சென்னை: எண்ணூர் விரிவாக்க மின்திட்டப் பணிகளை பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் கீழ், தொடங்கினால் நிலக்கரி விநியோகம் செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்வாரியமே இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
சென்னையை அடுத்த எண்ணூரில் தலா 660 மெகாவாட் திறனில் எண்ணூர் விரிவாக்க அனல்மின் நிலையத்தை மின்வாரியம் அமைக்கிறது. இதனுடன், எண்ணூர் சிறப்பு 1,320 மெகாவாட், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி 1,320 மெகாவாட் திறன் உடைய அனல்மின் திட்டங்களுக்கு, பொதுத் துறையைச் சேர்ந்த மகாநதி, சிங்கரேணி நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி பெற மத்திய நிலக்கரி அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது.
எண்ணூர் விரிவாக்க மின்நிலைய கட்டுமான பணியை லேன்கோ என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக கடந்த 2014-ம் ஆண்டு மின்வாரியம் தொடங்கியது. அந்நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால் கடந்த 2018-ம் ஆண்டு பணிகள் முடங்கின. பின்னர், ரூ.4,442 கோடியில் எஞ்சிய பணிகளை தொடர பிஜிஆர் என்ற தனியார் நிறுவனத்துக்கு 2022-ம் ஆண்டு பணி ஆணை வழங்கப்பட்டது.
அந்நிறுவனமும் பணிகளை தொடங்காததால் ஒப்பந்த ஆணை ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் கீழ், எண்ணூர் விரிவாக்க மின்திட்டப் பணிகளை தொடங்கினால் நிலக்கரி விநியோகம் செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, மின்வாரியமே இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பொது மற்றும் தனியார் முறையில் மின்திட்டத்தை செயல்படுத்தும் போது, நிலக்கரி ஒப்பந்தத்தில் கட்டுப்பாடுகள் உள்ளன. பொது மற்றும் தனியார் நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிலக்கரி ஒதுக்கப்படாது என மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே, எண்ணூர் விரிவாக்க மின்திட்டத்தை மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத்தினால் மட்டுமே நிலக்கரி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை மின்வாரியமே நேரடியாக செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.