பட மூலாதாரம், Getty Images
இந்தியா தனது விமானப்படையை நவீனமயமாக்குவதில், ஒரு முக்கியமான முடிவினை எடுக்க வேண்டியதாக இருக்கின்றது. அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்களை வாங்குவது இதற்கு தீர்வாகுமா?
கடந்த மாதம் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். அப்போது, அமெரிக்கா தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு மட்டுமே வழங்கக் கூடிய எஃப்-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
எஃப்-35 என்பது மேம்பட்ட சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் தாக்குதல் அமைப்புகள் மற்றும் தடையற்ற தகவல் பகிர்வு திறன்களைக் கொண்ட “ஐந்தாம் தலைமுறை” போர் விமானமாகும். இது எதிரிகளின் ரேடார்களில் சிக்காத வகையில் அதாவது, எதிரிகளுக்குப் புலப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரு மிகவும் அதிநவீன மற்றும் விலை உயர்ந்த போர் விமானமாகும். ஒரு எஃப்-35 போர் விமானத்தின் விலை 80 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். (எதிரி ரேடார்களுக்குப் புலப்படாமல் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்துவது என்பது “ஐந்தாம் தலைமுறை” போர் விமானத்தின் முக்கிய அம்சமாகும்)
இந்தியாவின் விமானப் படையில் போர் விமானங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், சீனாவின் ராணுவப்படை மேம்பட்டு வருவதாலும், தற்போது இந்தியா மிகவும் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று பலர் கருதுகின்றனர். அது அமெரிக்காவில் இருந்து அதிநவீன, விலையுயர்ந்த எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதா அல்லது ரஷ்யாவின் மிகவும் மேம்பட்ட போர் விமானமான சுகோய்-57-ஐ வாங்குவதா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது. சுகோய்-57 போர் விமானங்களை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் ரஷ்யாவுடன் இந்தியாவுக்குள்ள பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த முடியும் என்பது இதில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று.
சர்வதேச அரசியலில் அமெரிக்கா – ரஷ்யா போட்டாபோட்டி ஊடகங்களில் பெரும்பாலும் மிகைப்படுத்திக் காட்டப்படுவதாகவும், யதார்த்தம் மிகவும் வேறுபட்டது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த மாதம், பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் போர் விமானங்களும் இடம் பெற்றிருந்ததால், இந்த விவாதம் மேலும் சூடுபிடித்தது.
பட மூலாதாரம், AFP
எஃப்-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்கத் தயார் என்று டிரம்ப் அறிவித்தது, வழக்கத்திற்கு மாறான ஒன்று என்று கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் அமைப்பின் மூத்த ஆய்வாளர் ஆஷ்லி ஜே. டெல்லிஸ் கூறுகிறார்.
இந்திய விமானப்படையின் திட்டம் உள்நாட்டிலேயே ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரிப்பது மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில், உள்நாட்டிலேயே ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது சவாலான ஒன்றாக இருக்கும். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(DRDO) ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கி வருகிறது.
“உள்நாட்டிலேயே தயாரிக்கும் உரிமையுடன் எஃப்-35 போர் விமானங்களை இந்தியா வாங்குவது சாத்தியமற்றது; எந்தவொரு ஒப்பந்தம் கையெழுத்தானாலும் அது நேரடி விற்பனையாகவே இருக்கும். இந்தியாவுடன் கூட்டுத் தயாரிப்பு இல்லாமல் நேரடியாக எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்வது, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துடன் ஒத்துப்போகாது. இந்த போர் விமானங்களை இந்தியா எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை அமெரிக்கா கண்காணிக்க விரும்புவது இந்தியாவால் ஏற்கப்பட வாய்ப்பில்லை,” என்று ஆஷ்லி டெல்லிஸ் கூறினார்.
அதிக விலை, அதிகப்படியான பராமரிப்பு தேவைகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் என எஃப்-35 போர் விமானங்களை பயன்படுத்துவதில் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க சவால்கள் இருக்கின்றன என்று பாதுகாப்புத் துறை நிபுணர் ஸ்டீபன் பிரையன் கூறுகிறார்.
