பட மூலாதாரம், Getty Images
“தனிப்பட்ட பிரச்னைகளைப் பற்றி பேச வேண்டாம். நான் யாரையும் எதிர்பார்த்தது இல்லை. கூட்டத்தை ஏன் தவிர்த்தார் என அவரிமே கேளுங்கள்.”
செங்கோட்டையன் தொடர்பான கேள்விக்கு மார்ச் 15ஆம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி இது.
அதுவே மார்ச் 17ஆம் தேதி அவர் அளித்த பேட்டியில் சற்று உற்சாகம் தென்பட்டது.
அப்போது, “எங்களை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நான் முதலமைச்சர் ஆன காலத்தில் இருந்தே இதே திட்டத்தைப் போட்டு வருகிறார்கள். அ.தி.மு.க-வை யாராலும் உடைக்க முடியாது; முடக்க முடியாது,” எனக் கூறினார்.
இரண்டு நாள் இடைவெளியில் என்ன நடந்தது? எடப்பாடி பழனிசாமியிடம் கே.ஏ.செங்கோட்டையன் சமாதானம் ஆனாரா? செங்கோட்டையன் தரப்பு சொல்வது என்ன?
அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை புறக்கணித்த செங்கோட்டையன்
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, பட்ஜெட் கூட்டத் தொடரை எதிர்கொள்வது தொடர்பான அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டியிருந்தார்.
இந்தக் கூட்டத்தை கோபிச்செட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார். மார்ச் 15ஆம் தேதியன்று வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, நடைபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
அதேநேரம், சபாநாயகர் அப்பாவுவை தனது தொகுதிப் பிரச்னை தொடர்பாக செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இது விவாதத்தை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து சட்டமன்றக் கூட்டத் தொடரில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு அ.தி.மு.க தீர்மானித்தது. இதுகுறித்து ஆலோசிக்க எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமையன்று (மார்ச் 15) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அதைப் பற்றி அவரிடமே கேளுங்கள். அவருக்கு வேறு வேலைகள் இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளைப் பற்றிப் பேச வேண்டாம். யாரையும் எதிர்பார்த்து நான் இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி கோபத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையில் மோதல் தொடங்கிவிட்டது. பிப்ரவரி 9ஆம் தேதியன்று அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாய சங்கங்கள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் அதற்கான விழா அழைப்பிதழ்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை எனக் கூறி விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா, மகளிர் தின விழா ஆகியவற்றை செங்கோட்டையன் புறக்கணித்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாகவே அவர் பங்கேற்றார். இந்த நிகழ்வுகள் உள்கட்சி மோதலை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டினர்.
ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளிப்பதுதான் பிரச்னைக்குக் காரணம் என்றொரு கருத்தும் முன்வைக்கப்பட்டது.
பட மூலாதாரம், @KASenkottaiyan
முடிவுக்கு வந்த உட்கட்சி மோதல்
ஆனால், கடந்த திங்கள் கிழமையன்று (மார்ச் 17) உள்கட்சி மோதல்கள் முடிவை எட்டின.
சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க கொண்டு வந்தது. சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதையும் முன்வைத்து அ.தி.மு.க இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது.
தீர்மானத்தை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜூ உள்பட 16 பேர் முன்மொழிந்தனர். இதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறிவிட்டுத் தனது இருக்கையில் இருந்து அப்பாவு எழுந்து சென்றுவிட்டார்.
பின்னர் துணை சபநாயகர் பிச்சாண்டி சபையை நடத்தினார். அப்போது குரல் வாக்கெடுப்பு தொடர்பாக துணை சபாநாயகர் கூறிய அறிவிப்பு, அ.தி.மு.க சார்பில் தேர்வான புதிய உறுப்பினர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
“ஆனால் இதுதான் நடைமுறை” என எடப்பாடி பழனிசாமியிடம் சென்று செங்கோட்டையன் கூறினார். “மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் சொல்வதுதான் சரியானது. அதன்படியே செயல்படுங்கள்” என அ.தி.மு.க உறுப்பினர்களை நோக்கி எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதன்மூலம் இருவருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பார்க்கப்பட்டது. இதை செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, “எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை” எனக் கூறினார்.
