அருகில் வைத்திருந்த கைத்தொலைபேசியின் இடைவிடாத அலறல் சத்தத்தில் நான் மட்டுமல்ல என் அருகில் படுத்திருந்த ரமணனும் உறக்கம் கலைந்து எழுந்து விட்டார். பதறியபடி போனை எடுத்து அழைத்தது யாரென்று பாராமலே சத்தத்தைக் குறைத்து விட்டுத் திரும்பி ரமணனைப் பார்த்தேன். எழுந்தவர் மேசையிலிருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்ததும் தூக்கத்தில் சிவந்திருந்த அவரின் கண்கள் கோபத்தில் மேலும் சிவந்தது.
“படுக்கிறநேரம் போனை அறைக்குள்ள வைக்காத எண்டு எத்தினை தரம் உனக்கு சொல்லுறது. இல்லை.. சத்தத்தைக் குறைச்சுப்போட்டாவது வையன் வேலைக்குப் போய் களைச்சு வந்து சாமம் ஒரு மணிக்குத்தான் படுக்கிறன் மூண்டு மணிக்கு எழுப்பி விட்டிட்டாய். நேரகாலம் இல்லாமல் அடிக்கிறது ஆர் உன்ர கலைச்செல்வியே” கத்தினார்.
போனை எடுத்து யார் என்று பார்த்ததும் எழுந்த கோபத்தை என்னாலும் அடக்க முடியவில்லை. இலங்கை நேரப்படி காலையில் எடுக்கிறாளே… லண்டனில் நள்ளிரவாய் இருக்கும் என்று தெரியாதா… போனை எடுக்கும்போது நேரம் பார்த்து எடு என்று எத்தனை தடவை இவளுக்குச் சொல்லியிருக்கிறேன். அப்பிடி என்ன அவசரமோ..
“விடிஞ்ச பிறகு அவளுக்கு எடுக்கிறன் நீங்கள் படுங்கோ” என்றேன் அவசரமாக.
“ஊருக்கு உதவி செய் ஆனால் எங்களுக்கு உபத்திரமில்லாமல் பார்த்துக்கொள்”
உறுமிவிட்டுத் திரும்பிப் படுத்தார். கலைந்த நித்திரை திரும்ப வர மறுத்தது.
நித்திரை கலைந்த கோபத்தோடு பக்கத்து அறையில் படுத்திருக்கும் சாலினியும் எழுந்திருப்பாளோ என்று நினைத்து அவளின் அறைக்குப் போனேன். தலையணையை அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் முகத்தைப் பார்த்ததும் கோபம் கரைந்தது. மனம் நெகிழ மெதுவாக சென்று அவளருகில் படுத்து அவளின் உறக்கம் கலையாதவாறு முத்தமிட்டு அணைத்துக் கொண்டேன். இவளால்தான் கலைச்செல்வி எங்களுக்கு அறிமுகமானாள்.
எங்களுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் குழந்தையில்லாமல் தவித்துப்போனோம். அதன் பிறகு இரண்டுமுறை வயிற்றில் தங்கியும் கைக்கு வராமல் போய்விட உடைந்து விட்டோம். ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாய் இருந்து மனதைத் தேற்றிக் கொண்டாலும் ஒரு எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். பத்தாவது திருமண நாளைக் கொண்டாடும்போது சாலினி
எங்கள் வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் பிறந்து கையில் ஏந்தும் வரை நாம் பட்டபாடுகள் அதிகம். என் வேலையை விட்டு அவளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டேன். இன்னொரு இழப்பைத் தாங்கும் சக்தி எங்களுக்கு இல்லை. அவளின் விருப்பங்களும் சந்தோஷங்களுமே எங்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது. அவளும் சுட்டியாக வளர்ந்தாள். அவளின் ஒவ்வொரு பிறந்தநாளையும் பெரிதாகக் கொண்டாடினோம். தன்னுடைய பத்தாவது பிறந்தநாளுக்கு அவள் கேட்ட பரிசு எங்களுக்குத் திகைப்பைத் தந்தது.