“ரஷ்யாவின் சுகோய்-57 போர் விமானம் நல்ல தேர்வாக இருக்கும் என்று அறிந்தும், எஃப்-35 போர் விமானத்தில் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்ய இந்தியா தயாராக உள்ளதா என்பதுதான் கேள்வி.” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், AFP
ஆனால், பலர் சுகோய்-57 போர் விமானத்தை இந்தியா வாங்கும் என்று கருதவில்லை. ஏனெனில், தொழில்நுட்ப பரிமாற்றம், செலவு பகிர்வு மற்றும் போர் விமானத்தின் அம்சங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் இணைந்து போர் விமானங்களை தயாரிப்பதற்கான திட்டத்தில் இருந்து இந்தியா விலகியதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நிச்சயமாக, இந்திய விமானப்படையில் உள்ள போர் விமானங்கள் பழையவை என்பதுடன், போர் விமான பற்றாக்குறையும் உள்ளது.
இந்திய விமானப்படைக்கான 42 படைப் பிரிவுகளில் 31 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ரஷ்யா மற்றும் சோவியத் தயாரிப்புகளாகும். இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக இருக்கும் ரஷ்யாவின் சுகோய்-30க்கு மாற்றாக, பொருத்தமான மற்றொரு போர் விமானத்தை இனங்காண்பது ஒரு முக்கிய சவாலான பணியாகும்.
அல்பானி பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வாளர் கிறிஸ்டோபர் கிளாரி, சமீபத்தில் ஐஐஎஸ்எஸ் மிலிட்டரி பேலன்ஸ் வெளியிட்ட தரவுகளை சுட்டிக்காட்டினார்: 2014 மற்றும் 2024க்கு இடைப்பட்ட காலத்தில் சீனா தனது விமானப்படையில் 435 போர் விமானங்களையும், பாகிஸ்தான் 31 போர் விமானங்களையும் சேர்த்துள்ளன. அதே நேரத்தில் இந்திய விமானப்படையில் 151 போர் விமானங்கள் குறைந்துள்ளன.
இந்தியா 500-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் இந்தியா விரும்புகிறது.
உள் நாட்டிலேயே தயாரிக்கப்படும் தேஜஸ் மார்க் 1ஏ என்ற போர் விமானத்தை விமானப்படையில் சேர்க்க திட்டமிட்டுள்ள இந்தியா, 83 போர் விமானங்களை வாங்க ஆர்டர் செய்துள்ளது; இதே ரகத்தைச் சேர்ந்த மேலும் 97 போர் விமானங்களை வாங்க விரைவில் ஆர்டர் கொடுக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், இன்னும் நவீன தேஜஸ் மார்க் 2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் நடக்கிறது. இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள ஐந்தாம் தலைமுறை போர் விமானம் (AMCA) பயன்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டு ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப்படைக்கு 20 பில்லியன் டாலரில் 114 பன்முனை பயன்பாட்டு போர் விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களிடம் உரிமம் பெற்று தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் மூலம் போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா விரும்புகிறது.
பட மூலாதாரம், AFP
பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் விமர்சனங்கள் ஏற்பட்டதால், அதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காத வகையில் வெளிப்படையான நடைமுறையில் போர் விமானங்களை வாங்க இந்திய அரசு இம்முறை திட்டமிடுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 5 போர் விமானங்கள் இதற்கான போட்டியில் இருக்கையில், ரஃபேல் விமானமே முன்னிலையில் உள்ளது.
இந்தியாவின் விமானப்படை நவீனமயமாக்கும் செயல் திட்டம் நிதி, அடுத்தடுத்த தாமதங்கள் மற்றும் வெளிநாட்டு போர் விமானங்களைச் சார்ந்திருப்பது என 3 முக்கிய தடைகளை எதிர்கொள்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய பட்ஜெட்டில் பாதுகாப்புக்கான நிதி அதிகரிக்கப்பட்டு வந்தாலும் கூட, உண்மையான மதிப்பை கருத்தில் கொண்டால் அது குறைந்தே இருக்கிறது. வெளிநாட்டு போர் விமானங்களையே சார்ந்திருப்பது நீண்டகால நோக்கில் சிக்கலாக மாறும் அபாயம் உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா முன்னுரிமை அளித்தாலும், டி.ஆர்.டி.ஓ.வின் தாமதம், வேறு வழியின்றி தற்காலிகமாக வெளிநாட்டில் இருந்து போர் விமானங்களை கொள்முதல் செய்ய இந்தியாவை நிர்பந்திக்கிறது. இது ஒரு சுழற்சியை உருவாக்குகிறது. இந்த நிலையை மாற்ற, தேவைப்படும் நேரத்தில் உள்நாட்டிலேயே சிறந்த போர் விமானம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F-404 என்ஜின் விநியோகத்தில் தாமதம் காரணமாக, இந்தியாவில் போர் விமானங்களை தயாரித்து படைகளுக்கு சப்ளை செய்யும் பணியும் தாமதமாகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தொலைநோக்குப் பார்வைக்கும் இந்திய விமானப்படையின் தேவைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் இதற்கு ஒரு முக்கிய சவாலாக உள்ளது என்று யூரேசியா குழுமத்தின் ஆய்வாளர் ராகுல் பாட்டியா கூறுகிறார்.
