டெல்லி சென்றுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செவ்வாய்க் கிழமையன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஏற்படுகிறதா என்ற கேள்வியை இந்தச் சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க் கிழமையன்று (மார்ச் 25) காலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் இந்த டெல்லி பயணம் பலரது புருவங்களை உயர்த்தியது.
இதையடுத்து, டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களைச் சந்திக்கப் போகிறாரா, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி உருவாகிறதா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
பட மூலாதாரம், Getty Images
விமான நிலையத்தில் செய்தியாளர்கள், நீங்கள் முக்கியமான நபரைச் சந்திக்க வந்திருக்கிறீர்களா என்று கேட்டபோது எடப்பாடி கே. பழனிசாமி அதை மறுத்தார். “நான் எதற்காக டெல்லி வந்திருக்கிறேன் என்று தெரியாமல் கேட்கிறீர்களே… நான் கட்சி ஆஃபீஸை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்” என்று மட்டும் கூறினார்.
இதற்குப் பிறகு டெல்லியில் புதிதாகத் திறக்கப்பட்ட அ.தி.மு.க. அலுவலகத்திற்குச் சென்ற எடப்பாடி கே. பழனிசாமி, அதைப் பார்வையிட்டார். மாலையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணியும் கே.பி.முனுசாமியும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதற்குப் பிறகு, தம்பிதுரை முதலில் அமித் ஷாவின் இல்லத்திற்குச் சென்றார். பிறகு சுமார் 8 மணியளவில் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் அங்கே சென்றனர். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி, தம்பிதுரை உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பு இரண்டு மணிநேரம் நீடித்ததாகத் தெரிகிறது.
அமித் ஷா உடனான சந்திப்பு முடிந்து வெளியில் வந்த எடப்பாடி கே. பழனிசாமி அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமல் புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில் இரவு 10:15 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “2026இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என தமிழிலும் ஹிந்தியிலும் குறிப்பிட்டிருந்தார்.
பட மூலாதாரம், Annamalai/X
எடப்பாடி கே. பழனிசாமி – அமித் ஷா சந்திப்பு நடப்பதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையிடம் எடப்பாடி கே.பழனிசாமியும் மத்திய உள்துறை அமைச்சரும் சந்திப்பார்களா, பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டமி அமையுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்தித்துப் பேசலாம். இதை அரசியல் ரீதியாக முடிச்சுப் போட்டு, கேள்வியெழுப்பினால் நான் பதில் சொல்லும் நிலையில் இல்லை. எல்லோருக்கும் உள்துறை அமைச்சரைச் சந்திக்க உரிமை உள்ளது. சந்திப்பிற்குப் பிறகு, குறிப்பாகக் கேள்வி கேட்டால் பதில் சொல்கிறேன். இப்போது பதில் சொன்னால் தவறாகிவிடும்.
ஆட்சியில் இருந்து தி.மு.க. அகற்றப்பட வேண்டும் என எல்லோரும் விரும்புகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். இந்தத் தேர்தல் களம் வித்தியாசமான தேர்தல் களம். இந்த முறை, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என ஐந்து முனைப் போட்டி நிலவலாம். இந்த ஐந்து முனைப் போட்டி மூன்று முனைப் போட்டியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்றார்.
பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையிலான முந்தைய கூட்டணி
அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட்டன. அந்தக் கூட்டணியில், அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருந்தன.
அந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணி தேனி நாடாளுமன்றத் தொகுதியைத் தவிர, அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. இதற்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி களத்தில் நின்றது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. 66 இடங்களையும் பா.ம.க. 5 இடங்களையும் பா.ஜ.க. நான்கு இடங்களையும் பிடித்தன.
ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க. – அ.தி.மு.க. இடையில் உரசல்கள் ஏற்பட்டன. முன்னாள் முதலமைச்சர்கள் சி.என்.அண்ணாதுரை, ஜெ.ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய பேச்சுகள் அ.தி.மு.கவிற்குள் கோபத்தை ஏற்படுத்தின.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ என்ற மாநாட்டை அ.தி.மு.க. நடத்தியது. இந்த மாநாட்டைப் பற்றியும் எடப்பாடி கே. பழனிசாமி குறித்தும் அண்ணாமலை விமர்சித்துப் பேசியது, அ.தி.மு.க. தலைவர்களிடம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டிய அ.தி.மு.க., பா.ஜ.கவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது இரு கட்சிகளுமே வெவ்வேறு கூட்டணியை அமைத்துப் போட்டியிடன. ஆனால், தி.மு.க. கூட்டணியே அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. ஆனால், இதற்குப் பிறகும் பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது என்றே எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் பேசி வந்தனர்.
ஆனால், கடந்த சில தினங்களாக பா.ஜ.கவுடன் கூட்டணி அமையுமா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினால், அதை மறுக்காமல் “கூட்டணி குறித்தெல்லாம் தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்” என எடப்பாடி கே. பழனிசாமி சொல்ல ஆரம்பித்தார்.
இதற்கிடையில், கோயம்புத்தூர் வந்த அமித் ஷாவை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் எடப்பாடி கே. பழனிசாமி – அமித் ஷா இடையிலான சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.