27
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஜெஃப்ரி எப்ஸ்டீன் இடையிலான மின்னஞ்சல் உரையாடல்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து எலோன் மஸ்க் தமது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட சில மின்னஞ்சல்களில், கரீபியன் கடலில் அமைந்துள்ள எப்ஸ்டீனின் தனியார் தீவுக்கு செல்ல மஸ்க் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும், இதற்கு விளக்கம் அளித்துள்ள மஸ்க், எப்ஸ்டீனுடன் தமக்கு மிகக் குறைந்த அளவிலேயே மின்னஞ்சல் தொடர்புகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
“எப்ஸ்டீனின் தீவுக்கு செல்லவோ அல்லது அவரது ‘லோலிடா எக்ஸ்பிரஸ்’ விமானத்தில் பயணிக்கவோ வந்த அழைப்புகளை நான் மறுத்துவிட்டேன். இருப்பினும், அவருடன் நடந்த சில மின்னஞ்சல் உரையாடல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த எதிர்ப்பாளர்களால் பயன்படுத்தப்படலாம் என்பதை நான் அறிந்திருந்தேன்” என மஸ்க் கூறியுள்ளார்.
மேலும், “எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் இருந்து சில துணைப்பகுதிகளை மட்டும் வெளியிடுவது முக்கியமல்ல. எப்ஸ்டீனுடன் சேர்ந்து கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுதான் உண்மையான முக்கியத்துவம்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.