பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட போர் விமானமான எஃப்-35 போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.
செளதி அரேபியாவுக்கு இந்தப் போர் விமானங்கள் கிடைத்தால், அந்தத் தொழில்நுட்பத்தை சீனா அறிந்துகொள்ளக் கூடும் என்ற கவலைகள் ஒருபுறம் இருந்தபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.
செளதி அரேபியாவிடம் இந்த சக்திவாய்ந்த விமானங்கள் இருப்பது, மத்திய கிழக்கு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேலின் “தனித்துவமான ராணுவ முன்னிலையை” பாதிக்கக்கூடும் என டிரம்ப் நிர்வாகத்தினரும் கவலை தெரிவிக்கின்றனர்.
செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அமெரிக்க பயணத்தின்போது பேசியபோதும், அதிபர் டிரம்ப், அமெரிக்கா இந்தப் போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு வழங்கப் போவதாக மீண்டும் குறிப்பிட்டார்.
டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் எஃப்-35 போர் விமான விற்பனை தொடர்பான ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது, ஆனால் அது இறுதி முடிவை எட்டவில்லை.
வெள்ளை மாளிகைக்கு செளதி பட்டத்து இளவரசர் வருகை தருவதற்கு ஒரு நாள் முன்னதாக, செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்யவிருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார்.
“நாங்கள் எஃப்-35 விமானங்களை விற்பனை செய்வோம் எனக் கூற விரும்புகிறேன். அவர்கள் (செளதி அரேபியா) அவற்றை வாங்க விரும்புகிறார்கள். அவர்கள் நம் சிறந்த கூட்டாளியாக இருந்து வருகின்றனர்,” என்று ஓவல் அலுவலகத்தில் பேசியபோது டிரம்ப் கூறினார்.
செவ்வாய்க் கிழமையன்று டிரம்புக்கும் பட்டத்து இளவரசருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின்போது, எஃப்-35 போர் விமானங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, எஃப்-35 ரக விமானங்களை ஏற்றுமதி செய்வதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், செளதி அரேபியா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்டின் இடையே ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் என நம்புவதாகவும் டிரம்ப் கூறினார்.
இந்த ஒப்பந்தம் ஏற்படலாம் என்பது, இஸ்ரேலிய அதிகாரிகள் சிலரிடையே கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் தற்போது எஃப்-35 போர் விமானங்களை வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் மட்டும்தான் என்பதால், செளதிக்கும் இந்த விமானத்தை வழங்குவது, இஸ்ரேலின் “தனித்துவமான ராணுவ முன்னிலையை” குறைத்துவிடக்கூடும்.
செளதிக்கு வழங்கப்படும் எஃப் -35 போர் விமானம், இஸ்ரேல் பயன்படுத்தும் விமானங்களைப் போலவே இருக்கும் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
“செளதி அரேபியா ஒரு சிறந்த கூட்டாளி. இஸ்ரேலும் சிறந்த கூட்டாளிதான். அவர்கள் (இஸ்ரேல்) உங்களுக்கு (செளதி அரேபியா) குறைந்த திறன் கொண்ட விமானங்களைக் கொடுக்க வேண்டும் என நினைப்பதும் எனக்குத் தெரியும். ஆனால் எனது பார்வையில், இரு நாடுகளுமே சிறப்பான விமானங்களைப் பெறத் தகுதியானவை” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
தனது முன்மொழியப்பட்ட காஸா அமைதித் திட்டத்திற்கு இஸ்ரேலின் ஆதரவை டிரம்ப் கோரியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் இஸ்ரேலை கோபப்படுத்தக்கூடும் என்பதால், எஃப்-35 போர் விமானங்களை செளதிக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் இரான் உடனான 12 நாள் மோதலின்போது இஸ்ரேல் எஃப்-35 ரக போர் விமானங்களைப் பயன்படுத்தியது. எஃப்-35 விமானங்களை வைத்திருக்கும் அல்லது அவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 19 நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழின்படி, பென்டகனுடைய உளவுத்துறை அமைப்பின் சமீபத்திய அறிக்கை, “இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், செளதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம், சீனாவால் எஃப்-35 தொழில்நுட்பத்தை அணுக முடியும்” என்று எச்சரித்துள்ளது.
