• Wed. Dec 17th, 2025

24×7 Live News

Apdin News

’எங்கள் புலமை மரபு கண்ட கைலாசம் பேராசிரியர் கைலாசபதி’ மேனாள் துணைவேந்தர் சண்முகலிங்கன்

Byadmin

Dec 17, 2025


’ஈழத்திலும் தமிழகத்திலும் மட்டுமன்றி உலக அறிவுப்புலத்திலும் தடம் பதித்தவர் பேராசிரியர் கைலாசபதி. தமிழ் புலமை மரபில் கைலாசமாய் புத்தொளி பாய்ச்சியவர்; அறிவின் வழிப்பட்ட தமிழியல் ஆய்வு தடமாகி நிற்பவர்.  அவரது காலத்தில் வாழ்ந்தோம் ,அவரோடு உறவாடினோம் என்பது எமக்குக் கிடைத்த பெரும் பேறு என்பேன்.

இலக்கியத்துக்கும் சமூகவியலுக்குடையிலான இயங்கியல் உறவை அறிவார்ந்து ஆய்வு நிலையில் முறையியலாக வளர்த்தெடுத்தவர் கைலாஸ். தமிழில் திறனாய்வுத்துறையின் முன்னோடியாக அவர் எமக்களித்த முறை யியலானது இலக்கியத்துக்கு மட்டுமானது அல்ல . மாயா வாதங்களுக்குள் மூழ்கி தன் நிலை இழந்திடும் சமூகம் ,பண்பாடு,கல்வி , அரசியல் ஈறான அனைத்துத் துறைகள் பற்றிய புரிதலுக்கும் மேம்பாட்டுக்கும் இன்றி யமையாதது.

தெளிந்த கருத்து நிலையுடன் பல்துறை இணை நோக்கில் அமைந்த அவரது ஆய்வுப்படைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒப்பரிய பாடங்களாகும் ,இவற்றினை இன்றைய தலைமுறையினர் வசமாகுதல் அர்த்தமுள்ள நினைவு கூரலாகும். ’

தேசியக்கலை இலக்கியப்பேரவையின் ஏற்பாட்டில் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில்,ஆசிரிய ஆலோசகர் க. சிவகரன் அவர்கள் தலைமையில் அண்மையில் இடல்பெற்ற பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் 43 வது ஆண்டு நினைவரங்கில் முதன்மைக் கருத்துரையாளராக கலந்து கொண்டு யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பேராசிரியரின் உரையைத்தொடந்து தாயகம் ஆசிரியர் க.தணிகாசலம் அவர்கள் கைலாசபதி அவர்களின் அரசியல் சமூக செயற்பாடுகளின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார் .
நினைவுரைகளைத்தொடர்ந்து பேராசிரியர் கைலாசபதி அவர்களின் ஒப்பியல் இலக்கியத்தில் இடம்பெற்ற ’பொன்னுலகமும் புது யுகமும் ‘என்ற கட்டுரை கவிஞரும், கலை இலக்கிய ஆர்வலருமான வ. றொபின்சன் அவர்களினால் வாசிக்கப்பட்டது. காத்திரமான கலந்துரையாடலுடன் இவ்வாறான பயில்வினை மாதம் தோறும் நடத்துவது என்ற ஏகமனதான தீர்மானத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

The post ’எங்கள் புலமை மரபு கண்ட கைலாசம் பேராசிரியர் கைலாசபதி’ மேனாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் appeared first on Vanakkam London.

By admin