காரைக்கால்: “நாடாளுமன்றத்துக்குள் பாஜக எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது தவறானது. அப்படிப்பட்ட போக்கை கடைபிடிக்கக் கூடாது ” என்று முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி கூறியுள்ளார்.
காரைக்கால் மாவட்ட நீதி மன்றத்தில், வழக்கு ஒன்றில் வழக்கறிஞராக ஆஜராகி வாதிடுவதற்காக இன்று (டிச.20) நீதிமன்றத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அம்பேத்கரின் பணிகளை இந்த உலகம் அங்கீகரித்திருக்கிறது, நிச்சயமாக அதில் மாற்றுக்கருத்து இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கரை உயர்த்திப் பேசியுள்ளார் என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சி ஏன் அம்பேத்கரை உயர்ந்த இடத்தில் வைக்கவில்லை?, ஏன் உரிய மரியாதையை தரவில்லை? என்ற கேள்வியைத்தான் அமைச்சர் அமித் ஷாவும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் எழுப்பியிருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடா தனது ட்விட்டர் பதிவில் அம்பேத்கர் பற்றி குறைத்து மதிப்பிடும் வகையில் சொல்லியுள்ளார். இதுகுறித்துதான் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை திரித்துப் பேசி காங்கிரஸ் கட்சி உண்மையை மறைக்கிறது. தமிழகத்தில் அம்பேத்கர் பிரச்சினையை மையமாக வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அரசியல் நாடகமாடுகின்றன.தவெக தலைவர் விஜய், அமித் ஷாவின் கருத்தையும், சாம் பிட்ரோடா பதிவையும் முழுமையாக பார்த்துவிட்டு தன் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். முழுமையாக தெரிந்து கொண்டு பேசுவதுதான் அவருக்கும் நல்லது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாட்டு மக்களின் நலன் கருதி வரக்கூடிய ஒன்று. இந்த மசோதா உறுதியாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் வெற்றி பெறும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. இதில் எதிர்க்கட்சிகள் தோல்வியடையப் போகின்றன. அந்த தோல்வியை மறைப்பதற்காகத்தான் இந்த அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பிக்கள் நடத்திய போராட்ட வீடியோ பதிவுகளை பார்க்கும்போது, அமளிக்கு நடுவில் பாஜக எம்.பிக்கள் தாக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அப்படி நடந்திருக்குமேயானால் அது வருத்தத்துக்குரியது.
நாடாளுமன்றத்துக்குள் பாஜக எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது தவறானது. அப்படிப்பட்ட போக்கை கடைபிடிக்கக் கூடாது. ஆளுங்கட்சியில் இருப்பதாலேயே அடிவாங்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. இத்தகைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும், மனம் திருந்த வேண்டும். பாஜகவில் விரைவில் எனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கட்சி மேலிடம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உள்கட்சி தேர்தல் நடைமுறைகளுக்குப் பின்னர் கட்சியில் அதிகாரத்துக்குரிய ஒரு பொறுப்பு வழங்கப்பட்டு, என்னுடைய பணிகள் இன்னும் செம்மைப்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன்.” என்று அவர் தெரிவித்தார்.