22
இரவு ஒன்பது மணி ரயிலுக்கு கொழும்பு போவதற்கென வெளியே தயாராகிக் கொண்டிருந்தாள் ஆரா.
எட்டு மணியைத் தாண்டியதும் கரனின் முச்சக்கரவண்டி வாசலில் வந்து நின்றது.
அவள் அவசரமாக எல்லாப் பொருட்களையும் எடுத்து வைத்துவிட்டு, மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள்.
ஒரு கையில் சூட்கேஸும், மறு கையில் துணிப் பை ஒன்றையும் சிரமத்தோடு சுமந்து வருவதைக் கண்ட கரன்,
அவளது ஒரு கையில் இருந்த சூட்கேஸை வாங்கி முச்சக்கரவண்டிக்குள் ஏற்றிவிட்டு,
ஆரா ஏறும்வரை காத்திருந்தான்.
அவள் ஏறி அமர்ந்துக்கொண்டதும் கிளிநொச்சி புகையிரத நிலையத்தை நோக்கிப் புறப்பட்டான்.
ஆரா முச்சக்கரவண்டியின் கரையோடு இருந்தபடி வீதியின் அழகையும் அதன் மாற்றங்களையும் ரசித்துக்கொண்டிருந்தாள்.
கனகபுரச் சந்தியில் முச்சக்கரவண்டி பொலிஸாரால் மறிக்கப்பட்டு, ஆவணங்கள் சோதனையிடப்பட்டன.
அருகே இராணுவச் சிப்பாய் ஒருவன் சந்திரன் பூங்காவைக் காட்டி,
“இது சிங்களவர்களுக்குச் சொந்தமான நிலம். ஆரம்பத்தில் ஏதோ ஒரு கட்டிடம் இருந்தது;
அதைப் புலிகள் அழித்துவிட்டார்கள்,” எனக் கூறிக்கொண்டிருந்தான்.
அவர்களும் உடைந்து கிடந்த செங்கல்லிலான அத்திவாரத்தைத் தடவி பிரமிப்பாகப் பார்த்துப் படமெடுத்துக்கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு என்ன தெரியும்
ஆனையிறவில் காமினியின் சிலையைக் காட்டி, நூற்றுக்கணக்கான புலிகளை ஏற்றிவந்த கவசவாகனத்தை அழித்த பெருவீரன் எனச் சிங்கள மக்களுக்கு சிப்பாய்கள் சொல்லுவார்களாம் என முன்பொருநாள் தந்தை சொன்னதும் ஆராவுக்கு நினைவில் வந்தது .
உண்மையில் புலிகள் மரங்களை நட்டு, அதை லெப்டினன் கேணல் சந்திரன் என்ற மாவீரரின் நினைவாக அவ்விடத்தை பூங்காவாக மாற்றினார்கள்.
அது மட்டுமல்லாது கரடி, மான், மரை, முயல், பன்றி, குதிரை, இன்னும் பல காட்டு விலங்குகளுடன் அதை ஒரு மிருகக்காட்சிசாலையாகவும் வைத்திருந்தார்கள் என தந்தை சொன்னது நினைவிருக்கிறது.
இப்போது கனகபுரச் சந்தி என்று சொல்லப்படும் சந்திரன் பூங்காவிற்கு பல கதைகள் உண்டு.
அது அவர்களுக்கு மனக்கசப்பான கதையாக இருக்கலாம்; ஆனால் அதுதான் உண்மை.
‘ஓயாத அலைகள்’ என்ற பெரும் வெற்றிச் சமரில் ஆயிரத்துக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டபோது,
அவர்களின் உடல்களை ஏற்றிவந்து இதே பூங்காவில்தான் மக்கள் பார்வைக்காக கொட்டிவிட்டிருந்தார்கள்.
பின் அவ் உடல்களை அரசிடம் கையளிக்க முற்பட்டபோது, அவற்றை ஏற்க மறுத்திருந்தது.
அது மட்டுமல்ல, தீச்சுவாலை ஆனையிறவுப் படை முகாம் அழிக்கப்பட்டபோதும்,
இங்குதான் அவர்கள் உடல்கள் வைக்கப்பட்டிருந்தது.
இது அவர்களுக்குத் தெரியாது.
ஆனால் ஒவ்வொரு நாளும் தண்ணீர் பிடித்து புல் வளர்க்கப் பாடுபடுகிறார்கள்.
அவர்கள் புல்லுக்குத் தண்ணீர் பிடிக்கிறார்களா? தங்கள் சகாக்களின் இரத்தத்தை கழுவுகிறார்களா? என நான் நினைப்பதுண்டு.
என்னதான் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து விகாரைகளையும் வெற்றிச் சின்னங்களையும் வைத்தாலும்,
எங்கள் நிலத்தின் கதைகள் என்றும் மாறாது.
