அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் மற்றும் அங்கு செல்லத் திட்டமிடும் இந்திய மாணவர்கள், எதிர்காலத்தில் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, எஃப் 1 (F1) மாணவர் விசாக்களுக்கு விதிகளை மாற்ற முன்மொழிந்திருப்பது தான் இதற்குக் காரணம்.
முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அவை இந்திய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும்? என்பதைத் தெரிந்துகொள்வோம்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மாதிரி படம்
புதிய மாற்றங்கள் என்னென்ன ?
பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசாவைத் தவறான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் புதிய விதிகளை முன்மொழிந்துள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பொதுவாக, அமெரிக்காவில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு எஃப் 1 (F1) விசா வழங்கப்படுகிறது. பரிமாற்றத் திட்டங்கள் மூலம் செல்லும் மாணவர்களுக்கு ஜே1 (J1) விசா வழங்கப்படுகிறது.
இதுவரை, இந்த மாணவர் விசாக்கள் ‘படிப்பு தொடரும் வரை அனுமதி’ (duration of status) என்ற முறையில் இருந்தன. அதாவது, ஒரு மாணவர் அமெரிக்காவில் படிப்பைத் தொடரும் வரை, அவர்களின் நிலை ‘மாணவர்’ என்றே இருக்கும். அவர்கள் அனைத்து விசா விதிகளையும் பின்பற்றும் வரை அமெரிக்காவில் தங்கலாம்.
இப்போது, அந்த முறையை நீக்க ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. மாணவர் விசாவின் காலம் 4 ஆண்டுகளாக குறைக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மாதிரி படம்
குறிப்பிட்ட அந்த கால அளவுக்குப் பிறகு, ஒரு மாணவர் அமெரிக்காவில் தொடர்ந்து தங்க விரும்பினால், ‘படிப்பு தொடரும் வரை அனுமதி’ எனும் நிலையை நீட்டிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
இல்லையெனில், அமெரிக்காவை விட்டு வெளியேறி, மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.
இதனால், இளங்கலைப் பட்டம் முடித்து, முதுகலை அல்லது முனைவர் பட்டத்தைத் தொடர விரும்பும் மாணவர்கள், புதிய விசா செயல்முறையைத் தொடங்க வேண்டியிருக்கும்.
மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்குப் பிறகு உடனடியாக வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற முடியாது.
அதாவது, எஃப் 1 விசா பெற்ற மாணவர்கள், முதல் ஆண்டு முடிந்த பிறகே வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற முடியும்.
பட்டதாரி மாணவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தவுடன், தங்கள் பாடத்திட்டத்தையோ அல்லது பல்கலைக்கழகத்தையோ உடனடியாக மாற்ற முடியாது.
அவர்களுக்கு விசா வழங்கப்பட்ட போது, I-20 படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்குச் செல்லவேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
ஒரே மட்டத்தில் பல பட்டங்களைப் பெறுவது இனி எளிதல்ல. அதாவது, அமெரிக்காவை விட்டு வெளியேறி புதிய விசாவிற்கு விண்ணப்பிக்காமல், ஒரு பாடத்தில் முதுகலைப் பட்டம் முடித்து, பின்னர் வேறு பாடத்தில் முதுகலைப் பட்டத்தை தொடருவது இனி சாத்தியமில்லை.
மேலும், விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) முடிந்த பிறகு மாணவர்கள் தங்கக்கூடிய காலமும் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) முடிந்த பிறகு, மாணவர்கள் 60 நாட்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். இப்போது, அந்த காலத்தை 30 நாட்களாகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
மொழிப் படிப்புகளுக்கான அனுமதி 24 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மாதிரி படம்
இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
ஓபன் டோர்ஸ் தரவுகளின்படி, தற்போது அமெரிக்காவில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் உள்ளனர். இவர்களில் 3,30,000 க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள்.
டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த விதிகள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரை, மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது.
ஆனால், அந்த விதிகள் அமலுக்கு வந்தவுடன், மாணவர்களின் விசா காலம் குறைக்கப்படலாம். பல்கலைக் கழகங்களை மாற்ற முடியாது என்ற விதி, இந்த ஆகஸ்ட் மாதம் சேர்க்கை பெறும் (இலையுதிர்கால சேர்க்கை) மாணவர்களுக்கு பொருந்தும்.
அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் முடித்த பிறகு வேலைவாய்ப்பு அல்லது ஹெச்-1பி (H-1B) விசா கிடைக்காத மாணவர்கள் பலரும் ‘இரண்டாவது முதுகலைப் படிப்பு’ படிப்பதன் மூலம் அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். புதிய மாற்றங்கள் அமலாகும் பட்சத்தில், அவ்வாறு செய்ய முடியாது.
5–6 ஆண்டுகள் ஆகும் பிஎச்டி (முனைவர் பட்ட படிப்பு) போன்ற படிப்புகளுக்கு, எப் -1 (F-1) விசா பெற்ற மாணவர்கள் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசா செயல்முறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதில், விசா கட்டணம் செலுத்துதல், பயோமெட்ரிக்ஸ் முறையில் பதிவு செய்தல் மற்றும் நிதி ஆதாரத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்தல் ஆகியவை அடங்கும்.
இந்த மாற்றங்கள் முதலில் 2020-ல் டிரம்ப் அதிபராக இருந்தபோது முன்மொழியப்பட்டன.
பைடன் நிர்வாகம் 2021-ல் அதனைத் திரும்பப் பெற்றது.
ஆனால் இப்போது, டிரம்ப் நிர்வாகம் அதை மீண்டும் கொண்டு வருகிறது.