பட மூலாதாரம், Getty Images
‘கதைத் திருட்டு’ சர்ச்சை தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. கடந்த காலங்களில், கத்தி, சர்கார், மெட்ராஸ், லிங்கா, மெர்சல், காப்பான் போன்ற பல படங்கள் இதுதொடர்பான சிக்கல்களை சந்தித்துள்ளன. அதில் சில நீதிமன்ற வழக்குகளாகவும் மாறின.
அப்படிப்பட்ட ஒரு வழக்குதான், ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், 2010இல் வெளியான எந்திரன் திரைப்படம் தொடர்பான வழக்கு.
எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர், ‘தான் எழுதி, 1997 மற்றும் 2007இல் வெளியான ஜூகிபா என்ற கதைதான் எந்திரன் திரைப்படத்தின் கதை’ எனக் கூறி எந்திரன் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் சார்பாக ஒரு வழக்கும் தொடரப்பட்டது.
அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில், ‘எந்திரன்’ திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கருக்குச் சொந்தமான சுமார் 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையாச் சொத்துகள் முடக்கப்பட்டதாக, கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை தெரிவித்தது.
கதை திருட்டு தொடர்பான சர்ச்சைகள்
கடந்த ஆண்டு, தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தன்னுடைய ‘பட்டத்து யானை’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி தெரிவித்திருந்தார்.
“என் நாவலின் ஹீரோ, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பார். அதைத் தழுவி ‘கேப்டன் மில்லர்’ படத்தை எடுத்துள்ளனர் எனத் தெரிகிறது. இந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவுசெய்து வைத்திருக்கிறேன். என்னிடம் அனுமதி கேட்டு அதை எடுத்திருக்கலாம்.” என அப்போது அவர் கூறியிருந்தார்.
ஒரு திரைப்படத்திற்கான கதை அல்லது திரைக்கதையை ஒரு தயாரிப்பாளரிடமோ, கதாநாயகர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ சொல்வதற்கு முன்பாக, அதை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்வது அவசியம் என்கிறார் எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான அஜயன் பாலா.
சென்னையில் ஒரு நாள், மனிதன், லக்ஷ்மி, தலைவி, உயிர் தமிழுக்கு போன்ற தமிழ் படங்களில் இவர் பங்காற்றியுள்ளார்.
“அப்படி நீங்கள் பதிவு செய்த கதை/திரைக்கதையை வேறு ஒருவர் திருடி படமாக எடுத்துவிட்டால், அது குறித்து நீங்கள் சங்கத்திடம் புகார் அளிக்கலாம். நீதிமன்ற வழக்கு தொடரும்போதும் அந்தப் பதிவு முக்கிய ஆதாரமாக கருதப்படும்” என்று கூறுகிறார் அஜயன் பாலா.
பட மூலாதாரம், Discovery Book Palace
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்வது எப்படி?
சென்னை, கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய அஜயன் பாலா, அதன் நடைமுறைகள் குறித்து விளக்கினார்.
“முதலில் நீங்கள் வைத்திருப்பது ஒரு திரைப்படத்திற்கான கதைச் சுருக்கம் (Synopsis) என்றால் அது 10 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். 50 பக்கங்கள் வரை அந்த கதைச் சுருக்கம் இருக்கலாம்.
மற்றொன்று முழுமையான திரைக்கதை (Bounded Script). அதாவது வசனம், காட்சிகள் என அனைத்தும் கொண்டது. இரண்டில் எதை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.” என்கிறார்.
பதிவு செய்வதற்கு முன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர வேண்டும். அதற்கான வழிமுறைகளை விவரித்தார் அஜயன் பாலா.
“உங்களுடைய அனுபவத்தை முதலில் சங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
1) நீங்கள் ஒரு திரைப்பட எழுத்தாளரின் உதவியாளராக இருந்திருந்தால்,
2) ஒரு இயக்குநரிடம், திரைப்படத்தில் துணை, இணை அல்லது உதவி இயக்குநராக பணியாற்றி, உங்களுடைய பெயர் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தால் (Credits)
3) நேரடியாக ஒரு படத்தில் எழுத்தாளராக பணியாற்றி, பெயர் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தால்,
4) டிப்ளோமா இன் ஃபிலிம் டெக்னாலஜி (DFT) முடித்திருந்தால்,
5) ஒரு குறும்படம் எடுத்து, அதில் உங்களுடைய பெயர் இடம்பெற்றிருந்தால்,
இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதும் விண்ணப்பிக்கலாம்” என்று அவர் கூறினார்.
