• Sun. Mar 1st, 2026

24×7 Live News

Apdin News

எகிப்தில் கிரேக்கத்துக்கு மேலே தமிழை பொறித்த ‘சிகை கொற்றன்’ யார்?

Byadmin

Mar 1, 2026


எகிப்து கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள்

பட மூலாதாரம், Ingo

எகிப்தில் உள்ள ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ பகுதியில் இருக்கும் கல்லறைகளில் தமிழ் பிராமி, சமஸ்கிருதம், பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் தமிழ் – பிராமியில் எழுதப்பட்டவை என்கிறார்கள் ஆய்வார்கள். இந்தக் கல்லறைகளில் தமிழில் எழுதியது யார்?

எகிப்தில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings) பகுதியில் இருக்கும் கல்லறைகளில் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் ஆறு கல்லறைகளில் இந்த 30 எழுத்துப் பொறிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் தமிழ் பிராமி எழுத்துகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சென்னையில் நடந்துவரும் தமிழ் கல்வெட்டியல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கில் லோசான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இங்கோ ஸ்டராச்சும் தூர கிழக்கு ஆய்வுகளுக்கான பிரெஞ்சு நிறுவனத்தைச் (French Institute of Far Eastern Studies) சேர்ந்த பேராசிரியர் சார்லட் ஸ்மித்தும் “மன்னர்களின் பள்ளத்தாக்கிலிருந்து இந்தியா வரை: எகிப்தில் இந்திய எழுத்துப் பொறிப்புகள்” (From the Valley of the Kings to India: Indian Inscriptions in Egypt) என்ற தலைப்பில் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டனர்.

இங்கோ ஸ்ட்ராச், 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்றார். அதற்குப் பிறகு அவருடன் பேராசிரியர் சார்லட் ஸ்மித்தும் இணைந்துகொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து அங்குள்ள ஆறு கல்லறைகளில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 30 எழுத்துப் பொறிப்புகளைக் கண்டறிந்தனர்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக ஜூல் பயாய் என்ற ஆய்வாளர் இங்குள்ள கல்லறைகள் அனைத்தையும் ஆராய்ந்து, அதில் உள்ள எழுத்துகளைத் தொகுத்திருக்கிறார். இருந்தபோதும் இந்தியாவைச் சேர்ந்த எழுத்துகளை அவரால் இனம்காண முடியவில்லை என்பதால், அவை இந்தியாவைச் சேர்ந்த எழுத்துகள் என்றே அறியப்படாமலேயே இத்தனை ஆண்டுகளாக இருந்தன.

By admin