• Thu. Feb 5th, 2026

24×7 Live News

Apdin News

எனக்கு ஜனாதிபதி இல்லை | செ. சுதர்சன்

Byadmin

Feb 5, 2026


எழுபத்தெட்டு ஆண்டுகளாகியும்

இன்னும் இருண்டே கிடக்கிறது

சுதந்திரச் சதுக்கம்!

ஒரு மெல்லிய தென்றலேனும்

அங்கு தவழவில்லை!

 

மின்விளக்கு ஒளிகளோடும்

இருபுறமும்

பாதுகாப்பு அணிகளோடும்

நீரோ வருகிறீர்…

கொடியை ஏற்றுவதற்காக…

 

யாருக்கான வானத்தில்…?

 

நீர் ஆளும் அரியணையின்

ஒரு திசையில்….

புத்தரின் ஒரு முகமும்;

இன்னோர் திசையில்…

நிலம் காவுகொள்ளும்

அவரின் வேறொரு முகமும்;

மற்றோர் திசையில்…

காணாமல் கடத்தும்

அவரின் பிறிதோர் முகமும்;

வேறோர் திசையில்…

வீடுகளைப் பிடித்து

மக்களை வெளியேற்றிய

அவரின் வேறோர் முகமும் என நாற்றிசையும் விளங்க..

நீர் கொடியேற்றும்

குட்டித் தீவின் வானமோ

யாருக்கானது?

 

நாலாயிரத்துக்கும் அதிகமான படைவீரர்கள்

இரண்டாயிரத்துக்கும் அதிகமான

விருந்தினர்கள்

இலட்சத்திற்கும் அதிகமான

பார்வையாளர்கள் இருந்தும் என்ன?

எனது வானத்தின் குரலை

யார்தான் யோசித்தார்கள்!?

அது என்னிடந்தான் இருக்கிறது!

 

துறவிகளின் அணிவகுப்பு எனும்

அணு ஆயுதம் தவிர

எல்லாமே காட்சிக்கு வந்துள்ளன!

‘இருமொழியிலும் கீதம்

இனிய சுதந்திரம்’ எனக் காய்ச்சிய

பழைய கஞ்சி புளிக்கத் தொடங்கிவிட்டது!

 

எப்போது

குத்துக்கரணம் அடிக்கும் எனவும்

எப்போது

நூல் அறுத்துச் செல்லும் எனவும்

அறியாத அப்பாவி மக்கள்

பட்டத் திருவிழாவைப் பார்ப்பதாக எண்ணி

வந்திருக்கிறார்கள்!

அவர்களுக்கோ….

அந்த வானம் மாத்திரமே தெரிந்திருக்கிறது!

 

தீவின் தலையில்

பொங்கல் மரியாதையும்…

அதன் இன்னோர் திசையில்

அச்சுறுத்தும் ஆயுத மரியாதையும்

ஏற்கும்போது…

பொங்கலின் சுவை

ஆயுதக் கொழுப்பில் கலக்கும்போது…

தீவை எதனால் கட்டி

தீர்வை எதனால் எழுப்புவீர்?

 

படை வீரன் ஒருவனின்

துருவேறிய இரும்புக் குரலின் முன்னே

மங்கள இசையின் சுரங்கள்

கருகிச் சோர்ந்து மயங்கி மடிவதை

நீர் காணவில்லையா?

 

எனக்கான நிலத்தில்

ஆயுத அணிவகுப்பும்

முட்கம்பி வேலிகளும்

புத்தர் சிலைகளும்

பலவந்தமாக முளைத்து எழுகையில்

என்னால்…

கொடியசையும் வானத்தை

அண்ணாந்து பார்க்க முடியவில்லை!

 

எனது நிலம் இல்லாதபோது…

எனக்கு வானமும் இல்லை!

எனக்கு நீர் ஜனாதிபதியும் இல்லை!

-செ. சுதர்சன்-

By admin