1
கைது செய்யப்படுவேன் என்பதற்காக நான் அஞ்சவில்லை. ஆனால் என்னை கைது செய்து ஓராண்டு சிறையிலடைப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும். தவறு செய்யாமல் கைது செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை (24) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
என்னை கைது செய்ய தீர்மானித்தால் கைது செய்வதற்கு முன்பாக நீதிமன்றத்துக்கும் எனக்கும் அறிவிப்பதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். வழக்கின் ஊடாக எதிர்பார்த்தது நிறைவேறியுள்ளது. கைது செய்யப்படுவேன் என்பதற்காக நான் அஞ்சவில்லை. ஆனால் என்னை கைது செய்து ஓராண்டு சிறையிலடைப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும்.
தவறு செய்யாமல் கைது செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும். பழிவாங்கலுக்காக இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை தவறாகும். அது நியாயமற்றது. அரசாங்கம் அதன் இயலாமையை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு முயற்சிக்கிறது. ஹிட்லர் என்ன செய்தார் என்பதை ஆராய்ந்து பார்த்தால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்ன செய்கின்றார் என்பது புரியும்.
நாட்டை அழிப்பதற்கு பயங்கரவாதிகள் முயற்சித்தால் அவர்களை அழிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் தற்போது அமைதியாகவுள்ள நாட்டில் அரசியலமைப்பின் ஊடாக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. எனவே தான் அதனை தடுப்பதற்காக எதிர்க்கட்சிகளாக நாம் ஒன்றிணைந்துள்ளோம். போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகள் நிச்சயம் முன்னெடுக்கப்பட வேண்டியவையாகும்.
ஆனால் தமக்கு தெரிந்தவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதை அனுமதித்தது, ஏனையோருக்கு வாய்ப்பளிக்கும் சூழல் இருக்கக் கூடாது. தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுவதாக கூறப்பட்டாலும், எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் சமூகத்தில் போதைப்பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாகவோ அதன் பாவனை குறைவடைந்துள்ளதாகவோ தெரியவில்லை. எனவே அரசாங்கம் அது குறித்த நிலைவரத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.