• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

எண்ணூர் அனல்மின் நிலைய விபத்து: பணி பாதுகாப்பு கோரும் அரசியல் கட்சி தலைவர்கள் | Ennore Thermal Plant Accident Dead Party Leaders Condolence and Request

Byadmin

Oct 1, 2025


சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீஞ்​சூர் அருகே எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​த விபத்தில், வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் ஆபத்​தான நிலை​யில் தீவிர சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

இதனிடையே விபத்​தில் உயி​ரிழந்த தொழிலா​ளர்​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ.10 லட்​சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறி​வித்​துள்ளார். இதே​போல் பிரதமர் மோடி​ உயிரிழந்த தொழிலா​ளர் குடும்​பங்​களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறி​வித்​துள்​ளார்​. இந்த நிலையில், எண்ணூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கட்சி தலைவர்கள், வட மாநில தொழிலாளர்களுக்கு முறையான பணி பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிறுவன கட்டுமானப் பணிகளின் போது நடந்த விபத்தில் 9 அசாம் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்கள் குடும்பத்திற்கு அதிகப்படியான நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அனல்மின் நிலையத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு செய்திருக்க வேண்டும். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை அவசியம் தேவை. குறிப்பாக வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்துக்கு வந்து பணி செய்யும் போது அவர்களுக்கான பணிப் பாதுகாப்பு மிகவும் முகியத்துவம் வாய்ந்தது.

எனவே தமிழக அரசு, இது போன்ற ஒரு சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். பணிக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பாதுகாப்பில் கவனக்குறைவு இருக்கக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் மாநிலத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமானப்பணியின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்: கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் காட்டப்பட்ட அலட்சியம் தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த தொழிலாளர்களுக்கு தரமான மருத்துவமும் ரூ.5 லட்சம் நிதி உதவியும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அன்புமணி கூறியுள்ளார்.



By admin