• Wed. Apr 16th, 2025

24×7 Live News

Apdin News

எம்மைத்தவிர எவராலும் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது | ஜனாதிபதி அநுர

Byadmin

Apr 13, 2025


நாட்டில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு எமக்கு பல தசாப்தங்களுக்கு பின்னர் வாய்ப்பு கிட்டியுள்ளது.  நாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.எம்மைத் தவிர வேறு எவராலும் அதனை செய்ய முடியாது.  நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாக்கு பிடிக்கக்கூடிய தளம்பாத பொருளாதாரத்தை  உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ”வெற்றி நமதே- ஊர் எமதே” வெற்றிகரமான மக்கள் பேரணித்தொடர் கண்டி மஹியாவை பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

அமெரிக்காவினால் எடுக்கப்பட்ட வரிக்கொள்கை தீர்மானம் காரணமாக எமது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.நாம் சவால்களை எதிர்நோக்க வேண்டும். அமெரிக்காவின் தீர்வை வரிக்கொள்கை, அல்லது வேறு விதத்திலான பொருளாதார யுத்தம் அல்லது வேறு தொற்று நிலைமைகள் எமது பொருளாதாரத்துக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதிப்பு ஏற்படலாம்.

அதனால் நாம் என்ன செய்ய வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாக்கு பிடிக்ககூடிய தளம்பாத பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தேன். அது கிடைத்துள்ளது என எமக்கு அறிவிக்கப்பட்டது.

அது தொடர்பில் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் பற்றி திறைசேரியின் செயலாளரும் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்.அதேபோன்று நாம் சர்வகட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தோம்.

அமெரிக்காவினால் விதிக்கப்படும் வரி சுனாமிக்கு எமது நாடு பாதிக்காதவாறு நடவடிக்கை எடுப்போம். அதனை எதிர்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இரு தரப்புகள் தொடர்பில் நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். மீண்டும் நாட்டில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த பயணத்தையே எதிர்காலத்தில் நாம் முன்னெடுக்க வேண்டும். இதனை விட வேறு எந்த பயணத்தை முன்னெடுப்பது. எம்மை தவிர வேறு எவராலும் இதனை முன்னெடுக்க முடியும்.இந்த நாட்டின் எதிர்காலத்தினை பாதுகாப்பான பயணமாக மாற்றுவதற்கு நாடு பல தசாப்தங்களுக்கு பின்னர் விழித்துள்ளது என்றார்.

By admin