• Fri. Dec 27th, 2024

24×7 Live News

Apdin News

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு | BJP leader Annamalai condemns Anna University student FIR leaked issue

Byadmin

Dec 26, 2024


கோவை: “பாஜக மாநிலத் தலைவராக எனது இல்லத்துக்கு வெளியே நின்று, சாட்டையால் என்னை நான் 6 முறை அடித்துக் கொள்ளப் போகிறேன். நாளையில் இருந்து திமுக ஆட்சியில் இருந்து அகற்றும்வரை, நான் செருப்பு அணியமாட்டேன்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “திமுக என்ற போர்வை இருந்ததால் மட்டும்தான், குற்றவாளி ஞானசேகரன், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது ஆறறிவு இருக்கும் எந்த மனிதருக்கும்கூட தெரியும். திமுகவின் கட்சி பொறுப்பில் இருக்கும் அந்த நபர், அமைச்சர்களுடன் தொடர்பில் இருக்கும் காரணத்தால்தான் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்படவில்லை. ஏற்கெனவே இதே போன்றதொரு குற்றத்தை செய்த அந்த நபர் இரண்டாவது முறையும் அதேபோல ஒரு குற்றத்தை செய்திருக்கிறார்.

ஆனால், இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் அனைவரும் பல்டி அடிக்கின்றனர். முதல் தகவல் அறிக்கை எப்படி கசிந்தது? எப்படி அந்த முதல் தகவல் அறிக்கை வெளியே வந்தது? காவல் துறையை தவிர அந்த முதல் தகவல் அறிக்கையை யாரும் வெளியே விடமுடியாது. எல்லாமே வலைதளத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு சுலபமாக ஹேக் செய்யமுடியாது. அந்த முதல் தகவல் அறிக்கையும் சரியாக இல்லை. படிக்காதவர் எழுதினால்கூட ஒழுக்கமாக எழுதுவார்கள். அந்த முதல் தகவல் அறிக்கையைப் பார்க்கும்போது, குற்றத்தில் ஈடுபட்டதா அந்த பெண்ணா? இல்லை, கைது செய்யப்பட்டுள்ள அந்த அயோக்கியனா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்ட பெண் குற்றம் செய்தது போல முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டுள்ளது.

அதையெல்லாம் படிக்கும்போது ரத்தம் கொதிக்கிறது. காதலன் உடன் சென்றேன். ஒதுக்குப்புறமாக ஒதுங்கியிருந்தேன். காதலனுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தேன். இதுவெல்லாம் ஒரு முதல் தகவல் அறிக்கையா? இந்த முதல் தகவல் அறிக்கையை எழுதியவர்களுக்காக வெட்கமாக இல்லையா? குற்றம் நடந்தது அந்தப் பெண்ணுக்கு, என்பதை உணராமலே எஃப்ஐஆர் எழுதப்பட்டுள்ளது. இந்த எஃப்ஐஆர் நீதிமன்றத்தில் நிற்காது. இப்படித்தான் எஃப்ஐஆர் எழுதுவார்களா?

வெளியாகியுள்ள முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், மொபைல் எண், அப்பா பெயர், ஊர் பெயர் என அனைத்தையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் வெளியிட்டதற்காக வெட்கப்பட வேண்டும். திமுகவில் இருப்பவர்கள் இதற்காக, வெட்கப்பட வேண்டும். அனைத்து தகவல்களையும் வெளியிட்டு அந்த பெண்ணின் குடும்பத்தையே நாசம் செய்துவிட்டனர். 7 தலைமுறைக்கும் அந்த குடும்பத்துக்கு கருப்பு புள்ளியைக் கொடுத்ததற்காக வெட்கப்பட வேண்டும். அமைச்சராக இருப்பதற்ககு திமுகவினர் வெட்கப்பட வேண்டும்.

தேசிய கட்சியினுடைய மாநில பொறுப்பாளர் பதவியில் இருப்பதால் மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறேன். வீதிக்கு தனிமனிதனாக வந்தால் வேறு மாதிரியாக இருக்கும். நான் பேசுவது பிரதமர் மோடியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அமைதியாக நாகரிகமாக பேசி வருகிறேன். தமிழக அரசியலில் மக்கள் பிரச்சினைகளை பேசுவது இல்லை. காறித்துப்புவது போல இருக்கிறது தமிழக அரசியல். எனவேதான், இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளோம். இந்த அரசியல் ஆகாது.

சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற முன்னாள் ஆளுநரை காவல் துறை கைது செய்துள்ளனர். இன்னும் எத்தனை முறை பாஜகவினரை கைது செய்வீர்கள். எங்களது வீட்டுக்கு சாலை வசதி செய்து கொடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோமா? எங்கள் வீட்டுக்கு சிறுவாணி தண்ணீர் வரவில்லை என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோமா? எனவே இனி ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் இல்லை. இனிமேல் வேறு மாதிரிதான் டீல் செய்யப் போகிறோம். நாளையில் இருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் வெளியே இருந்தும் ஆர்ப்பாட்டம் நடக்கும். நாளை எனக்கு நானே சாட்டையடி கொடுக்கக் கூடிய நிகழ்வை காலை 10 மணிக்கு எனது வீட்டுக்கு வெளியே நடத்தப் போகிறேன்.

நாளை காலை பாஜக மாநிலத் தலைவரான எனது இல்லத்துக்கு வெளியே நின்று, சாட்டையால் என்னை நான் 6 முறை அடித்துக் கொள்ளப்போகிறேன். நாளையில் இருந்து திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை, நான் செருப்பு அணியமாட்டேன். இதற்கு ஒரு முடிவு வந்தாக வேண்டும். நாளையில் இருந்து 48 நாட்கள் நான் விரதம் இருக்கப்போகிறேன். பிப்ரவரி இரண்டாவது வார முடிவில், ஆறுபடை வீட்டுக்கும் நான் போகப்போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிடப் போகிறேன்” என்று அவர் கூறினார்.



By admin