சங்கத்தில் மூன்று வகையான உறுப்பினர் சேர்க்கைகள் உள்ளன என்று கூறிய அஜயன் பாலா, அது குறித்தும் விளக்கினார்.
“ஆயுட்கால உறுப்பினர், உறுப்பினர், இணை உறுப்பினர் என மூன்று பிரிவுகள் உள்ளன. இதற்கான கட்டணம் 30,000 முதல் 5,000 வரை. அதை செலுத்தி உறுப்பினரான பிறகு உங்கள் கதை/திரைக்கதையை பதிவு செய்யலாம்” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Ajayan Bala Baskaran/FB
பதிவின் போது, கதை/திரைக்கதையின் இரண்டு பிரதிகளை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், அதில் ஒன்று சீலிடப்பட்டு உறுப்பினர் வசம் ஒப்படைக்கப்படும் என்றும், மற்றொன்று சங்கத்தில் வைக்கப்படும் என்றும் அஜயன் பாலா கூறினார்.
“உங்கள் கதையை வேறொருவர் படமாக எடுக்கிறார் என தெரிந்தால் அல்லது படம் வெளியான பிறகு தெரிந்தால், நீங்கள் சங்கத்திடம் முறையிடலாம். உங்களையும் குற்றம் சுமத்தப்பட்ட நபரையும் அழைத்து, இருவரும் எப்போது கதையைப் பதிவு செய்துள்ளீர்கள் என பார்ப்பார்கள். நீங்கள் முதலில் பதிவு செய்திருந்தால், உங்களின் வாதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்கிறார்.
”ஆனால், பதிவு செய்யப்படாத கதை அல்லது திரைக்கதை திருடப்பட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும் அல்லது சங்கத்தில் முறையிட்டாலும், நீதி அல்லது இழப்பீடு கிடைப்பது மிகவும் கடினம்” என்கிறார் அஜயன் பாலா.
சர்கார் படத்தின் கதை தொடர்பான சர்ச்சை
பட மூலாதாரம், SunPictures/X
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியது. படத்தின் கதை, தனது ‘செங்கோல்’ படத்தின் கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி துணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
2007ஆம் ஆண்டு, அந்த கதையை தான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், “‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்றுதான்” என்று அப்போது கூறியிருந்தார்.
பிறகு இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்துகொள்வதாக முருகதாஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பட டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
‘நியாயம் கிடைத்தாலும், வாய்ப்புகள் கிடைப்பதில்லை’
பட மூலாதாரம், Getty Images
“ஆனால், சங்கம் அல்லது நீதிமன்றத்தில் முறையிட்டு நியாயம் கிடைத்தால் கூட, அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது” என்று கூறும் வினோத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது முதல் திரைப்படத்தை விரைவில் இயக்கவுள்ளார்.
(தனது அடையாளம் வெளியானால், நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ஒரு படம் இயக்க தற்போது கிடைத்துள்ள வாய்ப்பில் ஏதேனும் சிக்கல் ஏற்படலாம் என அவர் கருதுவதால், அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது)
வினோத்தின் கூற்றுப்படி, அவர் துணை இயக்குநராக இருக்கும்போது, ஒரு முழுமையான கதை மற்றும் திரைக்கதையை எழுதி, சங்கத்தில் பதிவு செய்துள்ளார். பிறகு தயாரிப்பாளர்கள், கதாநாயகர்களின் மேனேஜர்களை சந்தித்து தனது கதையைக் கூறியுள்ளார்.
“அப்படி ஒரு பிரபலமான நடிகரின் மேனேஜரை சந்தித்து கதை சொன்னபோது, அவருக்கு பிடித்துப்போக, நிச்சயம் திரைப்படமாக எடுக்கலாம் என்று கூறினார். அவர்களது தயாரிப்பு நிறுவனமே அதை தயாரிக்கும் என்றும் கூறினார்.
முழு ஸ்கிரிப்ட் (Bounded script) கேட்டார், நானும் கொடுத்தேன். சினிமாவில் ஒரு திரைப்படம் தொடங்க சில மாதங்கள் ஆகும் என்பதால், நான் காத்திருந்தேன்.” என்கிறார் வினோத்.
அந்த பிரபல நடிகர் வேறொரு படத்தை முடித்துவிட்டு, வினோத்தின் படத்திற்கு தேதிகள் ஒதுக்குவார் எனக் கூறப்பட்டதால், ஒரு புதிய கதையை எழுதுவதில் கவனம் செலுத்த தொடங்கியதாக கூறுகிறார்.