அது அதுவாகவே இருக்குமென நினைத்துக்கொண்டாள்.
பொலிஸார் ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு “போகலாம்” என்றதும், கரன் முச்சக்கரவண்டியை ஓட்டத் தொடங்கினான்.
புகையிரத நிலையத்தைச் சென்றடைந்ததும், ஆரா கரனின் கையில் ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.
புகையிரத நிலைய ஒலிபெருக்கியில், “இன்னும் சிறிது நேரத்தில் இரவுத் தபால் புகையிரதம் மேடைக்கு வந்து சேரும்,” எனக் கூறப்பட்டது.
மக்கள் தங்களது கைப்பைகளை தூக்கியபடி புகையிரதத்தின் வருகைக்காக காத்திருந்தனர்.
புகையிரதம் மேடையை வந்தடைந்தது.
ஆரா இருக்கையைத் தேடி அமர்ந்துகொண்டாள்.
ஜன்னலின் வழியாக வந்த குளிர்காற்று அவளை நல்ல உறக்கத்திற்கு கொண்டு சென்றது.
“கச்சான், வடா!” என மாறி மாறி கூவியபடி சிலர் கடந்துபோயினர்.
அவள் அமைதியாக உறங்கிப்போனாள்.
சிறிது நேரத்தின் பின் யாரோ ஒரு கை அவளைத் தட்டி எழுப்புவது போல இருந்தது.
அவள் கண்ணைத் திறந்து பார்த்தாள்.
“சிறுநீரகம் செயலிழந்திருக்கிறது” எனக் கூறி பேப்பர் ஒன்றை நீட்டினார் முதியவர் ஒருவரார்.
அவள் அதைப் பார்க்காமல் ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு, போத்தலில் இருந்த நீரை எடுத்துக் குடித்தாள்.
புகையிரதம் கல்கமுவைத் தாண்டிப் பயணித்துக்கொண்டிருந்தது.
அருகில் இருந்த பெண்ணொருவர், “பிள்ளை, இதுகள் சும்மா ‘சிறுநீரகப் பிரச்சனை’, ‘இருதய அறுவைச் சிகிச்சை’ என்று அடிக்கடி வந்துக்கொண்டிருப்பார்கள்.
இதுகளுக்குப் போய் இப்படி ஆயிரம் ஆயிரமாய் காசுகளை எடுத்துக் கொடுக்காதீங்க.
உங்க அப்பா அம்மா இந்தக் காசை உழைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என நினைச்சுப் பாருங்க,” என்றாள்.
காசு கொடுக்க மனம் வரவில்லை என்றாள் ஆரா.
எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
ஆனாலும் அவளது மனதுக்கு அந்தப் பெண் சொன்ன வார்த்தைகள் பாரமாக இருந்தது.
“காசு இருந்தா அவர்கள் ஏன் பொய்சொல்லணும்?
ஏன் இப்படி எல்லோரிடமும் பேப்பரை நீட்டிக் காசு கேக்கப் போறார்கள்?” என நினைத்துக்கொண்டிருந்தாள்.
அப்போதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது —
தான் கொடுத்த ஆயிரம் ரூபாயை!
இருக்கையை விட்டு எழுந்து அந்த முதியவர் போன திசையை நோக்கி நடந்தாள்.
நான்கு பெட்டிகள் தாண்டிப் போனபோது, அந்த முதியவர் இறங்குவதற்காக நின்றுகொண்டிருந்தார்.
“ஐயா, இந்த ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு, நான் தந்த ஆயிரம் ரூபாயைத் தாருங்கள்,” எனக் கேட்டாள்.
முதியவர் எல்லாத் தாள்களையும் எடுத்து நீட்டினார்.
அதில் எரிந்துபோன அடையாளத்தோடிருந்த அந்த ஆயிரம் ரூபாயை அவள் எடுத்துக்கொண்டு தன் இருக்கைக்குச் சென்றாள்.
அருகில் இருந்த பெண், “அப்படின்னா என்ன பிள்ளை, அந்த ஆயிரத்துல இருக்கது காட்டு பாப்போம்,” என்றாள்.
ஆரா அந்த ஆயிரத்தை எடுத்து காண்பித்தாள்.
அதன் ஒரு பகுதி எரிந்துபோயிருந்தது.
“சரி, எரிந்துபோன காசுதானே? அப்படியே போகட்டும். ஏன் அதை திரும்ப வாங்கி வந்தாய்?
செல்லாத காசை வைச்சு என்ன செய்யப் போற?” எனக் கேட்டாள் ஆரா
“அந்த எரிந்துபோன காசு செல்லாது தான்,
ஆனால் அதற்கெனப் பெரிய கதையுண்டு,” என அந்த ஆயிரம் ரூபாய் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.
அப்ப நான் சாதாரண தரத்தில் படிச்சுக்கொண்டிருந்தேன்.
