• Mon. Sep 22nd, 2025

24×7 Live News

Apdin News

எரிவாயு திட்டங்களில் அரசின் நிலைப்பாடு என்ன? – அக்.2-ல் உண்ணாவிரதம் அறிவித்தார் பிஆர் பாண்டியன் | TN Govt’s Should Clarified Position on Gas Projects: PR Pandiyan Demand

Byadmin

Sep 22, 2025


திருவாரூர்: ஷேல், மீத்தேன், எரிவாயு திட்டங்கள் குறித்து தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்த கோரி வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் மோகன சந்திரனிடம் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தியும், ஓஎன்ஜிசி-ஐ கண்டித்தும், பி ஆர் பாண்டியன் தலைமையில் முழக்கங்களை எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது, “காவிரி டெல்டாவில் மீத்தேன், ஷேல், எரிவாயு, திட்டங்கள் தொடர்பாக ஓஎன்ஜிசியின் நிகழாண்டு அறிக்கையில், காவிரி படுகையில் மீத்தேன் திட்டம் ஷேல் எரிவாயுத் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் பெரியகுடி, அறிவரசநல்லூர், ஷேல் எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மன்னார்குடி மீத்தேன் திட்டம் நீதிமன்ற தலையீடு காரணமாக நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக அனுமதி கிடையாது என பதிலளிக்காமல், அதனை நிலுவையில் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, மீத்தேன், ஷேல், எரிவாயு திட்டங்கள் குறித்து தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

இஸ்மாயில் கமிட்டி அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும், ஓஎன்ஜிசி-ஐ கண்டித்தும் வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.



By admin