“எப்படியும் சில மாதங்களில் நமது திரைப்படம் தொடங்கும் என்ற நம்பிக்கையில், அதுவரை இருக்கும் நேரத்தை ஒரு புதிய கதை எழுத செலவிட்டேன். ஒரு வருடத்திருக்கும் மேல் கடந்தது. திடீரென ஒருநாள் நாளிதழ்களில், அந்த நடிகரின் புதிய படத்தின் பூஜை குறித்த விளம்பரங்கள் வந்தன.” என்கிறார் வினோத்.
”அந்த விளம்பரங்களை பார்த்தபோது தனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால் அந்தப் படத்திற்கு ஒப்பந்தமான பிரபல இயக்குநர் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் திரைப்படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்தார். அதைப் படித்ததும் எனது கதையைதான், சற்று மாற்றி எடுக்கிறார்கள் என்று எனக்கு புரிந்துவிட்டது. உடனே சங்கத்திடம் முறையிட்டேன். இருதரப்பு கதைகளையும் கேட்ட பிறகு, சங்கம் எனது பக்க நியாயத்தைப் புரிந்துகொண்டது. ஆனால், எதிர்தரப்பு குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவழியாகப் பேசி, படத்தின் தொடக்கத்தில் எனது பெயரை (Credits) போட ஒப்புக்கொண்டார்கள்.” என்கிறார் வினோத்.
இந்த சம்பவத்தின் தாக்கத்தால், 3 முதல் 4 ஆண்டுகளுக்கு இயக்குநர் வாய்ப்பு பலமுறை கைநழுவிப் போனதாக கூறுகிறார் வினோத்.
“இவனுக்கு வாய்ப்பு கொடுத்தால் பிரச்னை வருமோ என சிலர் நினைத்திருக்கலாம். அந்த பிரபல நடிகரின் நட்பு வட்டம் பெரிது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒருவழியாக, இப்போது தான் ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.” என்கிறார் வினோத்.
தயாரிப்பாளர் தரப்பு கூறுவது என்ன?
பட மூலாதாரம், @Dhananjayang
தமிழ் சினிமாவில் நிலவும் ‘கதைத் திருட்டு’ பிரச்னைகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “எங்களிடம் யாராவது கதை சொல்ல வந்தால், முதலில் கேட்பது உங்கள் கதையை பதிவு செய்து விட்டீர்களா என்றுதான். செய்துவிட்டோம் எனக் கூறினால், பதிவு எண்ணை சரிபார்ப்போம்.”
“பதிவு செய்வது குறித்து அவர்களுக்கு தெரியவில்லை, என்றால் வழிகாட்டுவோம். பதிவு செய்யாத திரைக்கதையை நாங்கள் வாங்கிக் கொள்வதில்லை” என்கிறார்.
“நான் தயாரித்து, விக்ரம் நடிப்பில் வந்த ‘தாண்டவம்’ திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே கதைத் திருட்டு பிரச்னை வந்தது. ஒரு எழுத்தாளர் ‘தாண்டவம்’ என்னுடைய கதை என வழக்கு தொடர்ந்தார். ஆனால், படத்தின் கதைக் கரு அல்லது யோசனை (Idea) பல ஹாலிவுட் படங்களின் தாக்கத்தால் உருவானது என்றும், அதற்கு யாரும் பதிப்புரிமை கோரவில்லை என்பதும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.” என்கிறார்.
அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், “யோசனைகளுக்கு (Idea) பதிப்புரிமை இல்லை, அதை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் (திரைக்கதையில் காட்சிகளாக அமைப்பது) என்பதில் மட்டுமே பதிப்புரிமை கோர முடியும். வாதி, பதிப்புரிமை மீறலைக் கோருவதற்கு, இரண்டு போட்டி படைப்புகளுக்கும் இடையே கணிசமான ஒற்றுமை இருக்க வேண்டும்.” என்று கூறியது.
இதைச் சுட்டிக்காட்டிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “கதைத் திருட்டு என்றால், இரு யோசனைகள் மட்டுமே ஒத்துப்போவதல்ல, திரைக்கதை காட்சிகள் ஒத்துப்போக வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இது புரியாமல் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்கிறார்.
“ஒரு கதை- திரைக்கதையை உருவாக்குவது சாதாரணமான விஷயமல்ல. எனவே பாதிக்கப்பட்ட படைப்பாளிகள் பக்கம் தயாரிப்பாளர்கள் நிச்சயம் நிற்பார்கள். மற்றபடி, நல்ல கதை/திரைக்கதை எழுதுபவர்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் உள்ளன.” என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு