அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கியதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அந்த விழாவை புறக்கணித்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், விழாவுக்கான அழைப்பிதழில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் பங்கேற்கவில்லை என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரது கருத்தை டிடிவி தினகரன் போன்றோர் விமர்சித்து வரும் நிலையில், அந்த நிகழ்ச்சி அரசியல் சார்ந்தது இல்லை என்பதால் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படவில்லை என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே கருத்தை அதிமுக சார்பில் ஜெயக்குமாரும் கூறியுள்ளார்.
பவானி ஆற்றில் உபரியாக வரும் நீரை நீரேற்றம் செய்து, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், அப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளை நிரப்பும் திட்டமே அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகும்.
2 நாளில் 2 நிகழ்ச்சிகளை புறக்கணித்த செங்கோட்டையன்
இந்த திட்டத்துக்கு, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.1652 கோடி நிதி ஒதுக்கப்பட்டதால், அத்திக்கடவு – அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் 3 மாவட்ட விவசாயிகள் சார்பில், அவருக்கு கடந்த ஞாயிறன்று, கோவையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவில் எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
ஆனால் அதிமுக மூத்த தலைவரும், திட்டத்தில் பயனடையும் பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
அத்துடன் டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை நிலைய அலுவலகத்தில் இருந்தபடி, காணொளி வாயிலாக பழனிசாமி இன்று காலையில் திறந்து வைத்தார். அதிமுக மூத்த தலைவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்ற நிலையில், செங்கோட்டையன் அதிலும் பங்கேற்கவில்லை.
‘3 நாட்களுக்கு முன்புதான் அழைப்பிதழ்’
இன்று காலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனுக்கொடுக்க வந்த செங்கோட்டையன், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
கோபி நகராட்சியுடன் சில ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிராக மனுக் கொடுக்க வந்ததாகக் கூறிய அவர், பாராட்டு விழாவில், பங்கேற்காததற்கான காரணத்தை கூறினார்.
பாராட்டுவிழா அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதபடங்கள் இல்லை என்று விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறிய செங்கோட்டையன், ”நீங்கள் கலந்து பேசி இருந்தால் என்னுடைய உணர்வுகளை கூறியிருப்பேன். 3 நாட்களுக்கு முன்புதான் அழைப்பிதழ் கொடுக்கிறீர்கள்” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறினேன் என்றார்.
அத்துடன், ” பாராட்டுவிழாவை புறக்கணித்தேன் என்பதை விட, என் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறேன் ” என்று குறிப்பிட்டார்
ஜெயக்குமாரின் விளக்கமும் டிடிவி தினகரனின் விமர்சனமும்
செங்கோட்டையனின் இந்த பேட்டி, காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரவியதும், அதிமுக வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழக அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
”எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவை, அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. விவசாயிகள் கூட்டமைப்புதான் ஏற்பாடு செய்தது. அதில் அனைத்துக் கட்சி விவசாயிகளும் உள்ளதால் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை அவர்கள் வைக்கவில்லை.” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
ஜெயக்குமார் பேட்டி வெளியான சிறிது நேரத்தில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,”எம்ஜிஆர் கட்சி துவக்கிய நாளிலிருந்து, செங்கோட்டையன் இருக்கிறார். 1977 முதல் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் தற்போது தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் தொண்டன் என்ற முறையில், அவர் சரியாகச் சொல்லியிருக்கிறார் என்று கருதுகிறேன். அதிமுக தொடர் தோல்விக்கு பழனிசாமி காரணமாகவுள்ளார். அவர் விரைவில் அதிமுகவுக்கு மூடுவிழா நடத்திவிடுவார் என்று நான் கூறிவருகிறேன். அதை ஏற்கும் விதமாக செங்கோட்டையன் கருத்துத் தெரிவித்துள்ளதாக நினைக்கிறேன்.” என்றார்
”அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை ஆய்வு செய்யச் சொல்லி முதலில் நிதி ஒதுக்கியது ஜெயலலிதாதான்; அவருடைய ஆட்சியின் நீட்சிதான் பழனிசாமி ஆட்சி” என்று கூறிய டிடிவி தினகரன், ”அப்படியிருக்கையில் ஜெயலலிதாவின் படத்தைப் போடாததை ஏற்க முடியாது” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
விழா ஏற்பாட்டாளர் கூறும் விளக்கம்
”நாங்கள் செங்கோட்டையனைச் சந்திக்க பல நாட்களாக முயற்சி செய்தோம். அவரிடம் அப்பாயின்மென்ட் கிடைக்கவேயில்லை. கடைசியில் 3 நாட்களுக்கு முன்புதான் அவரைச் சந்திக்க முடிந்தது. அவர் எங்களிடம் இதுபற்றி வருத்தப்பட்டார். அதற்கு முன்பே விழாவுக்கான பிளக்ஸ், அழைப்பிதழ் உள்ளிட்ட எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. ஆனால், பாராட்டு விழாவில் பேசிய எங்கள் நிர்வாகிகள் எல்லோரும் வார்த்தைக்கு வார்த்தை ஜெயலலிதாவைப் புகழ்ந்தனர்.” என்றார் அத்திக்கடவு–அவிநாசி திட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், விழாவுக்கு தலைமை வகித்தவருமான நடராஜன்.