பட மூலாதாரம், Win McNamee/Getty Image
மத்திய கிழக்கின் ராணுவ சூழலை மாற்றவல்ல எஃப்-35
எஃப்-35 போர் விமானம் மத்திய கிழக்கு முழுவதும் தற்போது இருக்கும் ராணுவ சூழலையே மாற்றக்கூடும் என்று நம்பப்படுகிறது. சில இஸ்ரேலிய அதிகாரிகளும் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.
செளதி அரேபியாவுடனான உறவுகளை இஸ்ரேல் இயல்பாக்கினால், அது பரந்த இஸ்லாமிய உலகுடனான சுமூக உறவுகளுக்கு ஒரு வழியைத் திறக்கும். அதற்கு ஈடாக, செளதி அரேபியா அமெரிக்காவிடம் இருந்து ஒரு பாதுகாப்புத் திட்டத்தைப் பெற வேண்டும்.
இதன் கீழ், செளதி அரேபியா ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களான எஃப்-35 ஸ்டெல்த் போர் விமானங்களைப் பெற்றிருக்கும்.
இது அமெரிக்காவுடனான செளதி அரேபியாவின் உறவை வலுப்படுத்துவதுடன் இஸ்ரேலுடனான அதன் உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்றையும் தொடங்க உதவும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த எஃப்-35 விமானங்களை விற்பனை செய்வதில் டிரம்ப் நிர்வாகம் முன்னேறக்கூடும். இஸ்ரேல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், செளதி அரேபியாவுடன் அந்நாடு ராணுவ சமநிலையைப் பெறக்கூடும்.
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் மற்றும் செளதி அரேபியா இடையிலான பிரச்னைகளை டிரம்ப் கண்டுகொள்ளவில்லை. எஃப்-35 போர் விமான விற்பனை விவகாரம் குறித்து சி.என்.என் சேனலிடம் பேசிய கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுகள் துறையின் மூத்த ஆய்வாளரான நவாஃப் ஒபைத், “நெதன்யாகுவுக்காக, ஆயுதங்கள் மற்றும் பிற விற்பனையை நிறுத்தி வைத்து தனது நேரத்தை டிரம்ப் வீணாக்கப் போவதில்லை” என்று கூறுகிறார்.
“செளதி அரேபியாவுக்கு எஃப்-35 விமானங்களை வழங்குவது இஸ்ரேலிய ராணுவத்திற்குக் கவலை அளிக்கும் விஷயம்” என இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் சி.என்.என் சேனலிடம் கூறினார்.
“பல ஆண்டுகளாக, மத்திய கிழக்கில் உள்ள எந்த நாட்டிலும் எங்களிடம் இருப்பது போன்ற விமானங்கள் அல்லது திறன்கள் இருக்கக்கூடாது என்ற சொல்லப்படாத விதி எங்களிடம் இருந்தது,” எனக் கூறும் அவர், “நிலைமையின் தீவிரத்தை மிகைப்படுத்திக் கூறவில்லை. ஆனால் இது இஸ்ரேலுக்கு நல்லதல்ல” என்கிறார்.
இருப்பினும், அல்-அரேபியாவின் கூற்றுப்படி, “இஸ்ரேலியர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம், பாலத்தீனர்கள் அமைதியாக வாழ வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் இந்தப் பிராந்தியத்தில் அமைதியாக ஒன்றாக வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், இந்த இலக்கை அடைய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று பட்டத்து இளவரசர் கூறினார்.
பாலத்தீனம் ஒரு நாடாக உருவாகாமல், இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கப் போவதில்லை என செளதி அரேபியா பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
செளதி அரேபியா எஃப்-35 போர் விமானத்தை வாங்க விரும்புவது ஏன்?
மத்திய கிழக்கில் தனது ராணுவத்தையும் அதன் நிலைப்பாட்டையும் வலுப்படுத்த செளதி விரும்புகிறது.