சாலினியின் பத்தாவது பிறந்தநாளுக்கு பத்து நாட்கள் இருக்கும்போது அவளுடன் படிக்கும் ஆருதியின் பிறந்தநாள் அழைப்பு வர சாலினியோடு நாங்களும் போயிருந்தோம். கேக் வெட்டிக் கொண்டாடியபின் பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து போட்டி வைத்து விளையாடிக் கொண்டிருக்க அம்மாக்கள் ஒன்றாகயிருந்து கதைத்துக் கொண்டு இருந்தோம். சிறிது நேரத்தில் சாலினி அருகில் வந்தாள். கையில் ஒரு போன் இருந்தது.
“அம்மா இதைப் பாருங்கோ ஆருதியின்ர பிறந்தநாளுக்கு ஊருக்கு காசு அனுப்பி கஷ்டப்படுகிற பிள்ளையளுக்கு சாப்பாடு குடுத்ததாம் நிறைய பிள்ளையள் அம்மா. எல்லாரும் ஆருதிக்கு நன்றி சொல்லி எழுதிய கடிதம் மெயிலில் வந்திருக்கு. நீங்களும் அவையளுக்கு காசு அனுப்புங்கோ எனக்கும் இதேமாதிரி படங்களும் கடிதமும் வேணுமம்மா” சிணுங்கினாள். வாங்கிப் பார்த்தேன். பெரிய ஹோலில் நாலு வரிசையில் பந்திப்பாய் விரித்து நிறைய குழந்தைகள் இருந்து சாப்பிடும் படங்கள், பிறந்தநாளுக்கு வாழ்த்தியும் உணவுக்காக நன்றி சொல்லியும் எழுதிய கடிதங்கள் இருந்தன.
நிமிர்ந்து ஆருதியின் அம்மாவைப் பார்த்தேன்.
“ஆருதியின் பிறந்தநாளுக்கு ஊருக்கு ஏதாவது செய்ய வேணும் எண்டு நினைச்சுக் கொண்டிருந்தனான். சுகந்தியக்கா நிறைய உதவிகள் செய்யிறவா. அவாவிட்ட கேட்க கிளிநொச்சியில இருக்கிற ஆதரவற்ற சிறுவர் காப்பகம் பற்றிச் சொன்னா. தாய் தகப்பனில்லாத பிள்ளைகள் நிறைய இருக்கினம். பிறந்தநாள், கலியாணநாள், நினைவு நாளுக்கு அவர்களுக்கு காசு அனுப்பினால் அந்தநாளில அங்குள்ள பிள்ளையளுக்குச் சாப்பாடு குடுப்பினம். இந்தப் புண்ணியமெல்லாம் எங்கட குழந்தைகளுக்குத்தானே” என்றாள்.
“இங்க லண்டனில கொண்டாட்டங்களை வைச்சு எவ்வளவு காசைச் செலவழிக்கிறம். அதில ஒரு பகுதியை கஷ்டப்பட்டவையளுக்கும் அனுப்பலாம்தானே. புருஷன் இல்லாமல் இரண்டு பிள்ளைகளோட கஷ்டப்படுற லட்சுமிக்கு தொழில் செய்ய நானும் காசு அனுப்பினனான். கடை போட்டு நல்லமாதிரி நடத்துறாள். கேட்க சந்தோஷமாயிருக்கு” என்றாள் இன்னொரு அம்மா.
