பட மூலாதாரம், Getty Images
எத்தியோப்பியாவில் ஹைலி குப்பி எரிமலை வெடித்ததன் காரணமாக, வானத்தில் பல கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் மேகங்கள் காணப்படுகின்றன.
இதன் தாக்கம் இந்தியா வரை உணரப்படுகிறது. இந்தச் சாம்பல் மேகங்கள் செங்கடலைக் கடந்து மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா நோக்கி நகர்ந்து வருகின்றன.
இந்த மேகங்கள் மிக அதிக உயரத்தில் இருப்பதால், தரையில் அதன் தாக்கம் அதிகமாக இருக்காது. ஆனால், இந்த உயரத்தில்தான் பெரும்பாலான பயணிகள் விமானங்கள் பறக்கின்றன.
“எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட உயரம் கடல் மட்டத்தில் இருந்து 8.5 கி.மீ (5.2 மைல்) முதல் 15 கி.மீ வரை மேலே உள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹாபாத்ரா, பிபிசியிடம் கூறினார்.
“இது செயற்கைக்கோள் செயல்பாடுகள் மற்றும் விமான இயக்கங்களை தற்காலிகமாகப் பாதிக்கலாம். ஆனால், வானிலை நிலைமைகள், காற்றின் தரம் அல்லது பருவமழையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. எரிமலை சாம்பல் திங்கள்கிழமை இரவு வட இந்தியாவை அடைந்தது, இப்போது அது சீனா நோக்கி நகர்வதாகத் தெரிகிறது” என்று மொஹாபாத்ரா கூறினார்.
இதன் காரணமாக, இந்தியாவில் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் தாமதமாக இயங்குகின்றன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்களின் பாதையும் மாற்றப்பட்டுள்ளது.
நாட்டின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து “விலகிச் செல்வதற்கு” தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு விமான நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தச் சாம்பல் ஏன் இவ்வளவு ஆபத்தானது? இது விமானத்தின் இயந்திரத்தை செயலிழக்கச் செய்ய முடியுமா? இதைக் கையாள என்ன செய்ய முடியும்?

டிஜிசிஏ என்ன கூறியது?
ஏர் இந்தியா நிறுவனம் 11 விமானங்களை ரத்து செய்துள்ளது. அதே நேரம், இண்டிகோ, ஆகாசா மற்றும் கேஎல்எம் விமானங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமையைக் கருத்தில் கொண்டு விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
சாம்பல் மேகங்கள் காணப்பட்டால் உடனடியாக ஒழுங்குமுறை அமைப்பிற்குத் தெரிவிக்க வேண்டும் என்று விமானிகளுக்கு அறிவுறுத்தும்படி விமான நிறுவனங்களை டிஜிசிஏ கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இயந்திரத்தின் செயல்திறன் மற்றும் விமானத்தின் கேபினில் ஏதேனும் வாசனை அல்லது சாம்பல் காணப்பட்டால் அதையும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் இயக்கப்படும் விமானங்களைக் கண்காணிக்க வேண்டும் என்றும், “நிலைமை மோசமடைந்தால், பாதிக்கப்பட்ட விமான நிலையங்களுக்குச் செல்ல இயக்கப்படும் விமானங்களை நிறுத்தலாம் அல்லது தாமதப்படுத்தலாம்” என்றும் டிஜிசிஏ கூறியுள்ளது.

இன்ஜின் செயலிழக்கும் அபாயம்
எரிமலை சாம்பல் மேகங்கள் விமானங்களுக்கு மிகவும் ஆபத்தானவை, ஏனெனில் அவை அவற்றின் இயந்திரங்களைச் சேதப்படுத்தலாம்.
எரிமலை வெடிக்கும்போது, மிகவும் நுட்பமான சாம்பல் மற்றும் துகள்கள் வானத்தில் பரவுகின்றன. இந்தத் துகள்கள் சிலிகேட் எனப்படும் மிகவும் கடினமான பொருளால் ஆனவை.
இவை ஜெட் விமானத்தின் இன்ஜினுக்குள் செல்லும்போது, உள்ளே இருக்கும் அதிக வெப்பநிலையால் உருகிவிடும். ஆனால், அவை இன்ஜினின் குளிர்ச்சியான பகுதிகளை அடைந்தவுடன், மீண்டும் உறைந்து கண்ணாடி போன்ற அடுக்கை உருவாக்குகின்றன.
இந்தக் கண்ணாடி போன்ற அடுக்கு காற்றின் ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் இன்ஜின் ஸ்தம்பிக்கலாம் அல்லது முற்றிலுமாகச் செயலிழக்கலாம்.
இருப்பினும், இன்ஜின் அணைக்கப்பட்டால், அது விரைவாகக் குளிர்ச்சியடையும். குளிர்ச்சியடைந்தவுடன் உருகிய சாம்பல் உடைந்து விலகிச் சென்று, இன்ஜினை மீண்டும் இயக்க வாய்ப்புள்ளது.
ஆனால், இந்தச் சூழ்நிலை விமானம் புறப்படும் அல்லது தரையிறங்கும் நேரத்தில் ஏற்பட்டால், இன்ஜினை மீண்டும் இயக்க நேரம் கிடைக்காது மற்றும் விபத்துக்கான வாய்ப்பு மிக அதிகமாகிறது.
பட மூலாதாரம், Getty Images
சென்சார்கள் பழுதாகும் அபாயம்
எரிமலையில் இருந்து வரும் சாம்பல் விமானத்தின் இன்ஜினை மட்டுமல்ல, விமானத்தின் வெளிப்புற மேற்பரப்புகள் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளையும் சேதப்படுத்தக்கூடும்.
சாம்பலின் கடினமான மற்றும் கூர்மையான துகள்கள் விமானத்தின் ஜன்னல்கள் மற்றும் வெளிப்புற மேற்பரப்புகளுடன் மோதுவதால், அவை மெதுவாக தேயத் தொடங்குகின்றன.
இந்தத் தேய்மானம் உடனடியாக ஒரு பெரிய ஆபத்தாக மாறாவிட்டாலும், இது விமானத்திற்குச் சேதத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் பழுது பார்ப்பதும் அவசியமாகிறது.
இது விமானத்தின் சென்சார்களையும் பழுதடையச் செய்யலாம். இதனால் வேகத்தை அளவிடும் சென்சார்கள் தவறான அளவீடுகளை வழங்கலாம், மேலும் வழிசெலுத்தலில் சிக்கல் ஏற்படலாம்.
சாம்பல் துகள்கள் உப்புத்தாள் போல முன்பக்க கண்ணாடியைத் தேய்ப்பதால், விமானி பார்க்கும் திறனை அது குறைக்கிறது.
இது தவிர, கேபினுக்குள் காற்றின் தரமும் இதனால் பாதிக்கப்படலாம். சாம்பலின் மிக நுண்ணிய துகள்கள் சில நேரங்களில் காற்றோட்ட அமைப்பில் நுழைவதால், பயணிகள் மற்றும் குழுவினருக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
விமானிகள் என்ன செய்ய முடியும்?
அதிக உயரத்தில், சாதாரண மேகங்கள் தெரிவதைப் போல சாம்பல் மேகங்கள் தெரியாததால் அவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம்.
இதைக் கண்டறிய மிகவும் நம்பகமான அறிகுறி செயின்ட் எல்மோவின் ஒளி. அதாவது சாம்பல் துகள்கள் காரணமாக விமானத்தைச் சுற்றி ஒரு லேசான பிரகாசம் தோன்றும். இது விமானம் சாம்பல் மேகத்திற்குள் செல்கிறது என்று விமானியை எச்சரிக்கிறது.
அத்தகைய சூழ்நிலையில், விமானி அந்தப் பகுதியை விட்டு வெளியேற விமானத்தைத் திருப்பி விடுவதே முதல் முயற்சி.
பட மூலாதாரம், Getty Images
விமானி இன்ஜினின் உந்துவிசையைக் குறைக்கலாம், இது இன்ஜின் வெப்பநிலையைக் குறைத்து, இன்ஜின் செயலிழப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
உண்மையில், விமானிகள் இதுபோன்ற சூழ்நிலையில் சிக்காமல் இருப்பது நல்லது. இதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளில் 9 எரிமலை சாம்பல் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எரிமலை வெடிக்கும்போது காற்றில் பரவும் சாம்பலின் திசை மற்றும் அபாயத்தைக் கண்காணிப்பதே இவற்றின் பணி. இந்தத் தகவல் விமான நிறுவனங்களுடன் பகிரப்படுகிறது.