செளதி அரேபியா பல ஆண்டுகளாக எஃப்-35 போர் விமானங்களை வாங்க முயன்று வந்தாலும், அதற்கு இஸ்ரேலிய எதிர்ப்பு காரணமாக ஒப்புதல் மறுக்கப்பட்டது.
செளதி அரேபியா ஏற்கெனவே அமெரிக்காவின் ஆயுதங்களை வாங்கி வருகிறது. இருப்பினும், எஃப்-35 திட்டத்தில் சேர அந்த நாடு அனுமதிக்கப்படவில்லை.
தனது ராணுவத்தை நவீனமயமாக்கவும், மத்திய கிழக்கில் தனது நிலையை வலுப்படுத்தவும், இரானால் பதற்றம் ஏதேனும் ஏற்பட்டால் அதில் தனது கை மேலோங்கியிருக்க வேண்டும் எனவும் செளதி அரேபியா விரும்புகிறது. அதற்காகவே எஃப்-35 விமானங்களை வாங்க முயல்கிறது.
ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செளதி அரேபியாவும் போரிட்டுள்ளது. இந்த மோதல் தற்போது மட்டுப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் மீண்டும் வெடிக்கக்கூடும்.
அதனால் எஃப்-35 நவீன போர் விமானம் தங்களுக்கு அவசியம் என அந்நாடு கருதுகிறது.
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் எஃப்-35 விமானங்களை சௌதிக்கு விற்பது சாத்தியமா?
செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்வது இஸ்ரேலின் ராணுவ நன்மைக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற கவலைகளை டொனால்ட் டிரம்ப் பொருட்படுத்தவில்லை.
டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தாலும்கூட, இந்த ஒப்பந்தத்தைத் தடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. சிலர் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும்.
இருப்பினும், செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார், விமானத்தை விற்பனை செய்வதற்கான தனது ஆதரவை வலுவாக மீண்டும் ஒருமுறை முன்வைத்துள்ளார்.
மிக முக்கியமாக, அவர் இஸ்ரேலின் “தனித்துவமான ராணுவ முன்னிலை” என்ற கொள்கையையும் புறந்தள்ளியுள்ளார்.
“தனித்துவமான ராணுவ முன்னிலை” என்பதன் கீழ், மத்திய கிழக்கில் உள்ள அதன் அண்டை நாடுகளைவிட இஸ்ரேல் எப்போதும் மேம்பட்ட ஆயுதங்களைக் கொண்டிருப்பதை அமெரிக்கா உறுதி செய்து வருகிறது.

எஃப்-35 போர் விமானம் எவ்வளவு ஆபத்தானது?
எஃப்-35 போர் விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின், அதை உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் என்று அழைக்கிறது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 விமானங்களைத் தயாரிக்கிறது. அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தின்படி, எஃப்-35 “உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம்.”
ஐந்தாம் தலைமுறை போர் விமானமான எஃப்-35, எதிரி ரேடார் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறிய முடியாத வகையில் பறக்கும் திறன் கொண்டது.
மேலும், அது தனது தாக்குதல் திறனைப் பயன்படுத்தி எதிரி பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போர் விமானங்களைத் தாக்க முடியும். இதனால் எதிரிகள் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே அவர்களைச் சீர்குலைக்க முடியும்.
லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 விமானத்தை, “உலகின் மிகவும் ஆபத்தான, நீடித்து இயங்கக்கூடிய மற்றும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட போர் விமானம்” என்று அழைக்கிறது.
ஸ்டெல்த் தொழில்நுட்பம், மேம்பட்ட சென்சார்கள், அதிவேக கணினி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, எஃப்-35 போர் விமானத்தின் பலம் என்று கூறலாம். அவை வெகுதொலைவில் இருந்து எதிரிகளைக் கண்டறிந்து தரவை நேரடியாக விமானிக்கு அனுப்பும்.
இந்தத் தொழில்நுட்பம், படைகளின் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே பார்க்கவும், தாக்குதல்களைச் சிறப்பாக ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.
ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, நார்வே பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எஃப்-35 விமானங்களைத் தயாரிக்க அமெரிக்காவுடன் சேர்ந்துள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு