பள்ளிக்கூடங்களில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு யார், யாருக்கு பொருந்தும்?
நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மத்திய அரசு நடத்தும் பள்ளிக்கூடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
கடந்த 2019ஆம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஏற்கனவே இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களும் 2 யூனியன் பிரதேசங்களும் இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்திருக்கின்றன. தற்போது மத்திய அரசும் தான் நடத்தும் பள்ளிக்கூடங்களுக்காக இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி, ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் படிக்கும் ஒரு மாணவர் அடுத்த வகுப்புக்குச் செல்வதற்கான தேர்வில் தேர்ச்சியடையவில்லையென்றால், தேர்வு முடிவுகள் வெளிவந்ததில் இருந்து அடுத்த 2 மாதங்களுக்குள் மீண்டும் ஒரு முறை தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.
யாருக்கெல்லாம் பொருந்தும்?
அந்தத் தேர்விலும் அந்த மாணவர் தேர்ச்சியடையவில்லையென்றால், அந்த மாணவர் ஐந்தாம் வகுப்பிலோ எட்டாம் வகுப்பிலோ மீண்டும் படிக்க வேண்டும். மீண்டும் படிக்கும் அந்த காலக்கட்டத்தில் குழந்தைக்குக் கற்றலில் என்ன பிரச்னை இருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
இருந்த போதும், ஆரம்பக் கல்வியை முடிக்கும் வரை எந்தக் குழந்தையும் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் உள்ளிட்ட 3,000 பள்ளிகளுக்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு நடத்தும் பள்ளிக்கூடங்களைப் பொறுத்தவரை அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் இதுவரை 16 மாநிலங்களும் டெல்லி உள்ளிட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களும் 8ஆம் வகுப்புவரை கட்டாயத் தேர்வு முறையை ரத்து செய்திருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.
தமிழ்நாட்டில் எத்தகைய தாக்கம் இருக்கும்?
தற்போது வெளியாகியிருக்கும் அறிவிப்பு மத்திய அரசின் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இதனால், தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் சைனிக் பள்ளிகளிலும் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீதும் இந்த அறிவிப்பு தாக்கம் செலுத்தும்.
ஐந்தாம் வகுப்பு படிக்கக்கூடிய குழந்தையின் தரத்தை தேர்வை வைத்து முடிவு செய்து, தேர்ச்சியை நிறுத்தக் கூடாது என்கிறார் கல்வியாளரான டாக்டர் முருகைய்யன் பக்கிரிசாமி.
“கட்டாயத் தேர்ச்சி என்பதை பலரும் மாணவர்களின் தரத்தைக் கவனிக்காமல் அடுத்த வகுப்புக்குத் தள்ளுவதைப் போல புரிந்துகொள்கிறார்கள். 10 வயதே நிரம்பிய குழந்தை அந்த வயதுக்குரிய கல்வியைப் பெறுவதை ஆசிரியர்கள், கல்வித்துறை ஆகியவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை அம்சம். இதில் சமூகத்திற்கும் பொறுப்பு உள்ளது” என்கிறார் பக்கிரிசாமி.
எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை வருவதற்கு முன்பாக, ஒரு குழந்தை ஏதாவது ஒரு வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால், அந்த வகுப்போடு படிப்பை நிறுத்துவது வழக்கமாக இருந்தது என்று கூறும் அவர், இப்போது அது கிட்டத்தட்ட முழுமையாக நின்றுவிட்டது என்கிறார்.
‘புதிதாக ஏதுமில்லை’
ஆனால், ஏற்கனவே 2009ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டம் இதற்காக திருத்தப்பட்டுவிட்ட நிலையில், இதில் புதிதாக ஏதுமில்லை என்கிறார் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் பிரின்ஸ் கஜேந்திரபாபு. ஆனால், வேறு சில விஷயங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“குழந்தைகளுக்கு தேர்வு இல்லாமல், அவர்களது கல்வி வளர்ச்சி கண்காணிக்கப்பட வேண்டும். குழந்தை ஒவ்வொரு நாளும் எப்படி முன்னேறுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். முதலில், பள்ளிக்கு வருகிறதா, புத்தகங்களை எடுக்கிறதா, படிக்கத் துவங்குகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். பிறகு படித்த விஷயங்களை எப்படி புரிந்துகொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்” என வலியுறுத்துகிறார் அவர்.
இதில் குறைபாடு இருந்தால் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்தப் பொறுப்பு வகுப்பின் ஆசிரியருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் உரியது என்றும் கூறுகிறார் பிரின்ஸ்.
“மற்றபடி இந்த அறிவிப்பில் புதிதாக ஏதுமில்லை. ஏற்கனவே சட்டம் இருக்கும் நிலையில், அறிவிப்பு வெளியாகியுள்ளது” என்கிறார் பிரின்ஸ்.
கடந்த 2009ஆம் ஆண்டில் இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்புவரை எந்த ஒரு குழந்தையையும் மீண்டும் அதே வகுப்பில் படிக்கச் செய்யக்கூடாது. 2010ஆம் ஆண்டில் இது நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பே பல மாநிலங்கள், இந்த முறையைச் செயல்படுத்திவந்தன.
இந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, எட்டாம் வகுப்பு வரை யாரையும் மீண்டும் அதே வகுப்பில் படிக்கச் செய்யக் கூடாது என்ற அந்தச் சட்டத்தின் 16வது பிரிவு திருத்தப்பட்டது.
இதற்குப் பிறகு பல மாநிலங்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்தன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2019ஆம் ஆண்டில் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்வதாக அரசாணை வெளியிடப்பட்டு பிறகு, அந்த அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே, எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்யும் நடைமுறை தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளிகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பெற்றோரும் இதுதொடர்பாக குழப்பமடையத் தேவையில்லை என்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் நிலையில் மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய அரசு பள்ளிகள் தவிர்த்த பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது. பெற்றோரும் மாணவர்களும் ஆசிரியர்களும் மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து குழப்பமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரை தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்” என்று கூறியிருக்கிறார்.