காலையில் பள்ளிக்கூடம் போவது, மாலையில் தனியார் கல்வி நிலையத்திற்குச் செல்வதும் வழமை.
அப்பா பக்கத்தில் உள்ள பரமு கடையில் வேலை செய்துதான் வீட்டுச் செலவுகளையும் எங்களுடைய படிப்புச் செலவுகளையும் பார்த்தவர்.
ஒருநாள் தனியார் கல்வி நிலையக் காசுக் கொடுக்கும்படி ஆயிரம் ரூபாயை தந்தார்.
நான் படிச்சுக்கொண்டிருந்த இடத்திலேயே அந்தக் காசை வைச்சுட்டு மறந்து போயிட்டேன்.
அது காத்துக்குப் பறந்து போயிட்டது.
எல்லா இடத்திலும் தேடியும் காசு கிடைக்கல.
அப்பாட்டைச் சொல்லவும் அவர் தன்னட்டையும் காசில்லை எனச் சொல்லிவிட்டார்.
இரண்டு நாளைக்கு பிறகு முத்தம் கூட்டிக் குவிக்கும்போது அந்தக் காசு குப்பையோடு எரிஞ்சது.
பாதி எரியாமலிருந்தது, பாதி எரிஞ்சிருந்தது.
அதை எடுத்திட்டேன்.
எரிஞ்ச காசை வைச்சு என்ன செய்ய?
ஏலும்கம்பாசுக்குள் வைச்சிருந்தேன்.
அப்பதான் என் தோழி ஒருத்தி சொன்னாள் —
“இதே போல ஆயிரம் ரூபாய் தாள் புத்தகக் கடையில் விக்குது.
அதை வாங்கி எரிஞ்சுபோன மிச்சப் பகுதியை ஒட்டிப்போட்டு பாடசாலைக் கந்தீனில் கொடுத்து
ஐநூறு, ஐநூறாய் மாற்றித் தரும்படி கேப்பா.
அவர் பார்க்காமலே தந்திடுவார்,” என்று.
நானும் பயத்தோடு “சரி” என்று சம்மதித்து அப்படியே செய்தேன்.
அந்த ஐயாவும் காசை மாற்றித் தந்துவிட்டார்.
ஆனால் அந்தக் காசுதான் அவரது கௌரவத்தையும் மரியாதையையும் இழக்கச் செய்யும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.
அவர் அந்தக் காசைக்கொண்டு போய் பொருட்கள் வாங்கும்போது,
பரமு கடை முதலாளி அந்த வயதானவரை அசிங்கமாகப் பேசி அவமானப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் அப்பாவுக்கு அவரைத் தெரியும் என்பதனால்,
அந்த ஆயிரத்திற்குப் பதிலாக தன்னிடம் இருந்த ஆயிரத்தை கொடுத்து சமாதானப்படுத்தி வழியனுப்பிவிட்டார்.
ஆனால் அந்த வயதானவர் மனமுடைந்துபோய் கிணற்றில் குதித்து இறந்துவிட்டார்.
அப்பா அந்த ஆயிரம் ரூபாயைக் காட்டி,
“இதனால்தான் அந்த ஐயா செத்தார்,” என்றபோது துடித்துப்போய்விட்டேன்.
என்னை அறியாமல் செய்த பிழை இன்னொருவரின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்திருக்கிறேன் என நினைத்து நினைத்து அழுதுகொண்டே தூங்கிப்போவேன்.
ஒருநாள் அப்பாவிடம் நிகழ்ந்தவற்றைச் சொல்லி,
அந்த முதியவர் வீட்டாரிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்று எல்லாவற்றையும் சொன்னேன்.
அப்பா, “வேண்டாம். கடவுளிடமும் அந்த முதியவரிடமும் மன்னிப்புக் கேள்.
இதோ அந்த ஆயிரம் ரூபாய். இது உன் கைகளில் இருக்கட்டும்.
உன்னிடம் இல்லை என யார் கேட்டு வருகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் உன்னிடம் இருப்பதை கொடு.
நீ செய்த தவறு மன்னிக்கப்படும்,” எனச் சொல்லி அந்த ஆயிரத்தை என்னிடம் தந்தார்.
இப்போ அது என் கைகளில் இருக்கிறது.
ஆனால் எம் தந்தை எம்மோடு இல்லை.
நன்றாக உழைக்கிறேன், கொடுக்கிறேன், ஆனாலும் இன்றுவரை என்னை நான் செய்த தவறை மன்னிக்க முடியவில்லை,” என்றாள்.
அருகிலிருந்த பெண் ஆராவின் கைகளை இறுகப் பற்றிப்பிடித்தபடி தேம்பித் தேம்பி அழுதாள்.
புகையிரதம் கொழும்பைச் சென்றடைந்தது.
ஆரா அந்தப் பெண்ணை ஆரத்தழுவிவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினாள்.
– காவலூர் அகிலன்