சிவகாசி: புதிதாக கட்சி தொடங்குபவர்கள் படத்தைப் போட்டு எம்ஜிஆரின் செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள், என தவெக விஜய்யை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறைமுகமாக சாடியுள்ளார்.
சிவகாசியில் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் 117-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வழிநடத்தி வருகிறார். புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எம்ஜிஆரின் படத்தைப் போட்டு செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள். எம்ஜிஆர் படம், பெயரை பயன்படுத்த தகுதி உள்ள கட்சி அதிமுக மட்டுமே. திரை நட்சத்திரங்களை பார்க்கக் கூட்டம் கூடுவது இயல்பு. அவர்கள் ரசிகர்கள் தானே தவிர, கட்டுக்கோப்பான தொண்டர்கள் கிடையாது.
அவர்களை வைத்துக்கொண்டு ஒரு இயக்கத்தை பக்குவமாக நடத்த இயலாது. அந்த கூட்டம் வாக்காக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. மூன்றாவது அணி அமைக்கலாம், ஆனால் வெற்றி பெற இயலாது. தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மட்டுமே கிளைகள் தோறும் வலுவான கட்டமைப்பு உள்ளது.
வேறு கட்சிகள் கூட்டணி சேரலாமே தவிர, தனியாக நின்றோ, மூன்றாவது அணி அமைத்தோ வெற்றி பெற முடியாது. எடப்பாடி பழனிசாமி சொல்வது மட்டுமே கூட்டணியின் வேத வாக்கு. வேறு யாரின் கருத்தையும் பொருட்படுத்த முடியாது” என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.