாகப் பணம் செலுத்தப்பட்டிருந்தால், விரைவாகப் புகார் அளிப்பதன் மூலம் பணம் சென்ற வங்கிக் கணக்குகளைக் கண்டறிந்து கிடைக்கக் கூடிய தொகையை முடக்க வாய்ப்புள்ளது. ஆனால் கணக்கு முடக்கப்பட்டதாலேயே முழு பணமும் திரும்பக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. பணம் ஏற்கெனவே ரொக்கமாக எடுக்கப்பட்டிருந்தாலோ, பல கணக்குகள் அல்லது கிரிப்டோ வாலெட்களுக்கு மாற்றப்பட்டிருந்தாலோ மீட்பது சிக்கலாகலாம்” என்றார்.

  • ஆன்லைன் நிதி மோசடியில் பணத்தை இழந்தவர்கள் 1930 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
  • தற்கொலை தொடர்பான எண்ணம் எழுந்தால் கீழ்காணும் எண்களை உதவிக்கு அழைக்கலாம்.
  • சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)
  • மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin