• Fri. Nov 21st, 2025

24×7 Live News

Apdin News

எத்தனை ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் மனதில் மாற்றம் வராது | வி.மணிவண்ணன்

Byadmin

Nov 21, 2025


எத்தனை நூற்றாண்டுகள் , எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பௌத்த, சிங்கள சித்தாந்தங்களை மனோபாவங்களை இந்த மண்ணில் இருந்து அகற்றமுடியாது என்பதனையே திருகோணமலை சம்பவம் எடுத்து காட்டியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் அடாத்தாக புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தமிழ் மக்கள் கூட்டணி தமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளதாக கருத்து தெரிவிக்கும் போதே மணிவண்ணன் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலையில், பௌத்த பிக்குகளின் அடாவடித்தனம் மூலம் புத்த சிலையை நிறுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

உண்மையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட இடம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் எந்தவித அனுமதியும் இன்றி புத்தர் சிலையை நிறுவியுள்ளனர் இது கண்டிக்கப்பட வேண்டும்.

எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் பௌத்த சிங்கள சித்தாந்தங்கள் அவர்களின் மனோபாவங்கள் இந்த மண்ணில் இருந்து அகற்ற முடியாது என்பதையே  இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது.

தமிழ் மக்கள் அடர்த்தியாக வாழ கூடிய திருகோணமலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக புத்த சிலை வைத்தமை தமிழ் மக்கள் மீதான பௌத்த சிங்கள பேரினவாத அடக்குமுறையாகவும்  தமிழ் மக்களின் பண்பாடு மீதான திணிப்பாகவுமே இதனை பார்க்கிறோம்.

இந்த அரசாங்கம் முதல் நாள் புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றி இருந்தனர். மறுநாள் எதிர்கட்சிக்கு பயந்து பௌத்த சிந்தனை கொண்டவர்களாக அகற்றிய புத்தர் சிலையை மீண்டும் நிறுவியுள்ளனர் இதனை தமிழ் மக்கள் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.

இது தமிழ் மக்கள் மீதான இனவழிப்பின் தொடர்ச்சி, தமிழர்களின் பண்பாட்டு சிதைப்பு, இதனை நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும்

ஆட்சியாளர்கள் பௌத்த சிங்கள பேரினவாத மனோநிலையில் இருந்து எப்பவும் மாற மாட்டார்கள்.  எத்தனை ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் மனதில் மாற்றம் வராது.

எனவே சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவை  உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் தமிழர்கள் சுய அதிகாரமிக்க தன்னாட்சி மிக்க பெரு பிரதேசமாக மாற்றஅரசியல் அமைப்பு பொறிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

The post எத்தனை ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் மனதில் மாற்றம் வராது | வி.மணிவண்ணன் appeared first on Vanakkam London.

By admin