3
தயாரிப்பு : நய்சத் மீடியா வொர்க்ஸ் & அருணா ஸ்ரீ என்டர்டெய்ன்மென்ட்
நடிகர்கள் : ரூபா கொடவாயூர் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சபாஷ் ராமசாமி, ஹரிதா மற்றும் பலர்.
இயக்கம் : பெப்பின் ஜோர்ஜ் ஜெயசீலன்
மதிப்பீடு : 3 / 5
தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் புது முகங்கள் நடிப்பில் சுப்பர் நேச்சுரல் திரில்லர் ஜேனரில் தயாராகி வெளியாகி இருக்கும் ‘ எமகாதகி’ எனும் திரைப்படம் – அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் அசலான பட மாளிகை அனுபவத்தை வழங்கியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தஞ்சாவூர் எனும் தமிழக நகர பகுதிக்கு அருகே உள்ள ஊர் ஒன்றின் தலைவரின் மகள் லீலா ( ரூபா கொடவாயூர்) . இவளுக்கு சிறிய வயதில் இருந்தே ஓஸ்துமா பிரச்சனை இருக்கிறது. இதற்காக பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதில் அசௌகரியத்தை உணர்பவள்.
ஊரில் திருவிழா நடைபெறுவது குறித்த அறிவிப்பு வெளியாகிறது. இந்த தருணத்தில் லீலாவிற்கும், அவருடைய தந்தைக்கும் இடையே காதல் தொடர்பான சந்தேகத்தின் பெயரில் சிறிய அளவிலான கருத்து முரண் ஏற்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை, லீலா மீது வன்முறையை பிரயோகிக்கிறார்.
இதனால் கோபமடைந்த லீலா, அறைக்குள் சென்று தாழிட்டு கொள்கிறாள். பிறகு அவள் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை அந்த இறந்த சடலத்திற்கு தேவையான இறுதி சடங்குகளை செய்ய தயாராகிறார்.
அதன் பிறகு பிணம் வீட்டை விட்டு நகர மறுக்கிறது. இதனால் துக்கம் விசாரிக்க மற்றும் இறுதிச் சடங்கில் பங்கு பற்ற வருகை தந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த பிணத்தை அங்கிருந்து அகற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் அந்த சடலம் நகர மறுக்கிறது. அத்துடன் மட்டுமில்லாமல் அந்த இறந்து போன உடல் துள்ளுகிறது. எழுந்து நிற்கிறது. இப்படி பல அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெற்றவுடன் ஊர் மக்களிடையே பெரும் குழப்பமும், அச்சமும் ஏற்படுகிறது. லீலாவின் பிணம் ஏன் வீட்டை விட்டு செல்லவில்லை? லீலாவின் மரணத்தின் பின்னணி என்ன? இது போன்ற அமானுஷ்ய விடயங்களை விவரிப்பது தான் இந்த சுப்பர் நேச்சர் திரில்லராக உருவாகி இருக்கும் ‘எமகாதகி’ படத்தின் கதை.
லீலாவின் மனதை காயப்படுத்தியவர்கள் நேரம் செல்லச் செல்ல தாமாக முன்வந்து தந்தை, காதலன், உறவினர்கள்.. என பலரும் தங்களின் தவறுகளை மக்களின் முன் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனாலும் பிணம் நகர மறுக்கிறது. இறுதியில் என்ன உண்மை வெளிப்படுகிறது? அதன் பிறகு லீலாவிற்கும் அவருடைய தாய்க்கும் இடையேயான உணர்வுபூர்வமான உரையாடலுடன் நிறைவடைகிறது.
இது போன்றதொரு கதையை சிந்தித்து அதனூடாக பெண்ணியத்தின் உயர்வை உரக்க சொல்லிய இயக்குநரை தாராளமாக பாராட்டலாம்.
லீலாவாக திரையில் தோன்றும் நடிகை ரூபா கொடவாயூர் அடிப்படையில் பரதநாட்டிய கலைஞர் என்பதால் கதாபாத்திரத்தின் உணர்வை துல்லியமாக உள்வாங்கி அழகாகவும் , நேர்த்தியாகவும் பிரதிபலித்து ரசிகர்களின் மனதில் நீக்கமற நிறைகிறார். குறிப்பாக சடலமாக நடிக்கும் போதும் அவர் வெளிப்படுத்தும் பாவனை அழகு.
லீலாவின் காதலரான அன்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நாகேந்திர பிரசாத், லீலாவின் சகோதரர் முத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சபாஷ் ராமசாமி,இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
லீலாவின் தந்தையாக நடித்திருக்கும் நடிகர் ராஜு ராஜப்பனும் இயல்பாக நடித்து, அந்த கதாபாத்திரத்தை உயிரூட்டி இருக்கிறார். இவர்கள் எல்லாரையும் விட நீலாவின் தாயாக நடித்திருக்கும் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கீதா கைலாசம் உச்சகட்ட காட்சியில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்.
கிராமம் , ஒரு வீடு , அதற்குள் ஒரு பிணம் , குறைவான மக்கள், எனும் இந்த கதை களத்தின் பின்னணியில் சுப்பர் நேச்சுரல் திரில்லர் அம்சங்களை நேர்த்தியாக வழங்கி, ரசிகர்களை சில அற்புதமான பட மாளிகை அனுபவத்தை உணரச் செய்த ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், பின்னணி இசையை தந்த இசையமைப்பாளர் ஜெஸின் ஜோர்ஜ் ஆகியோரை தாராளமாக பாராட்டலாம்.
சடலமான பிறகும் உண்மைக்காக போராடும் பெண்தான் எமகாதகி.
எமகாதகி – கண்டகி நதி கல்.