சமாதானம் பேசிய சீனியர்கள்
பட மூலாதாரம், @Babumurugavel
இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, “இதற்கான பின்னணிக் காரணம் என்னவென்று தெரியவில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.
அ.தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், “இருவருக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. செய்தியாளர் சந்திப்பில் பொதுச்செயலாளர் பேசிய கருத்துதான் எங்களின் நிலைப்பாடு. ஒன்றும் இல்லாத பிரச்னையை ஊதிப் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறினார்.
“கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சிலர் செங்கோட்டையனிடம் தனிப்பட்ட முறையில் பேசியதால் இருவருக்கும் இடையே மோதல் முடிவுக்கு வந்ததாகப் பேசப்படுகிறதே?” எனக் கேட்டபோது, “கட்சியின் பொதுச் செயலாளரும் செங்கோட்டையனும் இயல்பாக இருந்தாலும் பொதுவெளியில் அது செய்தியாக மாறுகிறது. அதைத் தவிர்க்கும் வகையில் செங்கோட்டையனிடம் பேசியுள்ளனர். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்,” எனக் கூறினார்.
செங்கோட்டையனுக்கு நெருக்கடியா?
பட மூலாதாரம், @KASenkottaiyan
ஆனால், இந்த விவகாரத்தில் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமின் கருத்து வேறாக இருக்கிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அ.தி.மு.க கொறடா முடிவுக்கு மாறாக எதிர்த்து வாக்களித்து இருந்தால் செங்கோட்டையனின் பதவி பறிபோக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தகுதி நீக்க முடிவை உடனே எடுத்துவிட முடியாது” எனக் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கோபிச்செட்டிபாளையம் தொகுதியைக் காலியானதாக அறிவித்து தேர்தலை நடத்துவது சாத்தியமல்ல. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே இருக்கிறது,” என்றார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். “இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. 2017ஆம் ஆண்டு தகுதி நீக்கம் என அறிவித்தாலும் 2019ஆம் ஆண்டுதான் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது” எனக் கூறுகிறார் ஷ்யாம்.
அதேநேரம், தனியார் ஊடக நிறுவனம் நடத்திய விழாவில் செங்கோட்டையன் பேசியதைக் குறிப்பிடும் ஷ்யாம், “அவர் பிரதமர் மோதி, நிதி அமைச்சர் ஆகியோரைப் பாராட்டிப் பேசினார். தான் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். ஆனால் அடுத்து வந்த நாள்களில் அவருக்கான சமிக்ஞை வராமல் போனதால் சமாதானம் ஏற்பட்டிருக்கலாம்,” எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய ஷ்யாம், “எடப்பாடி பழனிசாமியை போல அதிரடி அரசியல் காட்டக்கூடிய நபர் செங்கோட்டையன் அல்ல. மேற்கு மண்டலத்தில் சமூகரீதியாக அவருக்கு நெருக்கடிகள் வந்திருக்கலாம்,” எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் இதை மறுத்துப் பேசும் பாபு முருகவேல், “கட்சிதான் பெரிது. தனி நபர்கள் அல்ல. கட்சிக்கு விரோதமாகவோ பொதுச் செயலாளருக்கு எதிரான நிலைப்பாட்டையோ செங்கோட்டையன் எடுக்கவில்லை. அவ்வாறு எடுத்திருந்தால் பேசலாம்,” என்கிறார்.
‘சமாதானம் ஏற்பட்டுவிட்டது’ – செங்கோட்டையன் தரப்பு
இதுதொடர்பாக, கே.ஏ.செங்கோட்டையனிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அவர் சார்பாகப் பேசிய அவரது உதவியாளர் கதிர் முருகன், “இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஆகிவிட்டது. இருவரும் நல்லபடியாகப் பேசி முடித்துவிட்டனர்” என்று மட்டும் பதில் அளித்தார்.
இதன் பின்னணி குறித்த மேலதிக கேள்விகளை எழுப்பியபோது, அவர் பதில் அளிக்கவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு