• Thu. Oct 22nd, 2026

24×7 Live News

Apdin News

“எனது ஆத்மா யாரையும் சும்மாவிடாது”- உயிரை மாய்ப்பதற்கு முன் வாலிபர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

Byadmin

Oct 22, 2026


வைரமுத்து தனது நிலத்தை ஏமாற்றியதாக அண்ணாநகரை சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது மகன்கள் காரணம் என்று பெயர்களை குறிப்பிட்டு உள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை பாடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மூத்த மகன் வைரமுத்து (வயது30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி திடீரென வைரமுத்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நிலத்தை அபகரித்து ஆள்மாறாட்டம் செய்து விற்றதால் ஏற்பட்ட மனவேதனையில் வைரமுத்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

ரூ.50 ஆயிரம்

வைரமுத்துவின் குடும்பத்திற்கு சொந்தமான நிலம் கூடுவாஞ்சேரியில் இருந்தது. இதனை அண்ணாநகரை சேர்ந்த ஒருவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்துவின் தந்தை முருகேசன் அடகு வைத்து ரூ.50 ஆயிரம் கடனாக பெற்று பின்னர் பணத்தை முழுவதும் திருப்பி செலுத்தியதாக தெரிகிறது.

ஆனாலும் நிலத்தின் பத்திரத்தை திருப்பி கொடுக்காமல் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரம் தயாரித்து அந்த நிலத்தை வேறு ஒருவரிடம் விற்று விட்டதாக தெரிகிறது.

தாம்பரம் போலீஸ் கமிஷனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசனின் குடும்பத்தினர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே வைரமுத்துவின் தம்பிக்கு சிறுநீரகம் பாதித்து உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

தற்கொலை

இதனால் மன உளைச்சலில் இருந்த வைரமுத்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. இந்த நிலையில் வைரமுத்து தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். மேலும் 2 பக்க கடிதமும் எழுதி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ, கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் வைரமுத்து பேசியிருப்பதாவது:- இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். எனது சாவுக்கு காரணம் எங்களுடைய நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் அபகரித்து விற்று உள்ளனர்.

முதலமைச்சர் விஜய்

இது தொடர்பாக தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளோம். எங்களை ஏமாற்றியவர்கள் மீது முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களது நிலத்தை விற்ற அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சும்மா விட்டாலும், எனது ஆத்மா சும்மா விடாது. நிலத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் சும்மா விடமாட்டேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட என்னுடைய தம்பியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது இரு சிறுநீரகமும் செயல் இழந்து இருப்பதாக தெரிவித்தனர்.

உடல் உறுப்புகள்

தான் இறந்த பிறகு என்னுடைய 2 சிறுநீரகத்தை எடுத்து எனது தம்பிக்கு வைக்க வேண்டும். நான் இறந்துவிட்டாலும் என்னுடைய உடல் உறுப்புகள் தம்பியின் உடலில் உயிர் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதுவே என்னுடைய கடைசி ஆசை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

வைரமுத்து தனது நிலத்தை ஏமாற்றியதாக அண்ணாநகரை சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது மகன்கள் காரணம் என்று பெயர்களை குறிப்பிட்டு உள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

By admin