அதிருப்தி காரணமா?
பெயர் கூற விரும்பாத அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் செங்கோட்டையன் பரிந்துரைத்த சிலரை, எடப்பாடி பழனிசாமி போடாததும், புதிய நிர்வாகிகள் நியமனத்தில் அவரிடம் கலந்து பேசாததுமே அதிருப்திக்கு காரணமென்று தெரிவித்தார்.
கட்சிக்குள் தனக்கான மரியாதை குறைவாக இருப்பதாக அவர் கருதியதை, இந்த விழாவின் மூலமாக வெளிப்படுத்திவிட்டார் என்றார்.
இதுகுறித்து செங்கோட்டையனின் கருத்தை அறிய முயன்றபோது, காலையில் தெரிவித்த கருத்தைத் தவிர, வேறு எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்க விரும்பவில்லை என்று அவரது உதவியாளர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் கருத்துக் கேட்க முயன்றபோது, அவர் தரப்பில் பேசிய செய்தித்தொடர்பாளர் ஒருவர், கட்சி சார்பில் இதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினால் போதுமென்று அவர் கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.
அத்திக்கடவு–அவிநாசி திட்டம் கடந்து வந்த பாதை
1957 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ள 1996 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இந்த திட்டத்துக்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க 2011 ஆம் ஆண்டில், அன்றைய முதல்வர் ஜெயலலிதா ரூ.3.75 கோடி நிதி ஒதுக்கினார். இத்திட்டத்துக்கு கடந்த 2013 ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டது.
திட்டத்துக்கான அடிப்படையான நீர் ஆதாரம் குறித்து சரியான விளக்கத்தை தமிழக அரசு தரவில்லை என்று மத்திய அரசு நிதியுதவி அளிக்க மறுத்துவிட்டது. ஆனால் ”மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும் ஒதுக்காவிட்டாலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.” என்று அப்போதிருந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் பெருளவில் நிதி ஒதுக்கீடு செய்யாததால் திட்டம் தாமதமாகிவந்தது; போராட்டங்களும் வலுத்து வந்தன.
அதன்பின் கடந்த 2018 ஆம் ஆண்டில், இத்திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த உத்தரவிட்ட அன்றைய முதல்வர் பழனிசாமி, ரூ.1652 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு 2019ம் ஆண்டு பிப்., 28ம் தேதியன்று அடிக்கல் நாட்டினார். கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆட்சி மாறியபின், 2022 ஆம் ஆண்டில் திட்டப்பணிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், பணிகள் முடிந்தபின், 2024 ஆகஸ்ட் 17 அன்று, திட்டத்தை துவக்கி வைத்தார். ரூ.1,652 கோடி ரூபாயில் துவங்கிய திட்டம், 1,916 கோடி ரூபாயில் நிறைவு செய்யப்பட்டது.
பவானி ஆற்றில் வரும் உபரி நீரில் காளிங்கராயன் அணைக்கு கீழ்பகுதியில், 1.5 டிஎம்சி அளவுக்கு எடுக்கப்பட்டு, 1,065 கிலோ மீட்டருக்கு ராட்சத குழாய் நிலத்தடியில் புதைக்கப்பட்டு, அதன் வழியாக நீரை பம்பிங் செய்து எடுத்துச் சென்று, 1,045 குளம், குட்டைகளைக்கு நீர் நிரப்பும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தின் துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த தகவலின்படி, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பப்படுவதால், 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுமென்பது எதிர்பார்ப்பாகவுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.