1
எனக்கு நடிக்கத் தெரியாது. தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என இசையமைப்பாளர் தேனிசைத்தென்றல் தேவா நகைச்சுவையாக பதிலளித்தார்.
தனது இசையின் மூலம் அசைக்கமுடியாத ஒரு தனித்துவ அடையாளத்தை தன்வசமாக்கி இன்றுவரை இசை ரசிகர்களை தனது காணாவினாலும் மெல்லிசையினாலும் துள்ளிசையினாலும் கட்டிப்போட்டு வைத்திருக்கும் இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா, கொழும்பு ஹவ்லொக் மைதானத்தில் சனிக்கிழமை ( செப்டெம்பர் 6) மாலை 6.30 மணி முதல் இடம்பெறவுள்ள “ தேவா தி தேவா ” என்ற மாபெரும் இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார்.
இந்நிலையில் தேனிசைத் தென்றல் தேவா கலந்துகொண்ட, இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( செப்டெம்பர் 4 ) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.
இதன்போது தேவாவிடம் நீங்கள் ஏன் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.
தேவா தி தேவா என்ற இசை நிகழ்ச்சி, இலங்கையின் முன்னணி நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பாளரான Aaraa Entertainment குழுமத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை Book My Show, Ticket Ministry மற்றும் அடையார் ஆனந்தபவன் (கொள்ளுப்பிட்டி), திண்டுக்கல் தலப்பாக்கட்டி ( வத்தளை , பம்பலப்பிட்டி), Maruthi Money Exchange (வெள்ளவத்தை ), ஸ்ரீ வைஷ்ணவி விஹார் (கொட்டாஞ்சேனை ), நியூ வைஷ்ணவி விஹார் (தெஹிவளை ,) ஈரோடு அம்மன் மெஸ் (பம்பலப்பிட்டி ), Sarita Textorium ( Main Street ), ரவி ஜூவல்லரி ( Main Street ), சாரதாஸ் (Main Street ) ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பல தசாப்தங்களாக தனது இசையின் மூலம் மக்களை மகிழ்வித்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா இலங்கையிலுள்ள இசை ரசிகர்களை மகிழ்விக்க தனது இசைக்குழுவினருடனும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பிரபல பாடகர்களான மனோ, அனுராதா ஸ்ரீராம் மற்றும் சூப்பர் சிங்கர் பாடகர்கள் உள்ளிட்டோருடன் வருகை தந்துள்ளதில் மகிழ்ச்சியடைவதாகவும், Aaraa Entertainment குழுமத்தினர் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் இலங்கை மக்களின் அன்பும் அவர்களின் இசை ஆர்வமும் தன்னை எப்போதும் அதிசயிக்க வைத்திருக்கிறது எனவும் தேனிசைத் தென்றல் தேவா மேலும் குறிப்பிட்டார்.
Aaraa Entertainment குழுமத்தினர் இது தொடர்பில் தெரிவிக்கையில், இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சியினை இலங்கையில் நடத்த வேண்டும் எனும் கோரிக்கை எமக்கு பல காலமாகவே அதிகமாக விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான சந்தர்ப்பம் கனிந்துள்ளது. இசையையும் தேவாவையும் எம்போதும் பிரித்து பார்க்க முடியாத ஒன்றாக உள்ள நிலையில், இந்த இசை நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருப்பது எமக்கு ஒரு பெருமையான விடயமாக உள்ளதாக குறிப்பிட்டனர்.
இந்த இசை நிகழ்சிக்கான பிரதான அனுசரணையாளராக விசாகா ( Visaga – your clothing hub) இணைந்துள்ளதுடன் அனுசரணையாளர்களகாக Coca Cola, Cinnoman Grand Hotel, Abans – JBL, Adyar Ananda Bhavan(A2B),RG Brothers – Star Gold இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.