“நானும் மூண்டு பிள்ளைகளோட இருக்கிற தாய்க்கு ஒரு தையல் மிஷின் வாங்கிக் குடுத்தனான். அதில தைச்சுத்தான் சீவியம் போகுதாம். நன்றி சொல்லி எழுதுற கடிதங்களைப் பாக்கும்போது மனசில ஒரு திருப்தியும் சந்தோஷமும் வருகுது ”
அங்குள்ளவர்கள் மாறி மாறி சுகந்தியக்கா மூலம் தாங்கள் செய்து கொண்டிருக்கும் உதவிகளைச் சொல்லும் போது எனக்கு கவலையாகயிருந்தது. சுகந்தியக்காவின் அறிமுகம் இருந்தும் உதவி செய்யவேணும் என்ற விருப்பம் இருந்தும் ரமணனின் சம்மதமின்றி என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
என் கையிலிருந்த போனை வாங்கிக் கொண்டு சாலினி அப்பாவிடம் போனாள். அவரிடம் கொடுத்து ரமணனோடு கதைப்பதும் அதைக் கேட்டு அவர் ஆருதியின் அப்பாவோடு கதைப்பதும் தெரிந்தது சிறிது தூரத்தில் இருந்ததால் அவர்கள் கதைப்பது எங்களுக்குக் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் சிரித்தபடி தலையாட்டியதும் சாலினி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தபடி ஆருதியுடன் போவதும் தெரிந்தது.
திரும்பி காரில் வரும்போதும் சாலினி அதே சிந்தனையில் இருந்தாள்.
“அப்பா என்ர பேர்த்டேக்கு இன்னும் பத்து நாள்தானே இருக்கு. அதுக்கிடையில காசு அனுப்பி படங்கள் வந்திடுமா. வாற எல்லாருக்கும் படங்கள் காட்டவேணுமப்பா”
“உன்ர பேர்த்டே அண்டைக்குத்தானே சாப்பாடு குடுக்க வேணும். படங்கள் உடன வந்திடும். நீ எல்லாருக்கும் காட்டலாமடா” என்றார்.
“காசு எவ்வளவு அனுப்ப வேணும்” நான் கேட்டேன்.
“நாலைஞ்சு கறி, வடை பாயாசத்தோட குடுக்கிறது எண்டால் நாற்பதாயிரம் வேணுமாம். சேகரோட கதைச்சு விபரமெல்லாம் எடுத்திட்டன். நாளைக்கு காப்பகத்தோட கதைச்சு காசை அனுப்பிவிடுவம்” என்றார்.
நானும் ஒரு குடும்பத்துக்கு தொழில் செய்ய பண உதவி செய்யவேண்டும். அதற்கு ரமணனோடு கதைத்து அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. லீவு நாள் என்பதால் ரமணனும் வீட்டிலிருந்தார். காலையிலேயே சிறுவர் காப்பகத்தோடு கதைத்து பணத்தையும் அனுப்பிவிட்டார். சாலினியுடன் இருந்து விளையாடிக் கொண்டிருந்தபோது என் மனதிலுள்ளதைச் சொன்னேன்.
“சாலினி ஆசைப்பட்டுக் கேக்கிறாளே எண்டு இதைச் செய்தன். ஆசிரமத்துக்கு ஒரு நாள் காசு அனுப்பினதோட விஷயம் முடிஞ்சுது. இது போதும். ஒரு குடும்பத்தைப் பொறுப்பெடுத்துப் பாக்கிறது ஈஸி எண்டு
நினைச்சியா. காசைக் கண்டவுடன உழைக்காமல் சும்மாயிருந்து செலவழிக்குங்கள். ஒரு தொழில் தொடங்கிறதுக்கு முதல் ஒரு லட்சம் எண்டாலும் அனுப்பவேணும். பிறகு வருமானம் வரும்வரைக்கும் செலவுகளுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கவேணும். இது சரிவராது வேண்டாம் விடு. திரும்பவும் வந்து கேட்காத” கோபத்தில் கத்தினார்.

“அங்க துணையில்லாமல் சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் கஷ்டப் படுகிற சனங்களின்ர கதையளைக் கேட்க கவலையாயிருக்கு. இங்கயிருந்து எத்தனையோ பேர் உதவி செய்யினம் எங்களாலும் ஒரு குடும்பத்துக்கு உதவி செய்யலாம்…” இழுத்தேன்.
“நாங்களும் இங்க கஷ்டப்பட்டுத்தான் உழைக்கிறம். பாவம் எண்டு அவையளுக்கு உதவி செய்தால் உழையாமல் பொய் சொல்லி எங்களையும் ஏமாத்துங்கள். உதவி செய்து ஏமாந்த ஆக்களையும் எனக்குத் தெரியும். வேண்டாம் எண்டால் விடன்” எழுந்து போய்விட்டார்.
சாலினியின் பிறந்தநாளன்று வந்த படங்களை வந்திருந்தவர்கள் எல்லோருக்கும் காட்டி சந்தோஷப்பட்டாள். அடங்கியிருந்த என் விருப்பம் மீண்டும் எட்டிப் பார்க்க திரும்பவும் கேட்டேன். மறுத்துவிட்டார்.
“சரி குடும்பத்தைப் பார்க்கவேண்டாம். படிக்க ஆர்வமிருந்தும் வசதியில்லாமல் இருக்கிற ஒருபிள்ளைக்கு எண்டாலும் படிக்கிறதுக்கு உதவி செய்யலாம்தானே” நானும் விடவில்லை.
“அப்பா, அங்க படிக்க காசில்லாமல் நிறையபேர் இருக்கினமாம். என்னைப்போல அவையளும் படிக்க வேணும்தானே. உங்களிட்ட நிறைய காசு இருக்கு அனுப்புங்கோ. பாவமப்பா அவையள்” பெரிய மனுஷி மாதிரி சாலினி சொல்லவும் அவளுக்கு மறுத்துபேச முடியாமல்
தயங்கினார்.
“படிக்கிறவன் கெட்டிக்காரனாய் இருந்தாலும் அவனை படிக்கவைக்க பெற்றோருக்கும் ஆர்வமிருக்க வேணும். நல்லா விசாரிச்சுத்தான் எடுக்கவேணும்” என்றார்.
கேட்டதும் சந்தோஷமாயிருந்தது.
“சுகந்தியக்காவின்ர தங்கச்சி சுதா ஊரில இருக்கிறா. அவாதான் கஷ்டப்பட்ட குடும்பங்களின்ர விபரங்களை எடுத்து சுகந்தியக்காவுக்கு அனுப்புறவா. நான் கேக்கிறன்”
“சரி. ஒரு பிள்ளையை எடுத்து படிப்பிப்பம். முதல் குடும்ப விபரங்களை எடு. நானும் பாக்கவேணும்” விருப்பமில்லாவிட்டாலும் சாலினிக்காகச் சம்மதித்தார்.
கலைச்செல்வியின் கஷ்டங்களைச் சொல்லி குடும்ப விபரம் தந்தபோது கட்டாயம் உதவி செய்யவேண்டும் என்று முடிவு செய்தேன். கணவனில்லாமல் மூன்று பிள்ளைகளோடு தையல் வேலை செய்து குடும்பத்தைப் பார்ப்பதால் பிள்ளைகளின் படிப்புக்கு உதவி கேட்டதாகச் சொன்னா. தையல் மெஷினும் சுகந்தியக்கா மூலம்தான் கிடைத்தது. கலைச்செல்வியின் போன் நம்பர் தந்து அவளுடன் கதைத்தேன்.
“மூண்டு பிள்ளைகளக்கா. பொம்பிளைப்பிள்ளைகள் இரண்டும் அஞ்சாவது படிக்கிறாளவை, மூத்தவன் மதன் பத்தாவது படிக்கிறான். இனியாவது ரியூசனுக்கு விடச்சொல்லிக் கேக்கிறான். அவனின்ர படிப்புக்கு உதவி செய்யுங்கோ. கெட்டிக்காரன். ரியூசனுக்குப் போனால் இன்னும் படிப்பான். அவனை நம்பித்தான் நாங்கள் இருக்கிறம்”
கேட்டவிதம் மனதை பிசைந்தது. எங்களால் ஒரு குடும்பத்தின் கஷ்டம் தீரும் என்றால் சந்தோஷம்தானே.
“உதவி செய்யிறதால படிப்பு விஷயத்தில் கண்டிப்பாய் இருப்பன். மதன் படிக்கிறதை நீங்களும் கவனமாய் பாக்கவேணும். எப்பிடிப் படிக்கிறான் என்ன மாக்ஸ் வாங்கிறான் எண்டு எனக்கும் சொல்லவேணும்”
“சரியக்கா. அவனைப் படிப்பிச்சால் போதும். மற்ற செலவுகளை நான் சமாளிப்பன். இந்த உதவியை மறக்கமாட்டனக்கா”
மனம் இளக படிப்புக்கு எவ்வளவு முடியும் என்ற விபரங்களைக் கேட்டு மாதம் ஐயாயிரம் ரூபா அனுப்புவதாகச் சொன்னேன்.
வகுப்புகள் ஒழுங்கு செய்து படிக்கத்தொடங்கியதும் மூன்று மாதத்துக்கொரு முறை பதினைந்தாயிரம் அனுப்புவதற்கு ஒழுங்கு செய்தேன். பணம் அனுப்பும்போது ரமணனின் முணுமுணுப்பையும் சமாளிக்க வேண்டியிருந்தது.
“கெட்டிக்காரன் படிப்பான் எண்டு காசு அனுப்புறாய். நல்ல றிசல்ட் எடுக்கவேணும் இல்லையெண்டால் காசு அனுப்ப விடமாட்டன்”
“நீங்கள் சந்தோஷப்படுறமாதிரி அவன் படிப்பான். நானும் அடிக்கடி எடுத்துக் கதைச்சு அவனைப் படிக்க வைப்பன்” நம்பிக்கையுடன் சொன்னேன்.
கலைச்செல்வி மகனின் படிப்புகள் பற்றி ஆர்வமாய் கதைக்கும்போது அந்த நம்பிக்கை மேலும் வளர்ந்தது.
நாலுமாதங்களுக்குப் பின் ஒருநாள்
“தினமும் பஸ்ஸில போய் வர செலவாய் இருக்குதக்கா. ஒரு சைக்கிள் இருந்தால் ரியூசனுக்குப் போய்வர வசதியாய் இருக்கும். வாங்கித் தாறீங்களாக்கா”
தயங்கியபடி கலைச்செல்வி கேட்டதும் என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால் ரமணன் என்னசொல்லுவாரோ என்று தயக்கமாக இருந்தது. ரமணனிடம் கேட்டபோது கோபத்தில் குதித்தார்.
“இப்பிடி நடக்கும் எண்டு எனக்குத் தெரியும். இரவு பகல் கஷ்டப்பட்டு உழைக்கிறன். அந்த கஷ்டம் பற்றி அவையளுக்கு என்ன தெரியும். வெளி நாட்டில சும்மாயிருக்க காசு வருகுது எண்ட நினைப்பு. நீ உழைச்சு அனுப்பு என்னைக் கேக்காத”
“படிப்பிக்கத் தொடங்கினால் அவனுக்குத் தேவையானதைப் பார்த்து செய்யத்தானே வேணும். என்ன கேட்டாலும் கத்தினால் என்ன செய்யிறது”
“இப்ப போக வர கஷ்டம் சைக்கிள் வேணும் எண்டு கேக்கினம் பிறகு போன் வேணும், படிக்கிறதுக்கு கொம்பியூட்டர் வேணும் எண்டு கேட்பினம். வர வர செலவுகள் கூடிக்கொண்டுபோகும். இதுக்கும் சேர்த்து நான்தான் உழைக்கவேணும்”
“வாங்கிறதுக்கு வசதியில்லை எண்டுதானே கேட்டது. படிக்கிறனுக்குத்தானே வாங்கிக் குடுப்பம்”
ஒருவாறு சம்மதிக்க வைத்து சைக்கிள் விலையை விசாரித்தபோது திகைத்துவிட்டோம். விலைவாசி உயர்வில் சைக்கிள் விலையும் நாலு மடங்கு உயர்ந்துவிட்டது. ஓ.எல் படிக்கத் தொடங்கியதும் போன் தேவையும் வந்தது.
ஒருநாள் கலைச்செல்வியோடு மதனின் படிப்பையும் நடந்த பரீட்சையில் எடுத்த மாக்ஸ் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்தேன். எல்லாப் பாடங்களிலும் நல்ல மாக்ஸ் எடுத்திருந்ததைக் கேட்டபோது சந்தோஷமாகயிருந்தது. அவனைப் பாராட்டி உற்சாகப் படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் அவனிடம் போனைக் கொடுக்கச் சொன்னேன்.
“அவன் வீட்டில இல்லையக்கா. ஒவ்வொரு நாளும் இரவு அவனோட படிக்கிற கோபி வீட்டுக்குப் படிக்கப் போயிடுவான். திரும்பி வர பதினொரு மணியாகும்” என்றாள்.
“ஏன் வீட்டிலயிருந்து படிக்கலாம்தானே. நீ பக்கத்திலயிருந்து படிக்கிறானோ இல்லையோ எண்டு பாக்கவேணும். பெடியளோட சேர்ந்து படிக்கிறானோ விளையாடுறானோ ஆருக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் ஏன் விடுறாய்” எனக்கு கோபம் வந்தது.
“ஒன்லைன் கிளாஸ் நடக்குது. அந்தப் பாடங்களின்ர ஹோம்வேக் செய்து அனுப்ப வேணும். அவனிட்ட போன் இல்லையக்கா. அதுதான் ஒவ்வொரு நாளும் இரவு அங்கபோய் கோபி செய்து முடிய இவன் செய்து அனுப்புவான். போன் இல்லாமல் கஷ்டப்படுறான். நான் என்ன செய்யிறது” கேட்டதும் சங்கடமாய் இருந்தது. ரமணனிடம் கேட்காமல் என்னிடமிருந்த இன்னொரு போனை மதனுக்கு அனுப்பி வைத்தேன்.
க.பொ சாதாரண பரீட்சைக்கு இன்னும் நான்கு மாதங்கள்தான் இருந்தது. கவனமாகப் படித்து நல்ல றிசல்ட் எடுக்க வேண்டுமே. அடிக்கடி எடுத்து கலைச்செல்வியுடன் மதனின் படிப்பு பற்றிக் கதைத்தேன். அவனை நல்ல நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பரபரப்பு.
இரண்டாம் தவணை பரீட்சையும் முடிந்து விட்டது. இதில் வரும் மாக்ஸை வைத்து ஓ.எல் றிசல்டை ஊகிக்கலாம். கலைச்செல்வியிடமிருந்து போனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். வரவில்லை. பொறுமை இழந்து நானே எடுத்தேன்.
“நல்ல மாக்ஸ் அக்கா. எல்லாம் எண்பதுக்கு மேல எடுத்திருக்கிறான்” என்றாள்.
“உன்னைவிட எனக்குத்தான் டென்ஷனாயிருக்கு. உடன எடுத்துச் சொல்லியிருக்கலாமே” சந்தோஷத்தில் செல்லமாய் கோபித்துக் கொண்டேன். ரமணனிடமும் சொல்லிச் சந்தோஷப்பட்டேன்.
“இனி மதனோடயும் எடுத்து எப்பிடி படிப்பு போகுது எண்டு கதை. நாங்களும் கதைச்சால் இன்னும் சந்தோஷமாய்ப் படிப்பான்” என்றார்.
உடனே அவனுக்கு எடுத்தேன். என் போனை அவன் எதிர்பார்க்கவில்லை எடுத்தவனிடம்
“நீ எடுத்த மாக்ஸை நினைக்க சந்தோஷமாயிருக்கு. மூண்டு மாதம்தானே இருக்கு கவனமாய்ப் படியப்பு. அம்மா சந்தோஷப்படுறமாதிரி நல்ல றிசல்ட் எடுக்கவேணும்” என்றேன்.
பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ரமணன் போனை வாங்கினார்.
“சயன்ஸ்.. மற்ஸ்.. எது உனக்கு படிக்கக்கூடியதாய் இருக்கோ அதில கூடிய கவனம் எடுத்துப்படி. ஏ. எல்லுக்கு அந்த பாடத்தை எடுத்துப் படிக்கலாம். இரண்டுக்கும் எவ்வளவு மாக்ஸ் எடுத்தனி” என்று கேட்டார். அவன் என்ன சொன்னான் என்று கேட்கவில்லை. சிறிது தூரம் சென்று கதைத்து விட்டு வந்து போனைத் தந்தார். முகம் மாறியிருந்தது.
“கேட்டதுக்கு ஒழுங்காய் பதில் சொல்லுறானில்லை. எனக்கு ஏதோ சந்தேகமாய் இருக்கு. பொய் சொல்லுற மாதிரி தோணுது. வடிவாய் விசாரி” என்றார். மனம் பக்கென்று வியர்த்தது.
என்னால் நம்ப முடியவில்லை. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் என்னிடம் பொய் சொல்லுவாளா… அவள் சொன்னதை நம்பித்தானே ரமணனோடு சண்டைபோட்டு பணம் அனுப்பினேன். மதனுக்குத் திரும்பவும் போன் எடுத்தேன் எடுக்கவில்லை. கலைச்செல்விக்கு எடுத்தேன்.
“மதன் இருக்கிறானா அவனோட கதைக்கவேணும் போனைக் குடு” கடுமையான குரலில் சொன்னேன். கலைச்செல்வியின் அழும்குரல் கேட்டது.
“அக்கா என்னை மன்னிச்சிடுங்கோ நல்லாய் படிச்சுக் கொண்டு வந்தவன் இந்தமுறை விட்டிட்டானக்கா. எல்லாம் ஐம்பதுக்கு குறைய. எப்பிடி உங்களுக்கு சொல்லுறதை எண்டு பொய் சொல்லிட்டன்”
“என்னை ஏமாத்துறதாய் நினைச்சு அவன்ர எதிர்காலத்தை பாழாக்குறியே. அவனைக் கண்டிக்காமல் அவனையும் பொய் சொல்லப் பழக்கிறாய். அவன் நல்லாய் வரவேணும் எண்டு பிள்ளையாய் நினைச்சுத்தான் படிப்பிக்கிறன்.ஒவ்வொரு முறையும் காசு அனுப்ப எவ்வளவு கஷ்டப்படுறன் எண்டு உனக்குத் தெரியாது. இனி அனுப்பி என்ன பிரயோசனம். எல்லாத்தையும் நிப்பாட்டுறன்” பட்டென்று போனை வைத்து விட்டேன்.
ரமணன் சொன்னபடி நடந்துவிட்டதே அவருக்கு என்ன பதில் சொல்லுவேன். நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை.
கலைச்செல்வியிடம் இருந்து போன் வந்து கொண்டேயிருந்தது. நான் எடுக்கவில்லை. ஒரு கிழமைக்குப் பின் மதன் எடுத்தான். நாலு தடவைக்கு மேல் அடித்தபோது மனம் கேளாமல் எடுத்தேன்.
“அன்ரி, அம்மா என்னோட கதைக்கிறேல. உன்னாலதான் எல்லாம் கெட்டது. இனி என்ன செய்யப்போறாய் வந்த அதிஷ்டத்தை கெடுத்திட்டியே எண்டு திட்டினா. உணர்ந்திட்டன் நான் படிக்கவேணும் அன்ரி. இனி பொய் சொல்லவே மாட்டன். எக்ஸாம் எடுக்கிற வரைக்கும் உங்கட உதவி எனக்கு வேணும். பிளீஸ் அன்ரி” அழுகுரலில் கேட்டதும் கோபம் குறைந்தது. ஆனால் ரமணன் சம்மதிக்கவில்லை.
“ஏமாத்தினாலும் உனக்கு புத்தி வராதா… திரும்பவும் காசு அனுப்ப கேக்கிறாய். இந்த மூண்டு மாதத்தில எப்பிடிப் படிப்பான் விடு ஒண்டும் அனுப்ப வேண்டாம்”
“குறையில விட்டால் அவன்ர படிப்பு குழம்பிடும். இனி கவனமாய் படிப்பன் எண்டு கெஞ்சுறான். பாதியில கைவிட்ட பாவம் எங்களுக்கு வேண்டாம். எக்ஸாம் எடுக்கும் வரைக்கும் அனுப்புவம். பிறகு ஒண்டும் அனுப்ப வேண்டாம்”
மதனையும் ரமணனோடு கதைக்க வைத்தேன். மனமின்றி சம்மதித்தார். அதன் பிறகு அடிக்கடி மதனோடு எடுத்து கதைத்துக் கொண்டேன்.
“இனி உன்னோடயே கதைக்கிறன். உன்ர படிப்பைப்பற்றி நீதான் சொல்லவேணும். படிப்பைத் தவிர வேற சிந்தனை இருக்கக் கூடாது. முதல்தரமே நல்ல றிசல்ட் எடுத்து காட்டவேணும்”
கலைச்செல்வியோடு பிறகு கதைத்தாலும் படிப்பு பற்றி மதனோடுதான் கதைத்தேன். அவனிலும் மாற்றம் தெரிந்தது. எடுக்கும் நேரமெல்லாம் படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். நாள் நெருங்க நெருங்கப் பதட்டம் தெரிந்தது. வீணாக்கிய காலங்களை நினைத்துக் கவலைப்பட்டான்.
ஒரு வழியாக எக்ஸாம் முடிந்தது. நன்றாக செய்திருப்பதாகச் சொன்னாலும் எதிர்பார்த்திருந்த றிசல்ட் வருமா…
அதற்கு மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டுமே.
திடுமென நினைவு வர திடுக்குற்று எழுந்தேன். இந்தக் கிழமை றிசல்ட் வரும் என்று மதன் சொன்னானே… நேரம் பார்க்காமல் கலைச்செல்வி போன் எடுத்ததற்கு இதுதான் காரணமோ..
அதற்குமேல் படுக்கமுடியவில்லை. விடிந்து வெளிச்சம் வரத் தொடங்கியிருந்தது. எழுந்து வெளியே வந்தேன். ரமணனும் எழுந்துவிட்டார்.
“றிசல்ட் வந்திருக்கும் அதுதான் கலைச்செல்வி சாமத்தில எடுத்தாளோ அவளுக்கு எடுக்கிறன்” சொல்லியபடி போனை எடுக்க மதனிடமிருந்து போன் வந்தது.
“அன்ரி றிசல்ட் வந்திட்டுது. நீங்கள் சொன்னபடி நல்ல றிசல்ட் எடுத்திட்டன். எட்டு ஏயும் இரண்டு பியும் வந்திருக்கு. ஸ்கூலில நான்தான் பெஸ்ட். இதுக்குக் காரணம் நீங்களும் அங்கிளும்தான் அன்ரி. தங்யூ வெரிமச். இந்த உதவியை மறக்கவே மாட்டன் அன்ரி.
திகைத்துப் போய் அசையாதிருந்தேன். சந்தோஷத்தில் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. ரமணன் போனை வாங்கினார்.
“சாதிச்சிட்டாயடா. நான் எதிர்பார்க்கவேயில்லை. சந்தோஷமாயிருக்கு. நீ கவலையே படாத. இனி ஏ.எல் படிக்கவைக்கிறது என்ர பொறுப்பு. நல்லாய் படி. நல்ல எதிர்காலம் உனக்கு இருக்குடா” ரமணன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோனேன். அதிலிருந்து மீண்டு அவருடன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள எனக்கு சில நிமிடங்கள் பிடித்தன.
சாலினி ஓடி வந்து அப்பாவைக் கட்டிக் கொண்டாள்.
நிறைவு
விமல் பரம்
The post எதிர்கால கனவுகள் | சிறுகதை | விமல் பரம் appeared first on Vanakkam London.