இதற்கு முன் விமானங்கள் இந்தச் சூழ்நிலையில் சிக்கியுள்ளனவா?
கடந்த 2010ஆம் ஆண்டு ஐஸ்லாந்தின் எயஜாஃப்ஜல்லாஜோகுல் எரிமலை வெடித்ததால் ஐரோப்பாவில் சுமார் இரண்டு வாரங்களுக்கு விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
எரிமலை சாம்பலை வெறும் கண்களால் அடையாளம் காண்பது கடினம். சில நேரங்களில் ரேடார்களால்கூட இந்தச் சிறிய துகள்களைக் கண்டுபிடிக்க முடியாது. இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் இந்தோனீசியாவில் பலமுறை வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த 1982ஆம் ஆண்டில், கோலாலம்பூரில் இருந்து பெர்த் நோக்கிச் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸின் போயிங் 747 விமானம் இந்தோனீசியாவுக்கு மேல் சாம்பல் மேகத்திற்குள் சென்றது.
எரிமலை சாம்பலால் விமானத்தைச் சுற்றி ஏற்படும் பிரகாசமான ஒளியை விமானி முதலில் பார்த்தார். அடுத்த சில நிமிடங்களில் விமானத்தின் நான்கு இன்ஜின்களும் நின்றுவிட்டன.
விமானம் 11,300 மீட்டரில் இருந்து 3,650 மீட்டர் வரை கீழே வந்தது. அதன் பிறகு இன்ஜின்கள் மீண்டும் இயக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக ஜகார்த்தாவில் தரையிறங்கியது.

கடந்த 1989ஆம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அலாஸ்காவில் மவுன்ட் ரெடவுட் எரிமலை வெடித்த மறுநாள், கேஎல்எம் இன் போயிங் 747 விமானம் ஆம்ஸ்டர்டாமில் இருந்து டோக்கியோ நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென நான்கு இன்ஜின்களும் ஒரே நேரத்தில் நின்றுவிட்டன. இன்ஜின்கள் அணைந்ததும், விமானம் சுமார் 4,000 மீட்டர் கீழே விழுந்தது.
ஆனால், இன்ஜின்கள் குளிர்ச்சியடைந்தவுடன், விமானி அவற்றை மீண்டும் இயக்கினார். விமானம் பாதுகாப்பாக ஆங்கரேஜில் தரையிறங்கியது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின்படி, “சில கடுமையான சம்பவங்கள் இருந்தாலும், இன்று வரை எரிமலை சாம்பல் காரணமாக விமான விபத்தோ, பயணிகள் உயிரிழப்போ அல்லது கடுமையான காயமோ பதிவு செய்யப்படவில்லை.”

எவ்வளவு காலத்திற்கு தாக்கம் இருக்கும்?
“எரிமலை வெடிப்பால் ஏற்படும் மாசுபாட்டை (காற்றில் சாம்பல் மற்றும் எரிமலையில் இருந்து வரும் மற்ற சிறிய துகள்கள்) அளவிட நிறைய தயாரிப்புகள் செய்யப்பட வேண்டும், சென்சார்கள் முன்கூட்டியே நிறுவப்பட வேண்டும். ஆனால், இந்த எரிமலை வெடிப்புக்குத் தயாராக எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, மாசுபாட்டின் அளவு என்னவென்று சொல்ல முடியாது” என்று ஸ்கைமெட் வெதரின் தலைவர் ஜி.பி. ஷர்மா கூறினார்.
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செயலற்ற நிலையில் இருந்த இந்த எரிமலையில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புகை மற்றும் சாம்பல் வெளியேறத் தொடங்கியது.
வானிலை தகவல்களை அளிக்கும் தனியார் நிறுவனமான ஸ்கைமெட் வெதர், வானத்தில் இருந்து சாம்பல் “முற்றிலுமாக அகல எவ்வளவு நேரம் ஆகும் என்று கூறுவது கடினம்” எனக் கூறியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹாபாத்ரா, “எரிமலை சாம்பல் டெல்லியில் இருந்து விலகிச் செல்கிறது. மேலும் செவ்வாய்க்கிழமை மாலைக்குள் டெல்லியின் வானம் தெளிவாகிவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு