அண்மை காலமாக இந்தியாவில் சர்வதேச இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தும் நிகழ்வு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
தனது இசையால் உலக அளவில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் 33 வயதான எட் ஷீரன். சென்னையில் தனது இசை நிகழ்ச்சியை பிப்ரவரி 5-ஆம் தேதி நடந்துகிறார்.
சமீப ஆண்டுகளில் உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட பிரபல இசைக்கலைஞர் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
இந்தியாவில் கான்செர்ட் பொருளாதாரம்
உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டாடிஸ்டா(statista), “இந்திய இசைத்துறையின் மதிப்பு 2021ஆம் ஆண்டு 1900 கோடி ரூபாயாக இருந்தது. 2026ஆம் ஆண்டுக்குள் 3700 கோடி ரூபாயாக உயரும்”, என மதிப்பிடுகிறது.
அண்மையில் ஆமதாபாத்தில் நடைபெற்ற கோல்ட் ப்ளே(Cold Play) கான்செர்ட்(இசை நிகழ்ச்சி) குறித்து கருத்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, “இசை, நடனம் மற்றும் கதை சொல்லுதல் ஆகியவற்றில் வளமான பாரம்பரியத்தைக் கொண்டது இந்தியா. இசை நிகழ்ச்சிகளுக்கான மிகப்பெரிய நுகர்வோர் தளம், அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் கான்செர்ட் பொருளாதாரத்துக்கு பரந்த வாய்ப்புகள் உள்ளன. கோல்ட் ப்ளே கான்செர்ட் இந்தியாவில் லைவ் நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதற்கு சிறந்த சான்றாகும்,” என்றார்.
இந்தியாவில் கான்செர்ட் பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும், மிகப்பெரிய இசை நிகழ்ச்சிகளை நடத்தும் அளவுக்கு வெளிநாடுகளில் உள்ளது போல அரங்கம் இந்தியாவில் இல்லை என்ற கருத்து சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது.
அண்மையில் பாடகர் தில்ஜித் டெல்லி மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு பிறகு, அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.
டெல்லியில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சிக்கு பயன்படுத்திய விளையாட்டு மைதானம், சேதமானது குறித்து தடகள வீரர் ஒருவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
சென்னையில் இசை நிகழ்ச்சி பற்றி ரசிகர்கள் கூறுவது என்ன?
உலகம் முழுவதும் தனது ரசிகர்களுக்கான இசை நிகழ்ச்சி நடத்தி வரும் எட் ஷீரன், இந்தியாவில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
சென்னை உட்பட இந்தியாவின் சில நகரங்களில் தனது இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இதற்கு முன்பாக மும்பையில் எட் ஷீரன் தனது இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
எட் ஷீரனின் இசை நிகழ்ச்சிக்கு(கான்செர்ட்) செல்ல டிக்கெட் வாங்கியுள்ள சென்னையைச் சேர்ந்த நஜீலா பிபிசி தமிழிடம் பேசினார்.
“2014 முதல் வெஸ்டெர்ன் பாடல்களை கேட்டு வருகிறேன். எட் ஷீரன் பாடல் மிகவும் பிடிக்கும். அவரது பாடல்கள் மெதுவான இசையில் மெலடியாகவும் உணர்வுப் பூர்வமாகவும் இருக்கும். அவரது பாடல் வரிகள் எல்லோரையும் இணைக்கும்படி இருக்கும். குறிப்பாக அவரது போட்டோகிராஃப் பாடல் நான் தினமும் கேட்கும் பாடல். இதற்கு முன் கான்செர்ட்களில் நான் பங்கேற்றதில்லை. இந்த கான்செர்ட்டுக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்.” என்றார்
ராம்குமார் என்ற ரசிகர் பிபிசியிடம் பேசும் போது, “பெரும்பாலும் மும்பையில்தான் இது போன்ற இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற எட் ஷீரன் நிகழ்ச்சிக்கு செல்ல முடிவெடுத்தோம். ஆனால், ஆரம்பத்தில் குறிப்பிட்ட கட்டணத்தை மிகவும் அதிகப்படுத்திவிட்டனர். விமான கட்டணமும் அதிகமாக இருந்தது என்பதால் செல்லவில்லை. இப்போது சென்னைக்கே எட் ஷீரன் வருகிறார் என்பதால் இதை தவறவிடக் கூடாது என செல்கிறேன்,” என்றார்.
யார் இந்த எட் ஷீரன்
இணையத்தில், உலகளவில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 வீடியோக்கள் என்ன என்று தேடினால் அதில் எட் ஷீரனின் பாடல் இடம்பெற்று இருக்கும். பல நூறு கோடி பார்வைகளைப் பெற்ற ஷேப் ஆஃப் யூ (Shape Of You) என்ற பாடல் மூலம் இசை உலகில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை எட்ஷீரன் ஏற்படுத்தியுள்ளார்.
எட்ஷீரன் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பிரிட்டனில் பிறந்தவர்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கன் இன்ஸ்டியூட் ஃபார் ஸ்டட்டரிங் என்ற அமைப்பின் 9-ஆவது ஆண்டு விழாவின் போது எட் ஷீரனுக்கு விருது ஒன்று வழங்கப்பட்டது.
அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “எனக்கு பிறக்கும்போதே உடலில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. மேலும் எனது முகத்தில் இருந்த மச்சத்தை (Birthmark) நீக்க லேசர் சிகிச்சை செய்யப்பட்டது. மயக்க மருந்து கொடுக்காமல் எனக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டதால் புதிய சிக்கல் உருவானது.
அதன் பின்விளைவாக எனக்கு பேசுவதில் சிரமம் ஏற்பட்டு, ‘திக்குவாய்’ பிரச்னை ஏற்பட்டது. மேலும் எனது ஒரு பக்க காதிலும் கேட்கும் குறைபாடு இருந்தது. பள்ளிப்பருவத்திலேயே எனக்கு பார்வைத்திறனில் குறைபாடு இருந்ததால் பெரிய கண்ணாடி அணிய வேண்டியிருந்தது. இத்தனை பிரச்னைகள் இருந்தபோதிலும் எனக்கு சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகவும் இருந்தது. ஆகவே திக்குவாய் பிரச்னை எனக்கு மிகவும் குறைந்தபட்ச பிரச்னையாகவே இருந்தது. கலை மற்றும் இசை பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்திலிருந்து நான் வந்தேன் என்பதால் எனக்கு இசை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது”. என்றார்.
தடையாக இருந்த ‘திக்குவாய்’ பிரச்னை
“பேசும் போது வார்த்தைகளை உச்சரிப்பில் பிரச்னை இருந்தநிலையில், அதனை மீறி எப்படி பாடுவது என்று யோசித்து அதற்காக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டேன். ஸ்பீச் தெரபி, ஹோமியோபதி என சிகிச்சை முறைகளையும் எடுத்திருக்கிறேன்.
ஆனால் அவை எதுவும் எனக்கு பலன் தரவில்லை. சிறு வயதில் இருந்தே எனக்கு இசை மீது ஆர்வம் இருந்தது, குறிப்பாக ராப் இசை. எனது தந்தை எனக்கு ராப் இசைப்பாடகர் எமினெமின் (Eminem) பாடல்களின் இசைத்தொகுப்பு கேசேட்களை வாங்கி கொடுத்தார். அப்போது எனக்கு 9 வயதுதான் ஆகியிருந்தது.
அதில் இருந்த அனைத்து பாடல்களையும் முழுமையாக மனப்பாடம் செய்து அதே போல பாட முயற்சி செய்தேன். இது எனது திக்கிப் பேசும் பிரச்னையை தீர்க்க உதவியாக இருந்தது”, என்றும் எட் ஷீரன் அந்த நிகழ்ச்சியின் பேசினார்.
இளமைப் பருவத்தில் எமினெம் பாடல்களை மனப்பாடம் செய்து பாடிய இவர், பிற்காலத்தில் எமினெம் உடன் ஒரே மேடையில் பாடவும் செய்தார். பாடல்கள் பாடுவதோடு இவர் கிட்டார் போன்ற இசைக்கருவிகளையும் இசைப்பார்.
வைரலான பாடல்கள்
இசை தொழில் முனைவோரான ஜமால் எட்வர்ட்ஸ் என்பவர் எஸ்பி டிவி மீயூசிக் (SBTV: Music) என்ற யூட்யூப் சேனலில் 2010ஆம் ஆண்டு You Need Me, I Don’t Need You என்ற பாடலை எட் ஷீரனை பாடவைத்தார். அந்த பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகவே எட் ஷீரன் குறித்து பலரும் பேசத் தொடங்கினர்.
அதனைத்தொடர்ந்து, + (Plus), X (Multiply), ÷ (Divide), No.6 Collaborations Project, = (Equals) என்று பல இசை ஆல்பங்களை எட்ஷீரன் வெளியிட்டார்.
இந்த ஆல்பங்கள் மூலம் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உருவாகினார்.
எட்ஷீரனுக்கு கணிதத்தில் ஆர்வமா?
கூட்டல், பெருக்கல், வகுத்தல் – எட்ஷீரனுக்கு கணிதத்தில் ஆர்வமா?
இந்தக் கேள்விக்கு எட் ஷீரனே ஒரு தனியார் யூட்யூப் சேனலின் நேர்காணலில் விடை சொல்கிறார்.
“நான் எனது இசை வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலேயே ஒரு முடிவு எடுத்தேன். ஆல்பம் போஸ்டரில் என்னுடைய படம் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை. அதனால் ஆல்பத்தின் போஸ்டர் ஒரு கலர் மற்றும் ஒரு அடையாளக் குறியுடன் இருக்கும்படி அதனை அமைத்தேன்,” என்கிறார்.
600 கோடி பார்வைகள் கடந்து சாதனை
இவரது ஷேப் ஆஃப் யூ என்ற பாடல் இதுவரை 600 கோடி பார்வைகளை கடந்து யூட்யூப் தளத்தில் அதிக பார்வைகளை பெற்ற வீடியோக்கள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
எட்ஷீரனின் பல பாடல்கள், யூட்யூபில் 100 கோடி பார்வைகளை கடந்துள்ளன.
பெர்ஃபெக்ட், திங்கிங் அவுட் லௌட், போட்டோகிராஃப் போன்றவை இவரது ஹிட் பாடல்கள் ஆகும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.