“தேஜஸ் மார்க் 1 போர் விமானத்தின் செயல்திறன் குறித்து விமானப்படை எழுப்பிய சந்தேகத்திற்குப் பிறகே தேஜஸ் மார்க் 1ஏ மற்றும் மார்க் 2 போன்ற மேம்பட்ட திறன் கொண்ட அடுத்தக்கட்ட போர் விமானங்கள் திட்டமிடப்பட்டன. ஆனால் பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பணிகள், இந்திய ஆயுதப் படைகளை விரக்தியடையச் செய்கின்றன. குறிப்பாக பாதுகாப்புத் துறையில் அடுத்தடுத்து புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வரும் சூழலில் படைகளின் தேவை தொடர்ந்து மாறி வருகிறது.” என்று ராகுல் பாட்டியா கூறினார்.
“நான் வெளிநாடுகளில் இருந்து எதையும் வாங்க மாட்டேன் அல்லது இந்தியாவிலேயே தயாரிப்பதற்காக காத்திருப்பேன் என்று சபதம் எடுக்க முடியும். ஆனால் குறித்த நேரத்தில் [சரியான நேரத்தில்] உள்நாட்டிலேயே அவை உருவாக்கப்படவில்லை என்றால் இது சாத்தியமில்லை,” என்று ஏர் மார்ஷல் ஏ.பி.சிங் சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் கூறினார்.
பட மூலாதாரம், AFP
“தற்போது, போர் விமானங்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை நாம் மிக மோசமான நிலையில் இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். உறுதியளிக்கப்பட்டவாறு போர் விமானங்கள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தற்போதுள்ள வெற்றிடத்தை உடனே நிரப்பும் வகையில் மாற்று ஒன்றை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.,” என்று அவர் குறிப்பிட்டார். இந்திய விமானப்படைக்கு தேஜஸ் மார்க் 1ஏ போர் விமான சப்ளை கடந்த பிப்ரவரியிலேயே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அது இன்னும் சாத்தியமாகவில்லை.
உள்நாட்டிலேயே தயாரிக்கும் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் (எதிரிகளின் ரேடார்களில் புலப்படாமல் தாக்கும்) போர் விமானங்களுக்கே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்பது தெளிவு. இதற்காக ஏற்கனவே ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
“உடனடியாக அச்சுறுத்தல் ஏற்படும் நிலை வந்தால் மட்டுமே வெளிநாட்டில் இருந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வாங்க இந்தியா பரிசீலிக்கும்”, என்று ராகுல் பாட்டியா கூறுகிறார்.
சீனா ஜே-20 (J-20) மற்றும் ஜே-35 (J-20) ஆகிய இரண்டு வகை ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை கொண்டுள்ளது.
அமெரிக்கா அல்லது ரஷ்யாவின் போர் விமானங்களை இந்தியா தேர்வு செய்யாது என்று பெரும்பாலான நிபுணர்கள் நம்புகிறார்கள்.
“கடந்த கால வரலாற்றை கருத்தில் கொண்டு, போர் விமானங்கள் பற்றாக்குறையை ஈடு செய்ய அவசரமாக அவற்றை வாங்கலாம். அடுத்து வரும் காலத்தில் போர் விமானங்களை இணைந்து தயாரிப்பதில் கவனம் செலுத்தலாம். ஆனால், உள்நாட்டிலேயே தயாரிப்பது என்பதே இந்தியாவின் தொலைநோக்குத் திட்டமாக உள்ளது”, என்று ராகுல் பாட்டியா குறிப்பிடுகிறார்.
இந்தியாவைப் பொருத்தவரை, விமானப்படையின் எதிர்கால வலிமை அவற்றை உள்நாட்டிலேயே இணைந்து தயாரிப்பதாகும், குறிப்பாக, மேற்கத்திய நாட்டுடன் கூட்டு சேர்வதாகும். இந்தியாவின் இந்த நோக்கம் ஈடேற உள்நாட்டிலேயே தயாரிக்கும் போர் விமானங்களை குறித்த நேரத்தில் படைகளுக்கு சப்ளை செய்வது முக்கியமானதாகும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.