தென்காசி: என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே அரசு சார்பில் ரூ.1.020 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து, 2,44,469 பயனாளிகளுக்கு ரூ.587.39 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், 141.6 கோடி மதிப்பில் முடிவுற்ற 117 திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, ரூ.291.19 கோடி மதிப்பில் 83 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தமிழக முதல்வர் சிறப்புரையாற்றினார்.
விழாவில் முதல்வர் பேசியதாவது: “நம் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின்னர் தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்றி வருகிறோம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களையும் வளர்த்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று அரசு விழாவில் பங்கேற்று, அந்தந்த மாவட்டத்துக்கு தேவையான திட்டங்களை தொடங்கிவைத்து வருகிறேன்.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளேன். கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் அனைத்து அரசு துறைகள் மூலம் தென்காசியில் நடைபெற்ற பணிகள் குறித்து ஓர் ஆய்வறிக்கையை தயாரிக்க சொல்லியிருந்தேன். அதை நான் வாங்கி பார்த்தபோது எனக்கே மலைப்பாக இருந்தது. பெரும்பாலும் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் ஏதாவது ஒரு வகையில் பயனடைந்துள்ளது என்று சொல்லத்தக்க வகையில் அந்த அறிக்கை இருந்தது.
எல்லா ஊர் பெயர்களும் அரசின் அறிக்கையில் உள்ளது. அந்த அளவுக்கு தென்காசி மாவட்டத்தில் திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக இவ்வளவு தூரம் வந்துவிட்டு, புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் போக முடியுமா?. தென்காசி மாவட்டத்துக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவாக புதிதாக 10 அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ரூ.15 கோடி மதிப்பில் 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும், சங்கரன்கோவில், மேலநீலித நல்லூர் ஒன்றியத்தில் உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் குருக்கள்பட்டி சிப்காட் திட்டத்தில் குடிநீர் தேவைக்காக ரூ.52 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்படும். கடையம் ஒன்றியத்துக்கு ரூ.6 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும். சிவகிரி, கடையநல்லூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயனளிக்கம் வகையில் இந்த பகுதியில் உள்ள முக்கிய கண்மாய்கள் ரூ.12 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும்.
கடனாநதி அணை ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்படும். கடையநல்லூர் வட்டம், வறட்டாறு பாசன அணைக் கட்டுகள், குளங்கள் ரூ.4 கோடில செலவில் மேம்படுத்தப்டும். செங்கோட்டை வட்டம், அடவிநயினார் அணைத் திட்டத்தின் கீழ் உள்ள கால்வாய்கள், குளங்கள் ரூ.5 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும். வீரகேரம்புதூர் வட்டம், மாறாந்தை கால்வாய் ரூ.2 கோடி செலவில் சீரமைக்கப்படும். ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.1 கோடி செலவில் குடிநீர் உள்ளிட்ட பிற வசதிகள் செய்து தரப்படும். இந்த அறிவிப்புகள் உங்களக்கு மகிழ்ச்சியை தரும் என்று நம்புகிறேன்.
மக்களை மகிழ்விக்கவே இந்த ஆட்சி. மக்களை காக்கவே இந்த ஆட்சி. மக்களை வளர்க்கவும், மக்களுக்கு கொடுக்கவும் இந்த ஆட்சி. எப்போதும் மக்களைப் பற்றி நினைப்பதால்தான் நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள். இந்த நெருக்கம் சிலரை தூங்கவிடாமால் செய்கிறது. அதனால் நாள்தோறும் அவதூறு செய்தியை அடித்து விடுகிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விரக்தியின் உச்சிக்கே சென்று பேசுகிறார். தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் மேட்டூர் அணை தொடர்ந்து நிரம்பி வரகிறது. மேட்டூர் அணை நீரை பாசனத்துக்கு தண்ணீரை முன்கூட்டியே திறந்து விடுகிறோம். தொடர்ந்து நல்ல மழை பெய்ததை நல்லாட்சிக்கான அடையாளமாக மக்கள் போற்றுகின்றனர். ஆனால் இதை வைத்தும் சிலர் அரசியல் செய்கின்றனர். விளைந்த நெல்லை வாங்கவில்லை என்று பழனிசாமி அவதூறு பரப்புகிறார்.
விவசாயிகள் பாடுபட்டு உற்பத்தி செய்த நெல்லை வீணாக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளில் முந்தைய ஆட்சியை விட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 1978ல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகம் கருணாநிதி உருவாக்கினார். அதன் மூலம் நெல் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தினார். நம் ஆட்சியில் வேளாண் உற்பத்தி, பாசன பரப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப நெல் கொள்முதலையும் நெல் கொள்முதல் நிலையங்களையும் அதிகரித்துள்ளோம்.
கடந்த 4 ஆண்டுகளில் 1 கோடி 70 லட்சத்து 45 ஆயிரத் 545 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 42 லட்சத்து 61 ஆயிரத்து 386 டன் நெல் கெள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 22 லட்சத்து 70 ஆயிரத்து 293 டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இந்த அடிப்படை தெரியாமல் பொய் சொல்கிறார் பழனிசாமி. அவரிடம் பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அவரது வரலாறே அதுதான்.
அதிமுக ஆட்சி காலத்தில் அக்டோபர் முதல் தேதியில் தான் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நம் ஆட்சியில் ஒரு மாதம் முன்பே செப்டம்பர் முதல் நாளே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தேன். அதன்பேரில், மத்திய அரசு அதிகாரிகள் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1,000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் வரத்து அதிகமாக இருப்பதால் ஞாயிற்றுக் கிழமையும் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இது எதுவும் தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் பேசகிறார். தன்னை விவசாயி என சொல்லும் பழனிசாமி ஆட்சியில்தான் மோசமான நிலை இருந்தது. மத்திய பாஜக அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. அதற்கு எதிராக 2 ஆண்டுகள் போராடிய விவசாயிகளை புரோக்கர் என கொக்சைப் படுத்தி பேசினார்.
அதை நாடும், விவசாயிகளும் மறக்கவில்லை. ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் 3 சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தவன் நான். வடகிழக்கு பருவமழை காலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமின்றி அன்றாட பணிகளை மேற்கொள்ள அரசு துரிதமாக செயல்படுகிறேம். தொடர்ந்து நிலைமையை கண்காணித்து செயல்பட்டு வருகிறோம். நிவாரண பணிகள், உதவிகள், மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உணவு, குடிநீர், சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள், சாய்ந்து விழும் மரங்களை மரம் அகற்ற அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
போர்க்கால நிலையில் தயாரிப்பு நிலையோடு இருக்கிறோம். மக்களை காக்க எங்களுக்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை. 3 முறை இயற்கை பேரிடர் சந்தித்தோம். மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தோம். பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புகளை சரி செய்ய, நிவாரண உதவிகளை செய்ய நாம் கேட்ட 37 ஆயிரம் கோடி நிதியை பாஜக அரசு கொடுக்கவில்லை. கேட்ட நிதியை கொடுத்தால் தமிழ்நாடு சீராகிவிடும், தமிழ்நாடு வளர்ந்துவிடும். அது நடக்கக்கூடாது என நினைக்கிறது மத்திய அரசு. மத்திய அரசு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் மக்களை காப்பதுதான் நம் கடமை என செயல்பட்டு வருவதுதான் திராவிட மாடல் அரசு.
என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. இப்போது தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டுவந்துள்ளனர். பிஹாரில் பாஜக தோல்வி உறுதியானதால் வாக்காளர்களை நீக்க துணிந்தனர். அதே பார்முலாவை தமிழ்நாட்டில் முயன்று பார்க்கிறார்கள். தொடக்கம் முதலே இந்த சதியை உணர்ந்து எதிர்த்து வருகிறோம். கேரளாவும் நம்மோடு இணைந்துள்ளது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க நவம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
ஜனநாயகத்தின் அடித்தளம் வாக்குரிமை. அதை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். வாக்குரிமை பறிப்பு, வாக்கு திருட்டு போன்ற பாஜகவின் முயற்சிகளை முறியடிப்போம். மக்களாட்சியை காக்க அனைத்து கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும்.
இயற்கை பேரிடராக இருந்தாலும், செயற்கையான அரசியல் சதியாக இருந்தாலும் எல்லாவற்றிலும் இருந்து காப்பதே என்றைக்கும் நம்முடைய பணி. மக்களை காக்கவே இந்த ஆட்சி, மக்களை வளர்க்கவே இந்த ஆட்சி, மக்களுக்கு தேவையானதை கொடுக்கவே இந்த ஆட்சி. இந்த நல்லாட்சி எந்நாளும் தொடரும். தமிழ்நாட்டின் வளம் பெருகும்.” இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், ராஜகண்ணப்பன், மனோ தங்கராஜ், எம்பிக்கள் கனிமொழி கருணாநிதி, ராபர்ட் ப்ரூஸ், டாக்டர் ராணி ஸ்ரீகுமார், எம்எல்ஏக்கள் ராஜா, சதன் திருமலைக்குமார், அப்துல் வகாப், பழனி நாடார், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை, தங்கவேலு, கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.